Oct 21, 2015

புனித ஆஷூறாவின் தத்துவங்களை அறிந்து செயற்படுவோம்.

மௌலவி H.M.M. இப்றாஹீம் நத்வீ 

சங்கையாக்கப்பட்ட மாதங்களில் முஹர்றம் மாதமும் ஒன்றாகும். இம்மாதத்தின் மாண்பு அளப்பெரியதும் அதிசயமிக்கதுமாகும். இம் மாதத்தைக் கொண்டு இஸ்லாமிய புதுவருடம் கணிக்கப்படுகிறது.

தற்போதைய ஹிஜ்ரீ ஆண்டு 1437 ஆகும். இம்மாதத்தின் பத்தாம் நாள் ஆஷூறா தினம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முன்தினம் “தாஷூஆ”ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டுள்ளது. 

இம்மாத பத்தாம்நாள் “ஆஷூறா” தினத்தில் உலகில் நடந்த அற்புதங்கள் அனந்தம். சிலதை மட்டும் இங்கு தருகிறேன். 
  1. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்றுதான் இறைவனால் மன்னிக்கப்பட்டார்கள். 
  2. இன்றுதான் நபீ நூஹ்(அலை) அவர்களின் கப்பல் தூபான் வௌ்ளப்பெருக்கிலிருந்து காப்பற்றப்பட்டு ஜூதிமலையில் தரைதட்டியது. 
  3. இன்றுதான் நபீ மூஸா(அலை) பிறந்தார்கள். 
  4. இன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் தீக்கிடங்கில் எறியப்பட்ட நபீ இப்றாஹீம்(அலை) அவர்கள் காப்பற்றப்பட்டார்கள். 
  5. இன்றுதான் நபீ யூனுஸ்(அலை) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது. 
  6. இன்றுதான் நபீ ஐயூப்(அலை) அவர்களின் துன்பம் நீங்கீயது. 
  7. இன்றுதான் நபீ யூசூபின் பிரிவால் தேய்ந்திருந்த பார்வை நபீ யஃகூப்(அலை) அவர்களுக்கு கிடைத்தது. 
  8. இன்றுதான் பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் (அலை) அதிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 
  9. இன்றுதான் உலகம் படைக்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. 
  10. இன்றுதான் உலகில் முதன்முதலில் மழை பெய்தது. 
  11. இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு முதலில் இறங்கியது. 
  12. தூபான் வௌ்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. 
  13. இன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது. 
  14. இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) பிறந்தார்கள். 
  15. இன்றுதான் பிர்அவ்னும் அவனது படையினரும் தோற்கடிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தனர். 
  16. இன்று தான் நபீ பேரர் ஷஹீதே கர்பலா செய்யிதுனா ஹழ்ரத் ஹூஸைன் (றழீ) அவர்களும் அஹ்லுபைத்துக்களில் பலரும் கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டனர்
நல்லமல்கள்

ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு நபீ (ஸல்) பேரர்களான ஹுஸைன் (றழீ) ஹஸன் (றழீ) பாத்திமா நாயகி, மற்றும் அஹ்லுபைத்தினருக்காக அன்று முதல் இன்று வரை யாஸீன், கத்ம் ஓதப்பட்டு வருகின்றது. இவ்வழக்கம் பிறநாடுகளில் குறிப்பாக இலங்கையில் பல பாகங்களிலும் குறிப்பாக காத்தான்குடியிலும் அதில் காத்தான்குடி 05 இல் அமைந்துள்ள பத்ரிய்யஹ் ஜூம்அஹ் பள்ளிவாயல் ஜமாஅத்தினரிடத்திலும் நடந்து வருகின்றது. ஆனால் சமீபத்தில் ஊரில் தோன்றிய வஹ்ஹாபிய கொள்கையுடையவர்களால் இப்புனித வழக்கம் “பித்அத்” என்றும் “ஷிர்க்” மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றது. 

மேற் குறித்த உலக வரலாற்று நிகழ்வுகள் நடந்த ஆஷூறா தினம் முஸ்லிம்களின் விஷேட தினமாகும். 

முஸ்லிம்கள் இந் நாளைச் சாதாரண நாளாகக் கணித்து வீணாகக் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், சலவாத் சொல்லுதல், திக்ர், பிக்ர் செய்தல் நபீ (ஸல்) அவர்களினதும் அஹ்லுபைத்தினரினதும், சஹாபாக்களினதும் வீர வரலாற்றுக்களை வாசித்தல், தியானம், தியாகம், தான தர்மம், தாய் தந்தை, உறவினர், நண்பர்கள், ஷெய்குமார்கள் வலீமார்கள் ஆகியோரின் கப்றுகளை ஸியாரத் செய்தல் போன்ற நல்ல விடயங்களில் ஈடுபட வேண்டும். 

நோன்பு 

ஆஷூறா நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அது கடந்த வருடத்தின் குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையுமென்று நபிகட்கரசர் நவின்றார்கள். 

றமழான் மாதத்தில் நோற்கத்தவறிய “களா” நோன்புள்ளவனும் நேர்ச்சை நோன்புள்ளவனும் “தாஷூஆ, ஆஷூறா” ஒன்பதாம் பத்தாம் தினங்களில் தன் மீதுள்ள களா அல்லது ​நேர்ச்சை நோன்பை நோற்றால் அவர் நோற்ற நோன்பு நிறைவேறுவதுடன் இவ்விரு சுன்னத்தான நோன்புகளும் கிடைக்கும். ஆனால் நிய்யத் வைப்பவர் பர்ழான களா நோன்பென்றும்/நேர்ச்சை நோன்பு என்று நிய்யத் வைக்க வேண்டும். 

கழா அல்லது நேர்ச்சை நோன்பு இல்லாதவர்கள் “தாஷூஆ, ஆஷூறா” நோன்பு என்று நிய்யத் வைக்க வேண்டும். 

“ஆஷூறா” தினத்தில் மனிதர்கள் நோன்பு நோற்பது போல் மிருகங்களும், பூச்சிபுளுக்களும் நோன்பு நோற்கின்றன. 

ஆஷூறா தினத்தில் தனது குடும்பத்தவர்களையும் நண்பர் உறவினர்களையும் பேணி நடந்து உதவிகள் செய்தால் அவனுக்கு அல்லாஹ் அருள் நிறைந்த வாழ்வளிக்கின்றான் அவ்வருடம் முழுவதும் அவனுக்கு எண்ணற்ற அருள் புரிகின்றான் என்றும் நபீ(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். 

ஐம்பது ஆண்டுகளாக இவ்விடயத்தை நாங்கள் பரீட்சித்து வந்துள்ளோம். எவ்வித மாற்றமுமின்றி அருள் பெற்று வருகின்றோம். என்று சுப்யான் அத் தௌரி (றஹ்) அவர்கள் நவின்றதாக அல் பறகத் எனும் நூலில் உள்ளது. 

குளித்தல் 

ஆஷூறா தினத்தில் குளித்து சுத்தமாக இருப்பின் மவ்துடைய வருத்தம் தவிர அவ்வருடத்தில் வேறு நோய்கள் ஏற்படாது. 

தொழுகை 

இத்தினத்தில் நான்கு றக்அத்துக்கள் தொழுவது ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா ஸூறத் ஒரு தரமும் ஸூறதுல் இஹ்லாஸ் பதினொரு தரமும் ஓதி தொழுகையை முடித்தால்அவனது ஐம்பது வருட பாவங்களைஇறைவன் மன்னிப்பதுடன் ஒளியினால் ஒரு மின்பர் மேடையும் அமைக்கின்றான். 

இம் மாதத்தின் ஏனைய நாட்கள் 

இம் மாதத்தின் முதல் நாள் இஸ்லாமிய புது வருடத்தின் முதல் நாள் இந் நாள் அறபுலக மன்னர்களிடம் அதி விஷேட நாளாகும். அவர்கள் இந் நாளில் புத்தாடையணிந்து விஷேட உணவுண்டு மகிழ்வுடன் நாட்டு மக்களுக்கும் உணவு படைத்து உதவும் வழக்கம் அன்றும் இன்றும் உள்ளது. 

இம் மாதத்தின் 4ம் நாள் நஜ்றான் நஸாறாக்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நாள். 

இம் மாதத்தில் 7ம் நாள் நபீ யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியேறிய நாள் 

இம் மாதத்தில் 17ம் நாள் உஹத் யுத்தம் நடைபெற்றது. அதில் நபீ(ஸல்) அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா (றழீ) அவர்கள் கொலை செய்யப்பட்டு ஷஹீதானார்கள். 

இம் மாதம் இருபத்தைந்தாம் நாள் முதல் மாதம் முடியும் வரை “நஹ்ஸ்” உடைய (பறகத் குறைந்த) நாள்களென்று சொல்லப்படுகின்றன. 

இந் நாட்களில் திருமணம் செய்தல், வீடு கட்டுதல், வியாபாரம் போன்ற நற்காரியங்களை ஆரம்பித்தல் பொருத்தமற்றவை என்பதை ஆய்வு நிபுணர்களின் கருத்துக்களாகும். 

இந்நாட்களில்தான் ஆத், தமூத் கூட்டத்தினர் பயங்கர சோதனை மூலம் அழிக்கப்பட்ட வரலாற்றுகள் பகிர்கின்றன. 

எனவே, புனித தாசூஆ, ஆஷூறா தினங்களில் நோன்பு நோற்று நல்லமல்கள் புரிந்து நல்லடியார்களாகுவோமாக!