மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
ஒரு மனிதரை இன்னொரு மனிதர் அவர் இல்லாத நேரத்தில் புகழ்ந்து கூறுவது அனுமதிக்கப்பட்டிருப்பது போல் அவருடைய முகத்திற்கு நேரே புகழ்ந்து கூறுவதும் ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு இரண்டு நிபந்தனைகள் இடப்படுகின்றன.
ஒன்று – புகழ்பவர்
புகழப்படுபவரிடம்
இருந்து தன்லாபத்தை எதிர் பார்த்து புகழக் கூடாது.
இரண்டு – புகழ்பவர்
புகழும் காரணத்தினால் புகழப்படுபவருக்கு அல்லாஹ்வை மறந்த தன்மைகளோ, தலைக்கனமோ, பெருமையோ அல்லது இது போன்ற இகழப்பட்ட குணங்களோ, எண்ணங்களோ ஏற்பட்டு விடக் கூடாது.
இவ்விரண்டு நிபந்தனைகளிலும் உள்ள நிலைகள் இல்லையெனில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை முகம் நேரே புகழ்வதில் எவ்வித பிழையோ, பிரச்சினையோ கிடையாது. அது ஆகுமாக்கப்பட்டதேயாகும். ஷரீஅத்தின் ஆட்சியாளர்களான அல்லாஹுத்தஆலாவினதும், அவனுடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினாலும் கூறப்பட்டதேயாகும்.
அல்லாஹுத்தஆலா திருமறையில்
وَإِنَّكَ
لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
(நபியே!) நீங்கள் மாபெரும் நற்குணத்தில் இருக்கின்றீர்கள்.
(சூரதுல் கலம் வசனம் – 04)
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
(நபியே!) நாங்கள் உங்களை அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே
அனுப்பியுள்ளோம்.
(சூரதுல் அன்பியா வசனம் – 107)
இவ்வசனங்களில் அல்லாஹுத் தஆலா நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களை முகம் நேரே செவ்வையாக புகழ்ந்து கூறியிருப்பதை காணலாம்.
அதுமட்டுமன்றி கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூட தனது எத்தனையோ திருத்தோழர்கள் முகம் நேரே புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். நான் அவற்றில் இரண்டை இங்கே குறிப்பிடுகின்றேன்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،
قَالَ: صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أُحُدٍ وَمَعَهُ أَبُو
بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، فَرَجَفَ بِهِمْ، فَضَرَبَهُ بِرِجْلِهِ، قَالَ: «اثْبُتْ
أُحُدُ فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ، أَوْ شَهِيدَانِ»
அனஸ் இப்னு மாலிக் றழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் – ஒரு முறை ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் தம்முடன் அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு, உமர் ரழியல்லாஹு அன்ஹு, உத்மான் றழியல்லாஹு அன்ஹு ஆகியோர்
இருக்க உஹத் மலையின் மேல் ஏறினார்கள். அப்போது உஹத் மலை துளும்பியது உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள்
தமது திருப்பாதத்தால் உஹது மலையின் மீது அடித்து “ஏய் உஹதே (நிறுத்து)” தரிபடு! உன்மீது ஒரு நபியும், சித்தீகும், இரண்டு ஷஹீதுகளும் இருக்கின்றார்கள்.”
(ஸஹீஹுல் புஹாரீ ஹதீஸ் எண் – 3686)
இங்கு நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அன்னவர்கள்
“சித்தீக்” என்று அபூபக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும்
“இரண்டு ஷஹீதுகள் என்று உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும், உத்மான் ரழியல்லாஹு அன்ஹு
அவர்களையும்” முகம் நேரே புகழ்ந்து குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பு – இரண்டு ஷஹீதுகள் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும்
உத்மான் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களையும் குறிப்பிட்டுக் கூறியது
மறைவான தீர்க்க தரிசனமான ஒரு சொல்லாகும். ஏனெனில் அவ்விருவரும் இஸ்லாத்திற்காகவே ஷஹீத் மரணம் ஏய்தினார்கள். இதிலிருந்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களுக்கு மறைவான விடயங்களின் ஞானம் இருந்ததென்பது விளங்குகின்றது.
وَقَالَ
النّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «أَنْتَ مِنِّي وَأَنَا مِنْكَ»
நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள் – (அலியே!) நீர் என்னில் நின்றுமுள்ளவர். நான் உம்மில் நின்றுமுள்ளவன்.
(ஸஹீஹுல்
புகாரீ, ஹதீது எண் – 4251)
மேற்கூறப்பட்ட அனைத்து செய்திகளும் ஒருவர் இன்னொருவரை அவரின் முகத்திற்கு நேரே புகழ்வது ஆகுமென்பது பற்றி எடுத்துக் காட்டுகின்றன.
முகம் நேரே புகழ்வது கூடாது, பிழையானது என்றிருந்தால் அல்லாஹ்தஆலா நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களையும் முகம் நேரே புகழ்ந்திருக்கமாட்டான். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களும் தங்களின் தோழர்களை முகம் நேரே புகழ்ந்திருக்கமாட்டார்கள்.
எனவே ஒருவரை இன்னொருவர் முகம் நேரே புகழ்வதில் எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட இரண்டு நிபந்தனைகளும் அவ்விருவரிலும் இருக்கக் கூடாது. அப்படி இருந்து ஒருவர் இன்னொருவரை புகழ்ந்தால் அது கூடாத ஹறாமான செயலாகும்.
அல்லாஹ்விலோ, கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களிலோ, அவர்களின் திருத்தோழர்களிலோ அவ்விரு நிபந்தனைகளில் உள்ள நிலைகள் கிடையவே கிடையாது. அது அவர்களுக்கு தேவையானதும் இல்லை. அதனால் அல்லாஹுத்தஆலாவும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களைப் புகழ்ந்தான். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களும் தன் திருத்தோழர்களைப் புகழ்ந்தார்கள்.
ஆனால் மற்றவர்களின் விடயத்தில் அவ்விரண்டு நிபந்தனைகளும் கவனிக்கப்படும்.
உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள்! நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள்! சத்தியத்தை நிலைநாட்ட எழுந்து வாருங்கள்! அசத்தியத்தை தவிடு பொடியாக்க கைகோருங்கள்! அல்லாஹ் தஆலா ஈருலகிலும் அவனது விடாமழை என்ற பேரருளை உங்கள் மீது கொட்டுவானாக!





