Feb 4, 2014

ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களின் 70வது அகவை தின சிறப்புக்கவிதை

மௌலவீ  HMM. இப்றாஹீம் நத்வீ
எழுபதிலும் இலங்கும் ஞானத்தாரை!

கருணை நபியின் முன்னே

கவிஞர் ஹஸ்ஸான்,

கவிஞர் கஃப் போன்றோர்

நபீ புகழ் பாடியது

முகத்துதியல்ல!

அது வணக்கம்!

அதே போல் –

தவ்ஹீத் தோப்பில் மலர்ந்த

இந்த இப்றாஹீம் நத்வியும்

தலைவர் பற்றிப் பாடுவது

முகத்துதியல்ல!

அது அகத்துதி!



நண்பராகி, அன்பராகி

தலைவராகி, ஷெய்காகி

எம் தேசத்தில் பிரகாசிக்கும்

நீங்கள்தான்

இந் நூற்றாண்டின் மெய்ஞானி!



அப்துர்ரஊப் என்றால்

அறபுக்கலாபீடங்கள் மட்டுமல்ல,

பல்கலைக்கழகங்களும் புரிந்து கொள்ளும்!

காரணம் –

அவற்றிலுள்ள நூல்களுக்கு

உயிர் கொடுத்தவர் நீங்கள்!



உங்கள் வார்த்தைகள்

கல் வெட்டுக்கள்!

உங்கள் பேச்சு

இதயத்தில் பதிந்த பசுமரத்தாணி!



உங்கள் பார்வை –

மின்னல் போன்றது.

உங்கள் உரைகள்

எம்மிதயத்தின் இரைகள்.

நாம் கண்டவர்களில்

நீங்கள் மாணிக்கம்!

தரீக்காக்களின் ஷெய்குமார்களுக்கு

நீங்கள் உதாரண புருசர்!



அட்டகாசங்களும், அதிகாரங்களும்

இன்று உங்களைக்கண்டு

அஞ்சுகின்றன!

இருந்த இடத்தில் இருந்தவாறே

நீங்கள் செய்யும் சேவைகள்

எமது சமூகத்தின் தேவைகள்!



உங்கள் குத்பியத்தால்

இமயம் போல் எழுந்துவரும்

பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளியை

ஓட்டைப்பள்ளி என்றவர்ககள் –

இன்று வேட்டைப்பற்கள் தெரிய

வாய் பிழந்நு பார்க்கின்றனர்.

நெல்லடுக்க நினைத்தவர்கள்

செல்லாக்காசுகளாகிவிட்டனர்.

கொலை செய்யத் துணிந்தவர்கள்

தலை உடைந்து போயினர்.



நீங்கள் அடைந்த துன்பங்கள்

இன்று இன்பங்களாகிவிட்டன.

இனி நீங்கள் பேசத்தேவையில்லை.

உங்கள் சீடிகள் பேசுகின்றன.

உங்கள் ஆறாம் விரல்

கூரிய வாளை மிகைத்துவிட்டது.

உங்கள் குரலோசை

இன்றும் கணீரென்றே ஒலிக்கிறது.

கறனிகளின் ஒப்பாரிக்கு ஆப்பு வைத்தவர்

நீங்கள் ஒருவர்தான்!



உங்கள் அகவை எழுபதாயினும்

உங்கள் உள்ளம் –

இருபத்தேழாகவேயுள்ளது!

உங்களைத்தாழ்த்த நினைத்தவர்கள்

இன்று கீழே விழுந்துவிட்டனர்.

நீங்கள் இமயத்தில் இருக்கிறீர்.

அவர்கள் பாதாளத்தில் கிடக்கின்றனர்.

நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் –

உங்கள் தூரநோக்குச் சிந்தனையை –

உலகறியச் செய்துவட்டது.

விட்டுக் கொடுக்கும் உங்கள் மனப்பாங்கை –

வட்டுக்கோட்டைப்பிரபா

பாடம் படித்திருக்கவேண்டும்.

அகிலத்துக்கு நீங்கள் –

கையளித்த நூல்கள் –

விலைமதிப்பற்ற இரத்தினங்கள்

உங்கள் எழுத்துக்களை

கம்பியுட்டரில் அல்ல லவ்ஹில் மலக்குகள் பதிந்துள்ளனர்.

உலகம் அழியலாம். ஆனால் –

அவை அழியாதவை!

ஆன்மீக அறிஞன் மரணிப்பதில்லை.

அதே போல் அவன் எழுத்துக்களும்

அழிந்துவிடுவதில்லை!



உந்துலிஸில் மலர்ந்த ஷெய்குல் அக்பரை

நாங்கள் நேரில் காணவில்லை.

ஆனால் அவர்களை –

உங்களில்தான் நாம் பார்க்கிறோம்.

அண்ணல் நபியை

இப்னு அப்தில்லாஹ்வாகவே

காபிர்கள் கண்டனர்.

“றஸூலுல்லாஹ்” என்று காணவில்லை

அதேபோல் –

உங்களைப் பலர்

அப்துர்ரஊப் என்றே பார்க்கின்றனர்.

இறை நேசராய் பார்க்கவில்லை.

அதனால் உங்கள் அற்புதம் –

அவர்கள் கண்களைக குருடாக்கிவிட்டது.

ஆனால் நாங்கள்

உங்களின் அற்புதங்களைக் கண்டோம்.

அவை எங்கள் இதயக் கோட்டைக்குள்

பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

திறந்தால் அசத்தியர்கள்

தாங்கமுடியாமல்

செத்துப் போவார்கள்.

சத்தியரே மிஸ்பாஹீ

உங்களைப்பற்றிய –

அருள் வாசகங்கள்

பல்லாயிரம் பக்கங்களுடன்

என் நெஞ்சில் நிறைந்துள்ளன.

மிஸ்பாஹீ எனும் ஊற்றிலிருந்து

சில துளிகளையே

கவிதையாய்த் தெளித்தேன்

நீங்கள் வாழ்க!

உங்கள் குடும்பம் வாழ்க!!

உங்கள் உண்மைத்தோழர் வாழ்க!!!

வஸ்ஸலாம்.