Jan 23, 2016

றஸூல்மார் திலகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் போல் வலீமார் திலகம் “குத்புல் அக்தாப்”, கௌதுல் அஃழம்” ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்!

- மௌலவி – HMM. இப்றாஹீம் நத்வீ அவர்கள்-
தொடர் -- 01

வலீ என்றால் யார்? 
“வலீ” என்றால் அதிகாரி என்று பொருளாகும். இதன் பன்மைச் சொல் “அவ்லியாஉ” (அதிகாரிகள்) என்பதாகும். இதன்படி ‘வலியுல்லாஹ்’ என்றால் அல்லாஹ்வின் அதிகாரி என்றும் “அவ்லியாஉல்லாஹ்” என்றால் அல்லாஹ்வின் அதிகாரிகள் என்றும் பொருள் வரும். 

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதாயின் அப்பெண்ணின் தந்தை / சிறிய – மூத்த தந்தையர் / சகோதரன் வலீகாரன் ஆகின்றான். இவனே அப்பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரியாகின்றான். 

வலீ என்பவரின் அதிகாரம் எது? 
இதன்படி “வலியுல்லாஹ்” அல்லாஹ்வின் அதிகாரி என்பவர் எதற்கு அதிகாரம் வழங்கப்பட்டவர் என்ற கேள்வி எழுகின்றது. 

இதற்கு விடை சொல்வதாயின் அவர்களைப் பற்றி “வலீ” அதிகாரி “அவ்லியா” அதிகாரிகள் என்று இறைவன் பொதுவாகவே சொல்லியுள்ளதால் அனைத்து விடயங்களுக்கும் இறைவனின் அதிகாரிகளாகவே அவர்கள் திகழ்கிறார்கள். மாறாக குறித்த ஒரு சில விடயங்களுக்கு மட்டும் அவர்கள் அதிகாரிகளல்லர். அவர்கள் எதையும் ஆக்கவும், அழிக்கவும், கொடுக்கவும், எடுக்கவும் அடியார்கள் கேட்கும் தேவைகளை இறைவனிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்கள் மொத்தமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார்கள். 
எதைச் செய்வதற்கும் அவர்களுக்கு பயமோ – கவலையோ ஏற்படுவதில்லை. 

 கறாமத் 

றஸூல்மார், நபீமார்களுக்கு வல்ல அல்லாஹ் “முஃஜிஸத்” என்ற அற்புதத்தைக் கொடுத்தான் அதைக் கொண்டு அவர்கள் “ரிஸாலத், நுபுவ்வத்” என்பவற்றை நிலைநிறுத்தினார்கள். 

அதேபோல் வலீமார்களுக்கு இறைவன் “கறாமத்” என்ற அற்புதத்தைக் கொடுத்தான். அதைக் கொண்டு அவர்கள் “விலாயத்” என்பதை உலகில் நிறுவினார்கள். 

நபீமார், றஸூல்மாரிலிருந்து அற்புதம் வெளியாகும்போது அதை “முஃஜிஸத்” என்றும் வலீமார்களிலிருந்து வெளியாகும் போது அதை “கறாமத்” என்று அழைக்கப்படுகிறது. 

இரண்டின் மூலமாக வெளியாகும் செயல்கள் ஒன்றுதான். ஆயினும் நபீமார், வலீமார் என்று பிரித்துக் காட்டுவதற்காக முஃஜிஸத், கறாமத் என்று சொல்லப்பட்டுள்ளது. 

வலீமார் பல பிரிவினர் 

“அவ்லியாஉல்லாஹ்” அனைவரும் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற இறைநேசர்களாயினும் அவர்களில் பல பிரிவினர் உள்ளனர். 

நுகபாஉ, நுஜபாஉ, புதலாஉ, அக்யார், உறபாஉ, அன்வார், அவ்தாத், முக்தாறூன், கௌது, குத்பு என்று பல பிரிவினராக வலீமார்கள் அழைக்கப்படுகின்றனர். 

கௌது / குத்பு 

உலகில் தினமும் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் வலீமார்கள் இருந்து கொண்டேயிருப்பர். அவர்கள் அனைவருக்கும் தலைவராக “குத்பு” என்ற அதிபர் இருந்து கொண்டேயிருப்பார். அவருக்கே “கௌது” என்றும் சொல்லப்படும். அவர் உலகைப் பிரிந்தால் அவரின் இடத்துக்கு இன்னொருவர் நியமிக்கப்படுவார். 

“குத்பு” என்பவர் காப் மலை போன்றவர். காப் மலை என்பதே உலக மலைகளில் மிகப் பெரிதாகக் கணிக்கப்படுகிறது. அந்த மலையிலிருந்தே ஏனைய மலைகளை நோக்க முடியும். அந்த மலைக்கு நபிமார்களும், அவ்லியாக்களும் சென்று வந்துள்ளனர். 

“காப்” என்ற மலையிலிருந்துதான் ஏனைய மலைகளுக்குத் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது. மலைகளில் ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின் அது காப் மலையிலிருந்தே ஏற்படுகிறது. 

மலைகள் நாம் பார்ப்பதற்கு உலகின் பல திசைகளில் – இடங்களில் காணப்பட்டாலும் அவற்றினிடையே ஒன்றுக்​கொன்று தொடர்புடையதாகவே உள்ளன. காப் மலையிலிருந்தே சொர்க்கத்திலிருந்து ஊற்றெடுக்கும் நதிகள், கடல்கள் ஆறுகள் அனைத்தும் ஏனைய மலைகளுக்கும் வழங்கப்படுகின்றன. 
மலைகள் பூமிக்கு முளைகள் போல் யதார்த்தத்தில் அவ்லியாக்களே இந்த பூமிக்கு முளைகளாக இருக்கின்றனர். 

மலைகளுக்கு காப் மலை தலைமை மலைபோல் வலீமார்களுக்கு குத்பு / கௌது என்பவரே அதிபராக இருக்கிறார்கள். அவர்களிலிருந்தே உலகில்வாழ் வலீமார்கள் அதிகாரம் பெறுகிறார்கள். 

காப் மலை கொண்டே ஏனைய மலைகள் தொடர்புடையதாக இருப்பது போல் குத்பைக் கொண்டே ஏனைய வலீமார்கள் நிலைபெற்றுள்ளனர். அத்தகு குத்புகளில் எவ்வுலகிலும் மாண்பொளிரும் குத்பே எங்கள் கௌது நாயகம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழீ) அவர்களாகும். 

ஜனனம் 

குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் வலீமார்களின் பேரரசர் ஹழ்றத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழீ) அவர்கள் அல் முக்ததா பிஅம்ரில்லாஹ் எனும் கலீபஹ்வின் ஆட்சி காலத்தில் ஹிஜ்ரீ 470 புனித றமழான் தலைப்பிறையன்று (கி.பி. 1077 – 1078) ஜீலானீ எனும் நகரில் நீப் எனும் கிராமத்தில் உதயமானார்கள். 

பெற்றோர் 

அன்னவர்களின் தந்தை ஸெய்யிது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா (றஹ்) அவர்களாகும். அவர்களின் அன்னை உம்முல் கைர் என்றும் அமதுல் ஜப்பார் பாதிமா என்றும் அழைக்கப்படுகின்றார். தந்தை மாபெரும் ஸூபியாகவும் தாயார் இறைபக்தையாகவும் இருந்தார்கள். 

வம்சம் 

குத்பு நாயகத்தின் தந்தை அபூ ஸாலிஹ் இப்னு மூஸா என்பவர் இமாம் ஹஸன் (றழீ) அவர்களின் புதல்வர் ஸெய்யிது ஹஸன் முதன்னாவின் புதல்வரான ஸெய்யித் அப்துல்லாஹ் அல்ஹமஸ் அவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாவர். 

அவர்களின் அன்னை இமாம் ஹூஸைன் (றழீ) அவர்களின் புத்திரர் இமாம் ஸைனுல் ஆபிதீன் (றழீ) அவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். 

ஹழ்றத் குத்பு நாயகம் அவர்கள் தந்தை வழியில் ஹஸனீயாகவும், தாய் வழியில் ஹூஸைனீயாகவும் திகழ்கிறார்கள். இன்னார் நபீ ஸல் அவர்களின் காலத்திலிருந்து பதினோராவது தலைமுறையில் உதயம் பெற்றார்கள். அப்பாஸிய கலீபஹ்களின் மறைமுகமான சூழ்ச்சி காரணமாக இமாம் ஹஸன் (றழீ), ஹூஸைன் (றழீ) ஆகியோரின் குடும்பத்தினர் அரசியலைத் துறந்து உலகெங்கும் பரந்து மறைந்து வாழ்ந்தனர். 

குத்பு நாயகத்தின் தாய் தந்தையர் வழி மூதாதையர் காஸ்பியன் கடலையொட்டிய பாரசீக மொழி பேசப்பட்ட தபாரிஸ்தான் மாகாணத்தில் குடியேறினர். அதனாற்றான் முஹ்யித்தீன் ஆண்டகை பாரசீக நாட்டின் ஜீலானில் பிறந்தார்கள். 

கனவில் நபீகள் 

ஹழ்றத் குத்பு நாயகம் உலகில் மலர்வதற்கு முன்தினம் அவர்களின் தந்தையின் கனவில் தோன்றி ‘அபூ ஸாலிஹே, அல்லாஹ் உமக்கு ஒரு தவப்புதல்வரை அருளியுள்ளான். அவர் எனது சொந்தப் புதல்வரைப் போன்றவர். அல்லாஹ்வின் அருளுக்கும், எனது அன்புக்கும் உரித்தானவர். அவருக்கு இறைவன் இறை நேசர்களின் தலைமைப் பதவியை வழங்குவான்.” என்று சுபச் செய்தி சொன்னார்கள். 

பிறந்ததும் அற்புதம் 

தவச்சுடர்களான பெற்றோர் தமது தவச்சுடருக்கு ‘அப்துல்காதிர்’ என்று பெயர் சூட்டினர். றமழானில் அவர்கள் பிறந்ததால் அவர்கள் பகலில் பாலருந்தவில்லை. றமழான் முடியும் வரை இரவிலேயே பால் குடித்தார்கள். 

குழந்தையின் ஒரு வயதில் றமழான் மீண்டும் வந்த போது மேகமூட்டத்தால் முதல் பிறையைக் காண முடியவில்லை. மறுநாள் அவர்களின் தாயாரிடம் பிறை விடயமாக வினவப்பட்டபோது அன்று பகல் தன் அன்புச் சேய் அப்துல் காதிர் பாலருந்தவில்லை என்று தாயார் கூறினார்கள். அப்போதுதான் அன்று றமழான் முதல் நோன்பு என்பது தெரிய வந்தது. 

கிலாபத் பீடங்கள் 

குத்பு நாயகம் அவதரித்த இக்காலை மூன்று இஸ்லாமிய அரசுகள் பெருமை பெற்றுத் திகழ்ந்தன. 

01. ஸ்பைனிலிருந்த உமையா கிலாபத் பீடம். 

02. மிஸ்ர் நாட்டிலிருந்த பாத்திமத் கிலாபத் பீடம். 

03. பக்தாதிலிருந்த அப்பாஸிய கிலாபத் பீடம். 

மூன்று இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் திகழ்ந்தாலும் அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை மறந்ததனால் பலமிழந்து காணப்பட்டன. ஒவ்வொன்றும் தம்மிடையேயுள்ள ஆதிக்க வெறியால் ஒன்றை ஒன்று வீழ்த்தும் சதிமுயற்சிகளிலேயே ஈடுபட்டன. 

ஐரோப்பா இருண்டு கிடந்த அந்த கிறிஸ்துவ பதினோராம் நூற்றாண்டில் மூன்று கிலாபத் பீடங்களும் அமைந்த தலைநகரங்களிலும் அவற்றின் கிராமங்களிலும் பள்ளிவாயல்களும் கலை ஞானம் போதிக்கும் அறபுக் கலாபீடங்களும், நூலகங்களும் நிறைந்து காணப்பட்டன. 

குறிப்பாக இக்கிலாபத் பீடங்கள் நிறைந்த நகரங்களில் சர்வகலாசாலைகளும் இயங்கிக் கொண்டிருந்தன. 

வெளியமைப்பு அழகாகவும், கவர்ச்சியாகவுமிருப்பினும் உள்ளே பதவி மோகம், உட்பூசல், அறிஞர்கள் அரசர்களுக்கு அடிமையாதல், சிற்றரசர்கள் கலீபாவுக்கு கட்டுப்பட்டு நடக்காமை, அவர்களை அடக்கும் தன்மை கலீபாக்களுக்கு இல்லாமை போன்றவை பரவலாகக் காணப்பட்டன. இக்கால கட்டத்தில் தான் குத்பு நாயகம் இந்த உலகில் ஜனனம் செய்தார்கள். 

ஆரம்பக் கல்வி 

மழலைப் பருவத்தில் தமது தந்தை காலமாகிவிட்டதால் அன்னையே அவர்களை பாதுகாத்து வளர்த்தார்கள். சிறுவயதிலேயே திருக்குர்ஆனை மனனம் செய்தார்கள். 

அப்போது அவர்களுக்குப் பத்து வயதிருக்கும். மத்றஸஹ்வில் ஓதிக் கொண்டிருந்தார்கள். அவர்களது உஸ்தாத் மற்ற மாணவர்களை நோக்கி இதோ ‘வலீ’ வருகிறார். வழிவிடுங்கள் என்று குத்பு நாயகத்தை கண்ணியப்படுத்தினார்கள். 

நீங்கள் வலிய்யுல்லாஹ் என்பதை எப்போது முதலில் உணர்ந்தீர்கள். என்று அவர்களிடம் கேட்க்கப்பட்டபோது, 

எனது பத்தாவது வயதில் நான் பாடசாலைக்குச் செல்லும் போது எனது பின்னால் மலக்குகள் வந்து கொண்டிருப்பதையும், இறை நேசர் செல்கிறார், ஒழுக்கத்தைப் பேணுங்கள் என்று சொல்வதையும் நான் கேட்டேன் என்று நவின்றார்கள். 

பாடசாலைக் கல்வியில் தேர்ச்சி பெற்று பதினெட்டு வயதையடைந்தார்கள். இறை சிந்தனையும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. 

ஹிஜ்ரீ 488 துல்ஹஜ் மாதம் அறபாத் தினத்திற்கு முன்தினம் தமது ஊரில் வயல் வெளியில் நடந்து சென்றபோது மாடு ஒன்றைக் கண்டு அதைத் துரத்தலானார்கள். அது திரும்பி அப்துல் காதிரைப் பார்த்தது அப்பார்வை “நீ இதற்காகப் படைக்கப்பட்டவரல்ல” என்று சொல்வது போலிருந்தது. உடன் தனது வீட்டுக்குச் சென்று வீட்டு முகட்டின் மேல் ஏறிப் பார்த்த போது அவர்களுக்கு அறபாத் மைதானத்தில் மக்கள் நிறைவது காட்சியளித்தது. 

இது அவர்களது மனதுக்கு மகிழ்வைத் தந்ததுடன் இறை “மஹப்பத்’ பேராவலைத் தூண்டிவிட்டது. இறையன்பு ஏற்பட வேண்டுமாயின் உயர்கல்வியைத் தொடரவேண்டுமென்று தாயின் உத்தரவின்படி பக்தாத் நகர் வந்தார்கள். வரும் வழியில் எத்தனையோ அற்புதங்களும் படிப்பினைகளும் அவர்களுக்கு ஏற்பட்டன. 

அவர்களது உண்மை நிலையைக் கண்ட கள்வர் கூட்டமே திருட்டுத் தொழிலை விட்டு இறைபக்தர்களாக மாறிய வரலாறும் உண்டு. 

உயர்கல்வி 

பக்தாத் ஏகிய நாயகம் அவர்கள் சர்வ கலாசாலையில் நுழைந்து தகுதி வாய்ந்தவர்களிடம் உரிய கல்வியைக் கற்றுக் தேர்ந்தார்கள். அஷ்ஷெய்கு அபூஸயீதினில் முபாறக் பின் அலீ முகர்றமீ (றஹ்), அஷ்ஷெய்கு அபுல் உபா அலீபின் அகீல் (றஹ்) என்போரிடம் “பிக்ஹ்” மார்க்க சட்டக்கலையையும், அபூ காலிப் அஹ்மத், அபுல் காஸிம் அலீ ஆகிய நாதாக்களிடம் ஹதீஸ், தப்ஸீர் கலையையும், நிஜாமிய்யா கலாபீடத்தின் இலக்கியத் தலைமைப் பேராசிரியர் அல்லாமஹ் அபூஸகரிய்யாயஹ்யா தப்ரேஸி அவர்களிடம் அறபு இலக்கியத்தையும் கற்றுத் தேர்ந்து நிகரில்லா கல்விமானார்கள். 

ஞானகுரு (ஷெய்கை)வைத் தேடுதல் 

நஹ்வு (மொழியிலக்கணம்) சர்பு (சொல்லிலக்கணம்) ஹதீஸ் (நபீமொழி) தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) பிக்ஹு (மார்க்க சட்டக்கலை) அல்லுகதுல் அறபிய்யஹ் (அறபுமொழி) அல்அதபுல் அறபிய்யி (அறபு இலக்கியம்) மற்றும் சர்வ கலையிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்த அவர்களை ஷெய்கு யூசுப் இப்னுஐயூம் அல்ஹமதானீ (றஹ்) போன்றோர் மக்களுக்கு உபதேசம் செய்து நேர்வழியில் அழைக்கும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் இதை குத்புநாயகம் ஏற்கவில்லை. 
தொடரும்.......
தொடர் -- 02

ஞானகுரு (ஷெய்கை)வைத் தேடுதல்
நஹ்வு (மொழியிலக்கணம்) சர்பு (சொல்லிலக்கணம்) ஹதீஸ் (நபீமொழி) தப்ஸீர் (திருக்குர்ஆன் விரிவுரை) பிக்ஹு (மார்க்க சட்டக்கலை) அல்லுகதுல் அறபிய்யஹ் (அறபுமொழி) அல்அதபுல் அறபிய்யி (அறபு இலக்கியம்) மற்றும் சர்வ கலையிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்த அவர்களை ஷெய்கு யூசுப் இப்னுஐயூம் அல்ஹமதானீ (றஹ்) போன்றோர் மக்களுக்கு உபதேசம் செய்து நேர்வழியில் அழைக்கும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால் இதை குத்புநாயகம் ஏற்கவில்லை. 
தாம் கற்றது வெறும் ஏட்டுக் கல்வியே என்றும் ஏகாந்தமான இறை ஞானத்தை அனுபவ ரீதியாகப் பெற்றே மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று நினைத்து காமிலான சற்குருவைத் தேடியலைந்தார்கள். தனக்கு சற்குருவை காட்டித் தரும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். 

ஒரு நாள் பக்தாத் பெருந்தெருவில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஒருவர் ஒரு வீட்டினுள்ளிருந்து தோன்றி நீர் இறைவனிடம் எதைக் கேட்டீர்? என்று கேட்டார். அவர்கள் மௌனம் சாதிக்கவே கேட்டவர் கதவைப் பூட்டி மறைந்து விட்டார். 

சற்று தூரம் சென்ற போதுதான் தம்மிடம் கேட்டவர் சற்குருவோ? என்ற எண்ணம் தோன்றியது. ஓடோடி வந்தார். அந்த வீட்டை அடையாளம் காண அவர்களால் முடியவில்லை. எவ்வளவு தேடியும் பயனற்றுப் போகவே சோகத்துடன் திரும்பி விட்டார்கள். 

பல நாட்களின் பின் கடைத் தெருவில் ஒருவர் ஷர்பத் விற்றுக் கொண்டிருந்தார். அவரது ஷர்பத்தில் ஈக்கள் (கொசு) மொய்யாதிருப்பதைக் கண்டு அவரை உற்றுப்பார்த்தார்கள். அப்போது இவர்தான் தம்மிடம் கேட்ட மனிதர் என்பதை கண்டு அவரிடம் சேர்ந்தார்கள். அவரது பெயர் ஷெய்கு ஹம்மாத் என்றும் அறிந்தார்கள். 

ஷெய்கு ஹம்மாத் அவர்கள் ஷெய்கு அப்துல் காதிரை பலவகையில் சோதனை செய்தபின் இறைஞானங்களையும் கஷ்புடைய அறிவுகளையும் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது மறைவான பற்பல விடயங்கள் அவர்களுக்கு விளங்கலாயிற்று. மூன்று வருடங்கள் ஷெய்கு ஹம்மாதிடம் இருந்து ​தெளிவு பெற்றார்கள். 

குத்பு நாயகத்தின் மகோன்னத நிலையை மற்றோருக்கு எடுத்துக் காட்டிய ஷெய்கு ஹம்மாத் (றழி) அவர்கள், இவர் எதிர்காலத்தில் மாபெரும் ஆத்ம ஞானியாகத் திகழ்வார்கள் என்றும் அறபிகள் – அஜமிகள் அனைவருக்கும் இறைஞானத்தை வாரி வழங்குவார் என்றும் தன் பாதம் எல்லா வலீமார்களின் தோள் மீதும் இருப்பதாகச் சொல்லும்படி பணிக்கப் படுவார் என்றும் அருளினார்கள். அதன் படியே ஞானி அப்துல் காதிர் அவர்கள் எதிர்காலத்தில் திகழ்ந்தார்கள். 

வனத்தில் மாதவம் 

ஷெய்கு ஹம்மாத் அவர்களிடம் விடை பெற்ற அவர்கள் புனித மக்கமா நகர் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய போது அப்துல்காதிரே, தனித்திருப்பீராக, தவ்ஹீதின் தத்துவங்களை உணர்ந்து இறையின்பத்தில் மூழ்குவீராக. சதா இறைதியானத்தில் இருப்பீராக என்ற ஒலி அவர்களது இதயத்திலிருந்து ஒலிப்பதுபோல் கேட்டது. 

இதனையுணர்ந்த கௌதுல் அஃளம் அவர்கள் பக்தாதைத்துறந்து இறாக் நாட்டு வனத்தை நாடினார்கள். அதில் “கர்க்” என்ற இடத்தைத் தேர்ந்து அங்கிருந்த பாழடைந்த கட்டிடத்தை தமது வதிவிடமாகக் கொண்டார்கள். அதிலிருந்தே இறை தியானத்தில் ஈடுபட்டார்கள். அப்பகுதிக்குச் செல்வோர் கௌதுல் அஃளம் அவர்களை பைத்தியம் என்றும் வேறுவிதமாகவும் கருதினர். அவர்கள் கடும் தவம் புரிந்ததால் உலக ஆசை அவர்களை விட்டும் அகன்றிருந்தது. 

அவர்களின் தவநிலையைக் குழப்புவதற்காக ஷெய்த்தான் போட்ட கோலங்கள் வீணாய்ப்போயின. இறைவனின் முனாஜாத்தின் முன் கஷ்டங்கள் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. 

ஒரு வருடம் வனத்தில் காணப்பட்ட காய்கறிகளை மட்டுமே உண்டு தவம் செய்தார்கள். இண்டாம் வருடம் தண்ணீர் மட்டுமே அருந்தி தவம் செய்தார்கள். மூன்றாம் வருடம் எதையும் உண்ணாமலும், குடிக்காமலும் வெறும் வயிற்றுடனிருந்து தவம் செய்தார்கள். 

(இறைவனின் குணம் கொண்ட நேசர்கள் உண்பதெங்கே? குடிப்பதெங்கே அனைத்தை விட்டும் அவர்கள் தேவையற்றுவிடுவார்கள்). 

ஒரு நாள் அந்த வனத்தில் “கழிர்” (அலை) அவர்கள் தோன்றிய போது தனக்கு உபதேசம் செய்யும்படி அப்துல் காதிர் வேண்டினார்கள். அதற்கு அவர் நான் திரும்பவரும் வரை இவ்விடத்தை விட்டும் நகரக் கூடாது என்று பணித்துச் சென்றார்கள். அதன்படி அவ்விடத்திலேயே “கழிர்” அவர்களை எதிர்பார்த்து ஒரு வருடமாக இருந்தார்கள். ஒரு வருடத்தின் பின் அங்கு வந்த கழிர் (அலை) சில உபதேசங்களைச் செய்து மீண்டும் நான் வரும் வரை இங்கேயே இருக்க வேண்டுமென்று ஏவிச் சென்றார்கள். அதன்படி அவர்கள் அங்கே ஒருவருடம் நகராமல் இருந்தார்கள். மொத்தம் கழிர் (அலை) அவர்களின் உபதேசத்திற்காக இரு வருடங்களை ஒரே இடத்தில் கழித்தார்கள். என்னே விந்தை ! என்னே அவர்களின் தவநிலை. அவர்கள் அந்தப் பாழடைந்த கோட்டையில் பதினொரு வருடங்களைக் கழித்தார்கள். அதனால் அக்​கோட்டை “புறூஜூல் அஜமி” அறபியல்லாதவரின் கோட்டை என்று வழங்கலாயிற்று. இஷாவுக்குச் செய்யும் வுழூவுடன் சுப்ஹ் தொழுகையை நிறைவேற்றுவார்கள். 

பொதுவாக பல வருடங்கள் மறைந்து வாழ்ந்தார்கள். அதில் கர்க்கில் கழித்த காலத்தைவிட ஏனைய காலங்களை எங்கு கழித்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். 

இலங்கைக்கும் ஆதம் நபீயின் புனித பாதத்தைத் தரிசிக்க வருகை தந்ததாகவும் அதில் ஜெய்லானீ என்ற இடத்துக்கு வந்து தவமிருந்ததாகவும் அதனாற்றான் அது ஜெய்லானீ என்று பெயர் பெற்றதாகவும் தொன்றுதொட்டு பேசப்படுகின்றன. எழுத்தில் ஆதாரபூர்வமாக எம்மால் அறிய முடியவில்லையாயினும் அதை நாம் மறுக்கவில்லை. காரணம் ஒரு கண்டத்திலிருந்து ஒரு கண்டத்தைக் கடப்பது அவ்லியாக்களால் முடியாத ஒன்றல்ல. இறை நேசர்களுக்கு இறைவன் பூமியை சுருக்கியும் விரித்தும் கொடுப்பான் என்பதும் ஒரு காலை ஒரு இடத்தில் வைத்து மறுகாலை நினைத்த இடத்தில் வைக்கும் வல்லமை அவ்லியாக்களுக்கு உண்டு என்பதும் வெளியிடைமலை. 

முஹ்யித்தீன் பட்டம் கிடைத்தது 

ஒரு நாள் குத்பு நாயகம் அவர்கள் பக்தாத் வீதியில் நடந்து சென்றபோது வீதியோரத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருப்பதைக்கண்டு அவருக்கு சலாம் சொன்னார்கள். பதில் சலாம் கூறிய அவர் தம்மை தூக்கி நிறுத்தும்படி வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் அம்மனிதரைத் தூக்கி நிறுத்தினார்கள். அவர் நிறுத்தப்பட்டதும் வாலிபராக மாற்றம் பெற்றார். அவரிலிருந்த முதுமை மறைந்து போய்விட்டதைக் கண்ட கௌதுல் அஃளம் அவர்கள் அதிசயித்து நிற்கையில் “அனத்தீன்” நான் தான் சன்மார்க்கம். நீங்கள் அம்மார்க்கத்துக்குப் புத்துயிரளித்தீர்கள். அன்த முஹ்யித்தீன் ( நீங்கள் மார்க்கத்தைப் புத்துயிர் பெறச் செய்தவர் ) என்று அந்த வாலிபர் கூறினார். 

அன்றிலிருந்து ஹழ்றத் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் “முஹ்யித்தீன்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு பெற்றோர் சூட்டியபெயரைவிட படித்தவர்களிடமும் பாமரர்களிடமும் முஹ்யித்தீன் என்ற பெயரே பிரசித்தம் பெற்றுத் திகழ்கின்றது. “ கௌதுல் அஃளம் ” என்ற பட்டமும் இறைவனாலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

எமக்கு ஒரு “ ஆபத் ” ஏற்படும் போது “ யா முஹ்யித்தீன் ” என்ற அவர்களின் திருநாமம் நாம் நினைக்காமலேயே நமது இதயத்திலிருந்து வெளிப்படுவது அப்பெயரின் மகத்துவத்தை உணர்த்துகிறது. 

இரண்டாம் ஹஜ்ஜும் இறை நபீ தரிசனமும் 

முஹ்யித்தீன் ஆண்டகை அவர்கள் தங்களது இருபத்தைந்து வருட மாதவத்தை முடித்தபின் இரண்டாம் முறையாகவும் மக்கா சென்று ஹஜ் செய்தார்கள். ஹஜ்ஜை முடித்தபின் தங்களது பாட்டனார் நபீ முஹம்மது (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களது தரு றவ்ழஹ்வில் நாற்பது நாள்கள் தரித்து, தவநிலை கொண்டு தாஹாநபீயின் அருள்ஜோதியைப் பெற்றார்கள். 

ஞான உபதேசம் 

அதன்பின் நபீகள் முஹம்மது (ஸல்) அவர்களினதும் அவர்களது அருமை மருகர் அலீ (றழி) அவர்களினதும் உத்தரவின் பேரில் மக்களுக்கு இறை போதனைகளைச் செய்யத் தொடங்கி மக்களை இறைவழியில் சேர்த்து வைத்தார்கள். அவர்களது நெஞ்சிலிருந்து ஊற்றெடுத்தோடும் இல்ஹாம் பொதிந்த ஞான உபதேசங்களைக் கேட்பதற்கு மக்கள் கூட்டம் அலையலையாகத் திரண்டனர். காலையும் மா​லையும் ஞான இரத்தினங்களை அள்ளிச் சொரிந்தார்கள் அதைக் கேட்ட மக்கள் இறை இன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். 

பீரும் பாம்பும் 

ஒருமுறை “ கழாகத்ர் ” விதிபற்றி உரை நிகழ்த்தினார்கள். அனைத்தும் இறைநாட்டப்படியே நடக்கும் என்றும் அல்லாஹ் நாடாமல் அணுகூட அசையாது என்றும் விசுவாசிகள் எத்தருணத்திலும் நம்பிக்கை இழக்கமாட்டார்கள் என்றும் உரையாற்றினார்கள். 

அப்போது பாம்பு ஒன்று முகட்டில் இருந்து அவர்களது தலைப்பாகையில் விழுந்து உடலைச் சுருட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்தவர்கள் அச்சம் கொண்டார்கள். ஆனால் கௌது நாயகம் அதைப் பொருட்படுத்தாமல் இறைநாடாமல் எதுவும் எதையும் செய்ய முடியாது என்றே போதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாம்பைக் கண்டு அஞ்சவில்லை. ஆனால் அவர்களைக் கண்டு பாம்பு அஞ்சி இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அது அவர்களது உடலை விட்டும் பிரிந்து சென்றது. 

பாதர் பெற்ற பரிசு 

எமன் தேசத்தில் வாழ்ந்து நன்கு வேதத்தை கற்றுணர்ந்த ஒரு கிறீஸ்துவப் பாதர் பக்தாத் வந்து கௌது நாயகம் முஹ்யித்தீன் அவர்களின் கரத்தில் புனித இஸ்லாத்தை ஏற்றார்கள். இஸ்லாத்தைத் தழுவியபின் சபையில் எழுந்த அவர் ‘ நான் எமன் நாட்டில் வாழும் இஸ்லாமிய மேதை ஒருவரிடமே இஸ்லாத்தைத் தழுவ விரும்பியிருந்தேன். ஆனால் எனது கனவில் ஈஸா நபீ தோன்றி “ நீ பக்தாத் சென்று அங்கு வாழும் 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் (றழி) அவர்களிடமே இஸ்லாத்தைத் தழுவு என்றும், அவரே தற்கால குத்பாக இருக்கிறார், அவரை மிகைத்தவர் தற்போது எவருமில்லை.” என்றும் பணித்தார்கள் என்று கௌது நாயகத்தின் மாண்பை எடுத்தோதினார்கள் ! என்னே முஹ்யித்தீன் ஆண்டகையின் அற்புதம் ! 

விருந்தும் மருந்தும் 

ஒரு நாள் கௌதுல் அஃளம் அவர்களை பழ்லுல்லாஹ்பின் இஸ்மாயீல் எனும் வணிகர் தமது வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற கௌதுல் அஃளம் அவரது வீட்டுக்குச் சென்றார்கள். விருந்துண்டு முடித்தபின் கௌது நாயகத்தின் முன் ஒரு கூடையைக் கொணர்ந்து வைக்கப்பட்டது. அதைத் திறக்குப்படி கௌதுல் அஃளம் உத்தரவிட்டார்கள். அது திறக்கப்பட்டபோது உள்ளே ஒரு சிறுவன் வைக்கப்பட்டிருந்தான். அச்சிறுவன் குருடனாகவும், குஷ்டம் பிடித்தவனாகவும், வாதம் வதைத்தவனாகவும் காணப்பட்டான். அவன் அந்த வணிகனின் புத்திரன் என்று சொல்லப்பட்டது. அச்சிறுவனை விளித்த குத்பு நாயகம் இறைவனின் அருள் கொண்டு சகலதும் சுகம் பெற்று எழுந்துவிடு என்றார்கள். உடன் அச்சிறுவன் தமக்கிருந்த நோய்கள் அகன்று எழுந்து நின்றான். இவ்வரலாறு எவ்வித மருந்துகளும் இன்றி கௌது நாயகத்தின் சொல் என்ற மருந்தைக் கொண்டு மட்டும் சுகம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது எடுத்தோ தப்படுகின்றது. இதுவும் மாபெரும் அற்புதமாகும்.
தொடரும்.......


தொடர்-03 
                             
அதிசய நூல்
​கௌது நாயகம் அவர்களால் மனத் தெளிவு பெற்று நாத்தீகக் கொள்கையிலிருந்து விடுபட்ட ஷெய்கு முஜப்பர் பின் மன்ஸுர் சொல்கிறார்கள் நான் எனது வாலிப வயதில் நாத்திகம் நிறைந்தவனாக இருந்தேன். எனது சட்டையின் உள்ளே நாத்திகம் போதிக்கும் நூல் ஒன்றை மறைத்து வைத்தவனாக கௌதுல் அஃளம் அவர்களின் சபையில் அமர்ந்தேன். திடீரென என்னை விளித்த அவர்கள் உனது உட்சட்டையில் மறைத்து வைத்துள்ள நூல் உனக்கு உகந்ததல்ல. அதைத் தண்ணீரில் எறிந்துவிடு என்றார்கள்.

மறைவான விடயத்தை எப்படி அறிந்தார்கள் என்று வியந்தேன். ஆனால் அந்நூலை நான் தண்ணீரில் எறிவதற்கு விரும்பவில்லை. அதை ஓரிடத்தில் ஒழித்துவைத்து விடலாம் என்று எழுந்தேன். என்னால் எழ முடியவில்லை. தரை என்னைப் பிடித்துக் கொண்டது.

அந்நூலை என்னிடம் கொடு என்றார்கள் அதை நான் கொடுக்கும் போது விரித்துப் பார்த்தேன். அதில் எவ்வெழுத்துகளும் இன்றி வெறுந் தாள்களே காணப்பட்டன. இது எனக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது. அதிலிருந்த எழுத்துக்கள் எங்கே என்று சிந்தித்தவனாக அந்நூலை அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதைக் கையில் பெற்று அதைப் புரட்டி “ இது திருமறை ஞானத்தைப் பற்றி இப்னு ஷரீஸ் முஹம்மது ” எழுதிய பழாயிலுள் குர்ஆன்தான் என்று சொல்லி என்னிடம் தந்தார்கள். அதை நான் திறந்து பார்த்த போது கௌதுல் அஃளம் கூறிய நூலாகவே அது இருந்தது. என்னே ஆச்சரியம் ! அது மட்டுமன்றி அந்நாத்தீக நூலில் நான் மனனம் செய்திருந்த பகுதிகளும் என் நினைவிலிருந்து மறைந்து விட்டது. என்று கௌது நாயகத்தின் மாண்பை எடுத்தோதினார்கள்.

கௌதுல் அஃளமுக்கு நூலையே மாற்ற முடியுமாயின் கறடுமுறடான இருள் படிந்த எமது இதயக் கறையை மாற்றவும் தமது இறை நெருக்கத்தால் எமது கழாகத்றின் வேகத்தைக் குறைத்து தீமைகளை அழித்துவிடவும் சக்தியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பது ​தெளிவாகிறது.

பொரித்த கோழியும் குத்பு நாயகமும்

முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களிடம் ஒரு மாது தன் மைந்தனை அழைத்து வந்து ஞானப் பயிற்சி அளிக்குமாறு விட்டுச் சென்றாள். பின் பல நாட்களின் பின்தன் மைந்தனைப் பார்க்க வந்தாள். தன் மைந்தன் காய்ந்த ரொட்டித் துண்டுகளை உண்டு கொண்டிருப்பதைக் கண்டாள்.

கௌதுல் அஃளம் அவர்களின் சமூகம் சென்ற போது பொரித்த கோழியை உண்டுகொண்டிருப்பதைக் கண்டாள். அவளின் பேதை மனம் ஏங்கியது. அவளது ஏக்கம் வெளியில் கொப்பளித்தது. நாயகமே ! நீங்கள் ருசி மிக்க பொரித்த கோழியை உண்கிறீர்கள். என் மைந்தன் காய்ந்த ரொட்டியை உண்டு கொண்டிருக்கிறான். அவன் மெலிந்துவிட்டான் என்று கண்ணீர் மல்கக் கேட்டாள். அப்போது கௌது நாயகம் அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக அங்கு கிடந்த தான் உண்ட கோழியின் முட்களைப் பார்த்து இறைவனின் உத்தரவு கொண்டு இந்த முட்களும் உயிர்பெறும் உயிர்பெறு என்றார்கள். உடனே கோழி எழுந்து கொக்கரித்தது. இதைக் கண்ட அம்மாது முஹ்யித்தீனே என்னை மன்னித்து விடுங்கள், பிள்ளைப் பாசத்தால் கேட்டு விட்டேன் என்றாள். அதைக் கேட்ட நாயகம் “ உன் பிள்ளையும் ஞானப்பயிற்சியடைந்துவிடின் இந்நிலை அடைவான் என்றார்கள்.” என்னே அவர்களின் அற்புதம் !

பாதணிகளின் அற்புதம்

ஹிஜ்ரீ 555 ஸபர் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை மத்ரஸஹ்வில் இருந்த கௌது நாயகம் திடீரென்று வுழூ செய்து இரு ரக்கஅதுகள் “ நப்ல் ” தொழுதபின் தங்களது மரத்திலான இரு பாதணிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எறிந்தார்கள் அவை பெரும் சத்தத்துடன் சென்று மறைந்தன. இருந்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை அவர்களிடம் கேட்பதற்கும் தைரியம் ஏற்படவில்லை.

மூன்று நாள்களின்பின் “அஜம் ” நாட்டிலிருந்து ஒரு ஒட்டகக் கூட்டத் தலைவர் காணிக்கைகளுடன் அங்கு வந்தார். கௌது நாயகத்தின் உத்தரவுடன் அதைப் பெற்றபோது அதனுடன் கௌது நாயகத்தின் இரு பாதணிகளும் காணப்பட்டன. கௌது நாயகம் எறிந்த பாதணிகள் உங்களிடம் எப்படி வந்தடைந்தன ? என்று இருந்தவர்களால் வினவப்பட்டது.

அதற்கு அவர், நான் ஸபர் மூன்றாம் தேதி வியாபாரச் சரக்குடன் பாலைவன வழியாக வந்தபோது கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டோம். எங்களைச் சிறைப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கொள்ளைப் பொருட்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாங்கள் கெளது நாயகம் அவர்களை அழைத்தோம். சிறுது நேரத்தில் இவ்விரு பாதணிகளும் பெரும் இரைச்சலுடன் பறந்து வந்து அவர்களின் இரு தலைவர்களை அடித்து கீழே வீழ்த்தியது.

உடனே எம்மிடம் அந்தக் கொள்​ளையர்கள் சிலர் வந்து எங்களை மன்னியுங்கள். உங்கள் பொருள்களை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். நாம் அருகில் சென்று பார்த்தபோது இரு தலைவர்களும் இறந்து கிடந்தனர். அவர்களின் அருகே இரு பாதணிகளும் காணப்பட்டன. உடன் நாங்கள் கௌது நாயகத்தின் மகத்துவத்தைப் புரிந்தோம். இதோ காணிக்கைகளுடன் வந்துள்ளோம் என்றனர். அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு கெளது நாயகம் பாதணிகளை எறிந்த மர்மம் புரிந்தது. இதை ஷெய்கு உமர் உத்மான் (றழி), ஷெய்கு அப்துல் ஹக் (றழி) ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
               
விஞ்ஞானப் புதுமை மிகுந்த இந்த நவீன யுகத்தில் யுத்த விமானங்களை நோக்கி எஸ்கட் ஏவுகணைகள் எறியப்படுகின்றன. அவை குறி தவறாமல் விமானங்களை அழிக்கின்றன. இதே போன்றவர்கள்தான் வலீமார்களும், நினைத்த விடயத்தை இருந்த இடத்தில் இருந்தே செய்வார்கள். அவர்கள் பார்வைக்குத் திரை கிடையாது. ஏவுகணைகள் போன்றுதான் தம் பாதணிகளை எறிந்து கொள்ளையரை அடக்கித் தம்மை அழைத்தவர்களுக்கு உதவினார்கள்.

குத்பின் கட்டளையும் மீறிய ஹம்மாமியும்

அபுல் ஹஸன் அலி சொல்கிறார் குத்பு நாயகத்தின் காலத்தில் அபூபக்கர் அல்ஹம்மாமீ என்றொருவர் இருந்தார். அவர் நன்நெறி நடப்பவராகவும் நன்நிலை உடையவராகவும் காணப்பட்டார்.

ஒரு நாள் குத்பு நாயகம் அவர்கள் அவரை விளித்து நீர் ஷரீஅத்தை மீறியதாக அது என்னிடம் முறையிடுகிறது. அவற்றை நீ தவிர்ந்து கொள் என்று நவின்றார்கள். ஆனால் அவர் தவிர்ந்து நடக்கவில்லை.

அப்போது குத்பு நாயகம் தனது கையை அவரது நெஞ்சில் வைத்து “ நீ பக்தாதை விட்டும் வெளியேறிவிடு என்று கட்டளை இட்டார்கள். அக்கட்டளையின் பின் அவரது நிலை மோசமாகியது. பக்தாதை விட்டும் அவர் வெளியேறினார். பின்னர் அவர் பக்தாதில் நுழைவதற்கு முற்பட்டார். அவரால் நுழைய முடியவில்லை. முகம் குப்புற விழுந்தார். பின் பிறரைத் தூக்கச் செய்து பக்தாதில் நுழைய முயன்றார். அப்போது அவரும், அவரை தூக்கியோரும் முகம் குப்புற வீழ்ந்தனர்.

இதையறிந்த வயது முதிர்ந்த தாய் குத்பு நாயகத்திடம் வந்து நாயகமே ! நான் அவரின் தாய் வயது முதிர்ந்தவள் என்னால் ​வெளியிற் சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. தயவு செய்து அவர் வந்து என்னைப் பார்ப்பதற்கு அனுமதியுங்கள் என்று பணிந்து நின்றாள்.

அம்மாதின் மீது இரங்கிய குத்பு நாயகம், மாதே நீ ​செல்ல வேண்டாம் நீ உமது வீட்டில் இருந்து கொள். நான் பூமிக்கு கட்டளை இடுகிறேன். உனது மைந்தனை பூமி தன்னுள்ளால் கொணர்ந்து உனது வீட்டில் சேர்க்கும். நீ பார்த்து உரையாடியபின் அது அவரை உள்ளால் அழைத்துச் சென்று வெளியேற்றிவிடும் என்றார்கள்.

அதேபோல் வாரத்தில் ஒரு தரம் பூமி அபூபக்கரை வீட்டு கிணற்றடிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்துச் சென்று கொண்டிருந்தது.

அபூபக்கர் அல்ஹம்மாமீ என்பவர் அக்காலத்தில் வாழ்ந்த இறைநேசர் ஷெய்கு முழப்பர் என்பவரின் நேசராக இருந்தார். தனது நேசர் ஹம்மாமியின் பரிதாப நிலை அவருக்கு வேதனையாக இருந்தது.

ஒரு நாள் ஜத்புடைய நிலையில் நேசர் முழப்பரிடம் நீ விரும்பியதைக் கேள் ! என்று இறைவன் சொன்னான். அச்சந்தர்ப்பத்தில் குத்பு நாயகத்தின் கட்டளைக்கு மாறு செய்த தனது அன்பரை பற்றி இறைவனிடம் கேட்டார். அதற்கு இறைவன் அது பற்றி எனது ஈருலக நேசர் அப்துல் காதிரிடமே கேட்டுக்கொள் என்று சொன்னான்.

மீண்டும் அவர் மன்றாடியபோது சரி நான் மன்னிக்கிறேன். அப்துல் காதிரிடம் சென்று அபூபக்கரை ​பொருந்தி அவரது குற்றத்தை மன்னிக்கும்படி நான் சொன்னதாகச் சொல் என்று சொன்னான். அதேபோல் நபீகள் (ஸல்) அவர்களும் ​தோன்றி முழப்பரே, எனக்குப் பகரமாக என் ஷரீஅத்தை நிலைநிறுத்தும் அப்துல் காதிர் அவர்களிடம் சென்று ‘ உங்கள் பாட்டன் சொல்கிறார். நீங்கள் அபூபக்கரை எனது ஷரீஅத் காரணமாகவே வெறுத்தீர்கள். நான் அவரை மன்னித்து விட்டேன். நீங்களும் மன்னித்துக் கொள்ளுங்கள். என்று சொல்லுமாறு பணித்தார்கள்.

பின்பு ஷெய்கு முழப்பர் அவர்கள் அபூபக்கர் ஹம்மாமியை சந்தித்து குத்பு நாயகத்திடம் அழைத்து வந்து முன்னே நின்றனர். ஷெய்கு முழப்பரை பார்த்த குத்பு நாயகம் வந்த செய்தியை சொல்லும்படி பணித்தார்கள். அவர் தனக்கு நினைவிருந்ததை சொல்லி முடித்தார்கள்.

பின் அபூபக்கரை, முழப்பர் அவர்கள் தவ்பஹ் செய்து மன்னிக்கும்படி வேண்டினார்கள். அவரை மன்னித்த குத்பு நாயகம் அவரை தனது நெஞ்சோடு அணைத்தார்கள். அப்போது தான் முன்பிருந்த நிலையை அடைந்து இழந்ததையெல்லாம் அந்த வேளையிலேயே பெற்றுக் கொண்டார்கள் என்ன குத்பு நாயகத்தின் மாண்பு ! என்னே அவர்களின் அற்புதம் !

சிந்திக்க !

அபூபக்கர் ஹம்மாமி என்பவர் உயர் நிலையைப் பெற்ற ஒரு ஷெய்காக இருந்தும் குத்பு நாயகத்தின் சொல்லை மீறியதற்காக அவரது நிலை பறிக்கப்பட்ட தென்றால் குத்பு நாயகத்திற்கு இறைவன் அளித்துள்ள மாண்மை எத்தகையது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமன்றி குத்பு நாயகத்தின் ஆணைக்கு பூமி கட்டுப்பட்டு அபூபக்கரின் உடலில் எவ்வித மாற்றமும் இன்றி அவரது அன்னையின் வீட்டிற்கு பூமி உள்ளால் கொணர்ந்துள்ளது. இதுவும் மாபெரும் அற்புதமாகும்.

வலீமார்களின் வல்லமையை அறியாதவர்கள் இவ்வதிசய வரலாறைப் பொய் எனச் சொல்லலாம். அவர்கள் பொய் என்பதால் உண்மை பொய்யாவதில்லை.

இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் கூறும் சுலைமான் நபீயின் வரலாறு அவர்களது செயலாளர் ஆஸிப்பின் பர்கியா (றஹ்) கண்ணை மூடி விழிப்பதற்கு முன் ஆயிரக்கணக்கான கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்த பில்கீஸ் மகாராணியின் “ அர்ஷ் ” சிம்மாசனத்தை பூமியின் உள்ளால் எவ்வித சேதமுமின்றி சுலைமான் நபீயின் முன் கொணர்ந்து வைத்தும் மறுக்க முடியாததாகும்.

காய்ச்சலை விரட்டல்

குத்பு நாயகம் அவர்களிடம் அபுல் மஆலீ என்பவர் வந்து நாயகமே எனது மைந்தன் 15 மாதங்களாக தீராத காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளான் என்றார்கள். அதற்கு குத்பு நாயகம் அவரை விளித்து, உம்முமல்தமே, நீ எப்போது இவனை பீடித்தாய்? நீ ஹில்லா என்ற ஊருக்குச் சென்றுவிடு என்று குத்பு சொல்கிறார் என உமது மகனின் காதில் சொல் என்றார்கள். அதன்படி மகனின் காதில் சொன்னார்கள். அதன்பின் காய்ச்சல் முற்றாக அவனை விட்டும் அகன்று விட்டது. காய்ச்சல் சிறிதும் வரவே இல்லை.

அவர்கள் சொன்னது போல் ஹில்லா எனும் ஊரில் வாழ்ந்த றவாபிழ்களில் அனேகர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக செய்தி கிடைத்தது.

இவ்வரலாறு நபீகள் (ஸல்) மதீனஹ்வில் இருந்த காய்ச்சலை ஜூஹ்பா என்ற இடத்திற்கு இடம் மாற்றியது போல் உள்ளது. இதுவும் குத்பு நாயகம் அவர்களின் மா பெரும் அற்புதமாகும்.

தொடரும்.......


தொடர்-04... 

காதிமுக்குச் சொன்ன சுபச் செய்தி

குத்பு நாயகம் அவர்களுக்கு “ கழிர் ” என்ற பணியாளர் ஒருவர் இருந்தார். அவரை விளித்த குத்பு நாயகம் ‘கழிரே, நீ மூஸில் (மௌஸில்) என்ற ஊருக்குச் செல்’ உனது முதுகநதண்டில் பிள்ளைகள் உள்ளனர். அதில் முதற் பிள்ளை ஆண் பிள்ளை. அதன் பெயர் முஹம்மது. அப்பிள்ளைக்கு அஜமீ ஒருவர் குர்ஆனை ஏழு மாதத்தில் கற்றுக் கொடுப்பார். அவர் ஒரு குருடர். அவர் பெயர் அலீ அவர் பக்தாதைச் சேர்ந்தவர். பிள்ளை குர்ஆனை ஏழு வயதில் மனனம் செய்து விடும். நீ 94 வருடங்களும் ஒருமாதமும் ஏழு நாட்களும் வாழ்வாய். பின் பாபில் என்ற ஊரில் மரணிப்பாய் என்று உபதேசம் செய்தார்கள்.
குத்பு நாயகம் கூறிய படியே அவரது வாழ்க்கை அமைந்ததாக வரலாறு சொல்கிறது.

இதில் மறைவான விடயங்களை குத்பு நாயகம் அறிந்து சொல்லியுள்ளார்கள் என்பது ​தெளிவாகிறது.

கண்ணாடி போத்தலினுள் உள்ள பொருள் தெளிவாகத் தெரிவது போல் நான் மறைவான விடயங்களை பார்த்து அறிகின்றேன் என்று குத்பு நாயகம் அவர்கள் சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஷெய்கு ஹம்மாதின் கப்றில் நீண்ட நேரம் நின்றமை 

குத்பு நாயகம் அவர்கள் தனது முரீதீன்களுடன் சென்ற போது ஷெய்கு ஹம்மாத் (றழி) அவர்களின் “கப்ர்” அடக்கத்தலம் வந்தது. அவ்விடத்தில் கடும் வெயிலில் நீண்ட நேரம் நின்றார்கள். அவர்களின் பின்னால் அவர்களது முரீதீன்களும் நின்று கொண்டிருந்தனர். நீண்ட நேரத்தின் பின் உளம் மகிழ்ந்தவர்களாக அவ்விடத்தை விட்டும் அகன்றார்கள்.

ஷெய்கு ஹம்மாதின் கபுறடியில் நீண்ட நேரம் நின்றது பற்றியும், பின் மகிழ்வுடன் திரும்பியது பற்றியும் அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள் நான் அன்றொருநாள் ஜூம்அஹ் தொழுகைக்காக ஷெய்கு ஹம்மாதுடன் ‘ஜாமிஉர் றஸாபஹ்’ ஜூம்அஹ்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆற்றோரமாகச் சென்ற போது ஷெய்கு ஹம்மாத் அவர்கள் என்னை ஆற்றில் தள்ளி விட்டார்கள். நான் ஆற்றில் விழும் போது ஜூம்அஹ்வுடைய சுன்னத்தான குளிப்பை இறுக்குகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டேன்.

இன்று அவருடைய கப்றில் அவரைக் கண்டேன். அவர் ஆபரணங்கள் அணிவிக்கப் பட்டிருந்தார். ஆனால் அவரது வலது கை சூகையாகி இருந்தது.

உங்கள் கைக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் இது உங்களை ஆற்றில் தள்ளி விட்டதனால் இறைவன் தந்த தண்டனை ! நீங்கள் என்னை மன்னித்து எனது கை சுகம் பெற அல்லாஹ்விடத்தில் கேளுங்கள் என்றார்.

நான் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தேன். எனது பிரார்த்தனைக்கு ஐயாயிரம் வலீமார்கள் கப்றுகளில் இருந்து எழுந்து ஆமீன் சொன்னார்கள். நான் பார்த்திருக்கும் போதே அவரது கைக்கு சுகம் கிடைத்தது. அவர் என்னை சங்கையாக முஸாபஹா செய்தார் என்றார்கள்.

இச்செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரந்தது ஷெய்கு ஹம்மாதின் தோழர்கள் செய்தி கேட்டு குத்பு நாயகத்தைத் தேடி திரண்டு வந்தனர். ஆனால் இது சம்மந்தமாக யாருமே குத்பு நாயகத்துடன் ​பேசுவதற்கு சக்தியற்று நின்றனர். அப்போது அவர்களை விளித்த குத்பு நாயகம் ‘நீங்களில் உங்களில் நன்நிலையுடைய இருவரைத் தேர்ந்தெடுங்கள் அவர்களின் நாவிலிருந்து உங்களுக்கு உண்மை வெளியாகும். என்றுரைத்தார்கள். உடன் அவர்கள் ஏகோபித்து அவர்களில் ஷெய்கு யூசுப், ஷெய்கு அப்துர் றஹ்மான் ஆகிய இருவரையும் தேர்ந்தனர்.

அவ்விருவரையும் குறித்த இடத்தில் நிறுத்திய குத்பு நாயகம் உண்மை வெளியாகும் வரை நீங்கள் இங்கேயே தரிக்க வேண்டும் என்று பணித்தார்கள்.

அதன்படி அவர்கள் செயற்பட்ட போது பகைமை நிறைந்திருந்த ஷெய்கு யூசுப் சத்தமிட்டவராக ஓடி வந்தார். எல்லோரும் அவரைச் சூழ்ந்தனர். அவர் அவர்களுக்கு வல்ல அல்லாஹ் ஷெய்கு ஹம்மாத் அவர்களை தற்போது எனக்கு காட்டினான். அவர்கள் எனக்கு நீ ஷெய்கு அப்துல் காதிரின் மத்றஸஹ்வுக்கு இப்போது ஓடிச் சென்று என்னைப் பற்றி ஷெய்கு அப்துல் காதிர் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று அங்கிருப்போருக்கு சொல் என்று சொன்னார்கள் என்றார்.

பின்பு ஷெய்கு அப்துர் றஹ்மானும் ஓடி வந்து ஷெய்கு யூசுப் சொன்னது போன்றே எத்திவைத்தார்.

இதைக் கேட்ட அங்கிருந்தோர் அனைவரும் தவ்பஹ் செய்து குத்பு நாயகத்தின் மாண்பைப் புரிந்து கொண்டனர்.

இவ்வரலாறும் மறைவான செய்திகளை அறியும் வல்லமை நபீமார்களைப் போல் வலீமார்களுக்கும் உண்டு என்பதை எடுத்தோதுகிறது.

மறைவான விடயங்களை அறியும் வல்லமை அல்லாஹ்வுக்கே உரியது. அது “ தாத்தீ ” எனப்படும். அதேபோல் அவ்வல்லமையை நபீமார்களுக்கும், வலீமார்களுக்கும் இறைவன் வழங்கியுள்ளான். அது “ அதாயீ ”, “ வஹ்பீ ” எனப்படும்.

தலையறுந்து விழுந்த பருந்து / கழுகு 

ஒரு நாள் குத்பு நாயகம் அவர்கள் மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பருந்து / கழுகு பெருஞ் சத்தத்துடன் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அது அங்கிருந்தோரின் கவனத்தைக் கலைத்தது.

உடன் குத்பு அவர்கள் காற்றை விளித்து “ காற்றே இதன் தலையை பிடிங்கி எறி ” என்று கட்டளையிட்டார்கள். பார்த்திருக்கும் போதே அதன் தலை வேறாகி தலை ஒரு பக்கமும் உடல் ஒரு பக்கமும் விழுந்தது.

உடன் குத்பு நாயகம் தனது “ குர்ஸீ ” கதிரையிலிருந்து இறங்கி வந்து அதன் தலையை ஒரு கையிலும், உடலை மற்ற கையிலும் எடுத்து பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் என்றார்கள். உடன் அது உயிர்பெற்று மக்கள் பார்த்திருக்கும் போதே பறந்து சென்றது. இருந்தோர் அதிசயம் கண்டு குத்பு நாயகத்தின் மாண்பை உணர்ந்தார்கள்.

இறைவன் குத்பு நாயகத்தின் முந்திய சொல்லில் “ முமீத் ” மரணிக்கச் செய்பவன் எனும் திருநாமத்தை வெளியாக்கினான். அது இறந்தது. அவர்களின் பிந்திய சொல்லில் “ முஹ்யீ ” உயிர்ப்பிப்பவன் என்ற நாமத்தை வெளியாக்கினான் அது உயிர் பெற்றது. இதற்கு திருமறையில் அநேக ஆதாரங்கள் உள்ளன. விரிவை அஞ்சி தவிர்ந்தேன்.

நனவில் நடப்பதை கனவில் மாற்றியமை 

அபூமஸ்ஊத் (றஹ்) சொல்கிறார்கள் :- ஷெய்கு ஹம்மாத் (றஹ்) அவர்களிடம் அபுல் முழப்பர் என்பவர் வந்து “ நான் எழுநூறு தீனார் பெறுமதிமிக்க சாமான்களை முதலீடு செய்துள்ளேன். ஷாம் (சிரியா) நாட்டுக்கு வியாபாரத்திற்காகப் போக நாடியுள்ளேன் ” என்றார்.

அதற்கு ஷெய்கு ஹம்மாத் அவர்கள் ‘ நீ போக வேண்டாம் ’ போனால் நீ கொலை செய்யப்படுவதுடன் உனது பணம் பொருள் அனைத்தும் கொள்ளையிடப்படும் என்று சொன்னார்.

இதைக்கேட்டு உள்ளம் உடைந்தவராக வரும்போது வழியிடையே ஷெய்கு அப்துல் காதிர் முஹ்யித்தீனைக் கண்டார். இவர்களிடமும் ஷெய்கு ஹம்மாதிடம் சொன்னது போல் சொன்னார். அதைக்கேட்ட குத்பு நாயகம் அவரிடம் “ தத்ஹப் ஸாலிமன் வதர்ஜிஉ கானிமன் ” சாந்தியாகச் சென்று இலாபத்துடன் திரும்பிவா, உன்னையும் உனது பொருளையும் காப்பது எனது பொருப்பு ! என்று நவின்றார்கள்.

இதைக் கேட்டு மகிழ்ந்த அபுல் முழப்பர் சிரியா விரைந்து ஆயிரம் தீனாருக்கு தனது பொருளைவிற்றார். பொருளெல்லாம் விற்கப்பட்டு பணமே தன்னிடம் இருந்தது.

தனக்கு மலசல கூடம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அங்கு சென்ற அவர் பணத்தை அங்கு வைத்து விட்டு பணத்தை எடுக்காமல் மறந்து வந்து விட்டார்.

தனது இடத்திற்கு வந்தவருக்கு நித்திரை மிகைத்தது. உறங்கிவிட்டார். அப்போது ஒரு கனவு கண்டார். தான் ஒரு கூட்டத்தில் நிற்கிறார். திடீரென்று சிலர் வந்து அக்கூட்டத்தவரைக் கொன்று அவர்களது பொருள்களையும் கொள்ளையடிக்கின்றனர். தன்னிடம் கொள்ளையர்களில் ஒருவன் வந்து தன்னை ஆயுதத்தால் அடித்து தான் கொலை செய்யப்படுவது போல் கண்டு கண்ணை விழித்தார்.

தனது கழுத்தில் கடுமையாக நோவிருந்தது. கையை வைத்துப் பார்த்த போது இரத்தத்தின் அறிகுறி தெரிந்தது. கவலையடைந்தவராக இருக்கும் போதுதான் தனது பணம் மலகூடத்தில் வைக்கப்பட்டு தான் மறந்து வந்ததை உணர்ந்தார். கவலையுடன் அங்கே ஓடோடிச் சென்று பார்த்தார். பணம் வைக்கப்பட்ட இடத்திலேயே பாதுகாப்பாக இருந்தது. கனவால் கலங்கிய உள்ளம் பணம் கிடைத்ததும் மகிழ்ந்தது. தனது தாயகம் பக்தாதுக்குப் பயணத்தைத் தொடர்ந்தார்.

வரும்போது முதலில் யாரைச் சந்திப்பது என்று சிந்தித்தார். சிந்தனையினிடையே பக்தாத் வந்தது. வழியில் முதலில் ஷெய்கு ஹம்மாத் அவர்களையே சந்திக்க நேர்ந்தது.

முழப்பரை விழித்த ஹம்மாத் அவர்கள் நீ முதலில் ஷெய்கு அப்துல் காதிர் அவர்களையே சந்திப்பீராக ! உனக்காக அவர் பதினேழு தடவைகள் இறைவனிடம் பிரார்த்தித்தார்.

அவரது பிரார்த்தனையால்தான் நனவில் நடக்க இருந்த கொலையும், பொருள் கொள்ளையும் கனவில் மாற்றப்பட்டது. என்று நவின்றார்கள்.

இவ்வரலாறு விதியை மாற்ற முடியாதினும் அதன் வேகத்தைக் குறைக்கலாம். என்பதும் நனவில் நடப்பதை அவ்லியாக்கள் கனவில் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் என்பதும் தெளிவாகிறது.

இதேபோல் இன்னொருவரைப் பார்த்த குத்பு நாயகம் அவர்கள் நீ எழுபது பெண்களுடன் விபச்சாரம் செய்வாய் என்றார்கள். அவனுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. நாயகமே அவை என்னில் நடக்காமல் அல்லாஹ்விடம் மன்றாடுங்கள் என்று பணிவாக வேண்டிக் கொண்டார். குத்பு நாயகம் அவர்கள் அவருக்காக துஆ செய்தார்கள். அன்றிரவு அவர் ஒரு கனவு கண்டார். அதில் தான் எழுபது பெண்களுடன் விபச்சாரம் செய்கிறார்.

விழித்தவர் ஓடோடிச் சென்று குத்பு நாயகத்திடம் விளக்குகின்றார்.

உனக்காக நான் பிரார்த்தித்தேன். நனவில் நடக்க இருந்ததை இறைவன் கனவில் மாற்றி உன்னைக் குற்றத்திலிருந்து பாதுகாத்தான் என்றார்கள்.

இவ்வரலாறும் விதியை வேறு வடிவத்தில் மாற்றும் வல்லமை அவ்லியாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்பதை வலியுறுத்துகிறது.

தொடரும்.......


தொடர்-05...
எனது பாதம் வலீமார்களின் பிடறியில்

குத்பு நாயகம் அவர்கள் ஒருநாள் உரையாற்றுகையில் :- எனது காற்பாதம் உலகிலுள்ள வலீமார்களின் பிடறியில் இருக்கிறது என்று சொன்னார்கள். அவ்வாணையைச் செவியேற்ற எல்லா வலீமார்களும் குத்பு நாயகம் அவர்களின் ஆணைக்குப் பணிந்து தங்களது பிடறியைத் தாழ்த்திக் கொடுத்தார்கள். அப்போது குறாஸான் நாட்டு வனத்தில் தவத்தில் இருந்த கரீபே நவாஸ் ஹாஜாமுயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களும் அதைக் கேட்டு நாயகமே உங்கள் பாதம் எனது பிடறியில் மட்டுமல்ல எனது முகத்திலும் கண்களிலும் பதியட்டும் என்றார்கள்.
ஆனால் இஸ்பஹான் தேசத்திலுள்ள அபூபக்ர் எனும் இறைநேசர் மாத்திரம் அவர்களின் ஆணைக்கு அடிபணியவில்லை. அதனால் அவருடைய விலாயத் பறிக்கப்பட்டது. 

இறுதியில் அவரது நிலை பரிதாபமாகி ஒரு கிறீஸ்த்துவப் பெண்ணை மணம் செய்வதற்காக பன்றியை மேய்க்கும் நிலைக்குள்ளானார். 

இறுதியில் அவரது முரீதீன்கள் குத்பு நாயகத்திடம் வந்தழுது அவருக்காகத் துஆ செய்யும்படி வேண்டிக் கொண்டனர். மனமிரங்கிய நாயகம் அவருக்காகத் துஆ செய்தபோது இறைவன் அவரை மன்னித்து குத்பு நாயகத்திடம் அனுப்பி வைத்தான். அவர்களும் அவரை மன்னித்த பின் அவரது நிலை முன்புபோல் மாறியதாக வரலாறு சொல்கிறது. இது யாராயிருப்பினும் ஒரு குத்புக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 

அகமியம் நிறைந்த அருளுரைகள் 
  • என்னை எனது ஹயாத்தில் கண்டவருக்கே சுபசோபனம். 
  • அல்லது என்னைக் கண்டவரைக் கண்டவருக்கே சுபசோபனம். 
  • அல்லது எனது வபாத்தின் பின் என்னைக் கண்டவரைக் கண்டவரைக் கண்டவருக்கே சுபசோபனம். 
  • சூரியன் தினமும் உதயமாகி எனக்கு சலாம் கூறி நாட்டில் நடப்பன பற்றி எனக்கு அறிவித்தே செல்கிறது. 
  • அதேபோல் ஒவ்வொரு வருடமும் என்னிடம் வந்து ஏற்படும் “களாகத்ர் ” பற்றி ஓதிச் செல்கிறது. 
  • அதேபோல் மாதங்களும் வாரங்களும் நாள்களும் பல இரகசியங்களை என்னிடம் எடுத்தோதுகின்றன. 
  • என் இறைவன் மீது ஆணையாக சீதேவிகளும், மூதேவிகளும் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றனர். 
  • என் கண்களின் ஒளி “ லவ்ஹூல் மஹ்பூழ் ” ஏட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. 
  • ·நான் அல்லாஹ்வின் ஞானம் என்ற பல கடல்களில் மூழ்கியுள்ளேன். 
  • கியாம நாளில் நான் உங்கள் மீது அல்லாஹ்வின் ஆதாரமாக இருக்கின்றேன். 
  • நான் நாயகம் (ஸல்) அவர்களின் “ நாயிப் ” பகரமாகவும் பூமியில் அவர்களது வாரிசாகவுமுள்ளேன். 
  • என்னை உண்மை கொண்டோர் உறுதி பெற்றார். என்னைப் பொய்யாக்கியோர் நஞ்சையே உண்டார். 
  • ஷரீஅத் எனும் கடிவாளம் என்நாவில் இடப்படவில்லையானால் நீங்கள் சாப்பிடுவதையும், நீங்கள் உங்கள் வீட்டில் செய்பவற்றையும் நான் அறிவித்திருப்பேன். 
  • நீங்கள் என்முன்னே கண்ணாடிக் குவளைகள் போன்றவர்கள் உங்களின் உள்ளத்தில் உள்ளதை நான் அறிகிறேன். உங்கள் இரகசியங்களை நான் பார்த்தறிகிறேன். 
திறன்கள் 

​கௌதுல் அஃளம் அவர்கள் இறை ஞானத்தில் முக்தி பெற்றதுபோல் “ ஷரீஅத் ” சட்டக்கலையிலும் திறன் பெற்றுத் திகழ்ந்தார்கள். யார் எந்த “ மஸ்அலஹ் ” கேட்டாலும் அதற்கு உரிய விடையை உடனளிப்பார்கள். நான் எதையும் அல்லாஹ்வின் “ இல்ஹாம் ” உதிப்பைப்பெற்றே சொல்கிறேன் என்று சொல்வார்கள். 

அவர்கள் உபதேசம் செய்யும் வேளை கேள்விகளைக் கேட்டு அவர்களை மடக்கிவிட வேண்டும் என்று வருவோரின் உள்ளக்கிடக்கையை கண்ணாடி போத்தலினுள்ளிருப்பதைப் பார்ப்பது போல் பார்த்தறிந்து அவர்கள் நினைத்த வினாக்களை அவர்களிடமே கேட்டு விடையும் சொல்வார்கள். 

அதேபோல் ஒருவர் கௌது நாயகத்திடம் வந்து, நாயகமே என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். என்னவிடயம் என்று கேட்டார்கள் கௌது நாயகம். 

நாயகமே, நான் யாருமே செய்திராத வணக்கம் ஒன்றை நான் செய்வேன் என்றும் செய்யாவிட்டால் எனது மனைவி “ தலாக் ” ஆகிவிடுவாள் என்றும் சபதம் செய்தேன். ஆனால் இப்போது பார்க்கிறேன் யாருமே செய்யாத வணக்கம் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. 

மார்க்கச்சட்டமேதைகளிடம் சென்று கேட்டேன் எவரும் கை கொடுக்கவில்லை. இப்படியொரு வணக்கத்தைச் செய்யவில்லையாயின் எனது மனைவி தலாக் ஆகிவிடுவாள். நான் என்ன செய்வேன்? அப்படியொரு வணக்கம் இருக்கிறதா? என்று கேட்டார். 

அவருக்கு ஆறுதல் சொன்ன கௌதுல் அஃளம் பயப்படாதே ! உனது மனைவி தலாக் ஆகமாட்டாள். நீ கஃபஹ்வுக்குச் செல். கஃபஹ்வில் புடவை போடப்பட்ட நிலையிலேயே எல்லோரும் “ தவாப் ” செய்கின்றனர். நீர் அப்புடவையை அகற்றிவிட்டு தவாப் செய். யாரும் செய்திராத வணக்கத்தைச் செய்தவனாவாய் என்று அருளினார்கள். அவர் நிம்மதியுடன் விடைபெற்றார். கௌது நாயகத்தின் மதிநுட்பம் வாய்ந்த சிந்தனைக்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும். 
கடமைகள் 

கௌது நாயகமவர்கள் வாரத்தில் மூன்று நாள்கள் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். தடுக்கப்பட்ட நாள்களைத் தவிர ஏனைய நாட்களில் நோன்பு நோற்பார்கள். பர்ழான தொழுகைகளையும் உரிய சுன்னத்துக்களையும் நேரத்துக்குத் தொழுது நிறைவு செய்வார்கள். இரவில் நீண்ட நேரம் நின்று வணங்குவார்கள். காலை, மாலை, பகல் வேளைகளில் மாணவர்களுக்கு கல்வியைப் புகட்டுவார்கள். 
உடலமைப்பு 

கௌது அவர்கள் அதிக உயரம் உடையவர்களுமல்லர், கட்டையானவர்களுமல்லர், நடுத்தர உயரமும் , உடல் நடுத்தர பருமனும் உடையவர்கள் நெஞ்சு விரிவானவர்கள். நிறத்தில் சிவந்தவர்கள். முகம் மிக அழகானவர்கள். அமைதியான நடையுடையவர்கள். அவர்களின் முன்நின்று பேசுவோர் ​பேசிக் கொண்டிருக்கவே விரும்பும் அழகிய குணம் கொண்டவர்கள். தமக்கு எதுவும் இல்லாவிடினும் மற்றவர்களுக்குக் கொடுத்துதவும் தன்மையுடையவர்கள். தன்னுடைய பார்வையினால் இறைபக்தர்களின் பாவங்களை எரிக்கக்கூடியவர்கள். 

திருமணம் 

கௌதுல் அஃளம் அவர்களது இளமைக் காலம் இறைதவத்திலும், மறைபோதத்திலும் ஈர்க்கப்பட்டிருந்தமையால் திருமணத்தை நினைப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறைபணி செய்து வாழ்வதே பேரின்பமாகக் கருதினார்கள். 

இதையறிந்த காருண்யக்கடல், திருமணம் செய்தே ஜல்வத்தில் வாழ்ந்த வள்ளல் நபீ (ஸல்) அவர்கள். கௌது நாயகத்தின் கனவில் தோன்றி, முஹ்யித்தீனே, திருமணம் செய்து கொள்ளுங்கள் உங்கள் ஆன்மீக நெறி சம்பூரணம் பெறும் என்று நவின்றார்கள். 

நபீகளின் வேண்டுதலையடுத்து தங்களது 51ஆம் வயதில் நான்கு மனைவியரை மணந்தார்கள். அவர்களின் மூலம் 27 ஆண்களும் , 22 பெண்களும் 49 பேர் கிடைத்தனர். 

தமது முனாஜாத் – இறை பணிகளுக்கிடையே தமது மனைவி, மக்களுடன் மகிழ்வதும் குடும்பத்தேவைகளைக் கவனிப்பதும் அவர்களது அன்றாட காரியமாகவும் இருந்தது. 

நான்கு மனைவியரும், போட்டி பொறாமையின்றி கௌது நாயகத்தின் அன்பில் மிகைத்தவர்களாகவும் அவர்களுக்கு பணிவிடை செய்வதையே தங்களது பணியாகவும் கொண்டார்கள். 

கௌது நாயகத்தின் மைந்தர்கள் 

கௌது நாயகம் அவர்கள் தங்களது புதல்வர்களை உலமாஉகள் ஆகவே ஆக்கினார்கள். அனைவரும் நஹ்வு, ஸர்பு, பிக்ஹ், தஸவ்வுப், தப்ஸீர், ஹதீஸ், அகீதஹ் மற்றும் கலைகளிலும் திறமை பெற்றுத் திகழ்ந்ததுடன் அனைவரும் “ அவ்லியாஉல்லாஹ் ” இறை நேசர்களாகவே திகழ்ந்தார்கள். தங்களது தேசத்தில் மார்க்கப் பணி புரிந்தது போல் பிற தேசங்களுக்கும் சென்று மார்க்கத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்தார்கள். அவர்கள் சிலரது மஸார்க்கள் கௌது நாயகம் அவர்களின் மஸாறுக்கும் அருகிலேயே அமைந்துள்ளன. அவர்களில் பதின்மரின் பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம். 

  1. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல் வஹ்ஹாப் (றஹ்) அவர்கள். 
  2. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துர் றஸ்ஸாக் (றஹ்) அவர்கள். 
  3. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல் அஸீஸ் (றஹ்) அவர்கள். 
  4. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல்லாஹ் (றஹ்) அவர்கள். 
  5. ஹழ்றத் அஷ்ஷெய்கு முஹம்மது (றஹ்) அவர்கள். 
  6. ஹழ்றத் அஷ்ஷெய்கு ஈஸா (றஹ்) அவர்கள். 
  7. ஹழ்றத் அஷ்ஷெய்கு மூஸா (றஹ்) அவர்கள் 
  8. ஹழ்றத் அஷ்ஷெய்கு யஹ்யா (றஹ்) அவர்கள். 
  9. ஹழ்றத் அஷ்ஷெய்கு அப்துல் ஜப்பார் (றஹ்) அவர்கள். 
  10. ஹழ்றத் அஷ்ஷெய்கு முஹம்மது இப்றாஹீம் (றஹ்) அவர்கள். 

பிணியும், பிரிவும் 

குத்புல் அக்தாப், கௌதுல் அஃளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அவர்களுக்கு ஹிஜ்ரீ 561 றபீஉனில் ஆகிர் தலைப்பிறையன்றே உடல் நலம் பாதிக்கப்பட்டது. 

தான் “ தாறுல் பனா ” எனும் பொய்யுலகை விட்டும் “ தாறுல் பகா ” எனும் மெய்யுலகை அடையப்போவதை “ லௌஹூல் மஹ்பூழ் ” விதி ஓதும் பட்டோலையில் எழுதியிருப்பதைக் கண்டு தனது பிள்ளைகளுக்கும், மனைவியருக்கும் தமது முரீதீன்களுக்கும் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். 

அதன்படி முதலில் தனது மனைவி மக்களை அழைத்து இறுதியுபதேசம் செய்து தான் சென்ற பாதையில் செல்ல வேண்டுமென்றும், ஏகத்துவத்தில் உறுதியாக இருக்க வேண்டுமென்றும் வேண்டினார்கள். 

அதேபோல் தமது முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவரையும் அழைத்து இறுதியுபதேசம் செய்து பிரியாவிடை செய்தார்கள். 

இவ்வேளையில் அவர்களுக்குப் பிரியாவிடை சொல்வதற்காக மலக்குகளும் அவ்லியாக்களும் சமூகமளித்தனர். அவர்களுக்கு இடமளிக்கும்படி தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் வேண்டிய குத்பு நாயகம் அவர்கள் ஓரிரவும் பகலும் அவர்களுக்கு சலாம் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

பின்னர் குளித்து வுழூச் செய்து இஷாத் தொழுகையைத் தொழுதார்கள். அதன்பின் சுஜூதில் இருந்து தனது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள், சீடர்கள், முஸ்லிம்கள் அனைவரின் ஈருலக நலன்களுக்காக நீண்ட நேரம் பிராத்தனை செய்து இறைவன் ஏற்றுக் கொண்டபின் சுஜுதிலிருந்து மீண்டார்கள். அப்போது, சாந்தியடைந்து, நிம்மதியடைந்த ஆன்மாவே, உன் இறைவன்பால் மீள்வாயாக ! என்மீது பொருந்தியவராகவும், என் பொருத்தத்தைப் பெற்றவராகவும், என் உண்மையடியார்களில் நுழைவீராக, என் சொர்க்கத்தில் புகுந்து கொள்வீராக ( 89 : 27,28, 29,30 திருக்குர்ஆன்) என்ற திருமறை வசனம் அவர்களது இதயத்தில் ஒலித்தது. 

என் இறைவன் என்னை அழைக்கின்றான். நான் பயணம் செய்கிறேன். என்று நவின்ற அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று நவின்றவர்களாக தங்களது 91 ஆம் வயதில் ஹிஜ்ரீ 561 றபீஉனில் ஆகிர் பிறை 11 இல் ( கி.பி. 1166 )“ தாறுல் பகா ” என்ற நித்திய உலகை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். 

உலகில் இருந்தே அல்லாஹ்வில் பனாவாகி “கல்வதுல் ஜல்வத்” என்ற மகாமில் வாழ்ந்த அவர்களுக்கு மரணமேது ? அல்லாஹ்வை அடைந்த இறைநேசர்களுக்கு கவலை ஏது ? பயம் ஏது ? 

எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மையும் அவனை அறிந்து வாழ்ந்தவர்களாகவும், அவ்லியாக்களின் வழி நடந்து அவர்களை நேசித்தவர்களாகவும் ஆக்குவானாக ! 

ஆமீன்!
முற்றும் .......