Jul 2, 2015

கதிரையில் அமர்ந்து தொழுவது கூடுமா?

ஆக்கம் - மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ
+++++++++++++++++++++++++++++++++

கதிரையில் அமர்ந்து கொண்டு தொழும் தொழுகை கூடுமா? அல்லது கூடாதா? என்று அதிகமான கேள்விகள் மக்கள் மத்தியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணத்தினால் இது சம்பந்தமான விபரங்களை எல்லோரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாக்கத்தை நாம் இங்கு பதிவு செய்கிறோம்.

சுருக்கமான பதில் -  
அதிகமான கால்மூட்டு வலி காரணமாகவோ அல்லது இடுப்பு வலி காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு போன்ற வேறு சில குறிப்பான நோய்களின் காரணமாகவோ அறவே எழும்பி நிற்க இயலாதவர்களும், நிற்பதினாலோ அல்லது காலை ஊன்றி ருகூஃ சுஜூத் செய்வதினாலோ நோயோ வலியோ அதிகரிக்கும் அதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம் எனப் பயந்தோருமே பர்ழான தொழுகைகளை கதிரையில் அமர்ந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ தொழுவதற்கு ஷரீஅத் அனுமதிக்கின்றது. அவர்கள் அமர்ந்து தொழும் தொழுகையை மீட்டித் தொழ வேண்டும். என்று அவர்களுக்கு அவசியம் கிடையாது என்றும் கூறுகின்றது.


அன்றாடம் தத்தமது வேளைகளைத் தானே செய்யும் நோயற்ற,  நிற்க சக்தி பெற்ற வயோதிபர்கள் கூட கீழே அமர்ந்தோ அல்லது கதிரையில் அமர்ந்தோ பர்ழான தொழுகைகைளை தொழுவதற்கு அனுமதி கிடையாது. அவர்கள் நின்றே பர்ழான தொழுகைகளை நிறைவேற்றுவது அவர்களுக்கு அவசியமாகும்.

தானாகவோ, பிறரின் உதவியினாலோ, அல்லது சுவரில் சாய்ந்தோ நிற்க முடியுமெனில் நின்றே தொழ வேண்டும். முதுகில் கூன் விழுந்திருப்பதனால் நிமிர்ந்து நிற்க இயலாத போது கூனிய அமைப்பிலேயே தொழ வேண்டும்.

எந்த அளவிற்கு நிற்க முடியுமோ அந்த அளவு நிற்பதற்கு இயலாதவர்கள் கூட முயற்சித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாகஇயலாதோர் தனியாக தொழும் பொழுதோ அல்லது ஜமாஅத்தாக தொழும் பொழுதோ பாதிஹா சூராவில்இய்யாக நஃபுதுஎன்ற வசனம் வரும் வரை நிற்க முடிந்தால் நிற்கவே வேண்டும். அதற்காக அமர்வது கூடாது.

தக்பீர் கட்டி நிற்பதற்கு சக்தி வாய்ந்த, ஆனால் ருகூஃ சுஜூத் பணிந்து செய்ய கஷ்டமான மக்கள் தக்பீர் கட்டி நிற்பதும் ருகூஃ சுஜூத் அமர்ந்து செய்வதும் அவசியமாகும்.

அறவே நிற்க முடியாதவர்கள் அத்தஹிய்யாதில் இருப்பது போன்ற அமைப்பை முதலாவது தேர்வாகவும் அதுவும் இயலாமல் போனால் சம்மணமிட்டுத் தொழுவதை இரண்டாவது தேர்வாகவும் அதுவும் இயலாமல் போனால் கதிரையிலிருந்து தொழுவதை மூன்றாவது தேர்வாகவும் அதுவும் இயலாமல் போனால் ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டு தொழுவதை நான்காவது தேர்வாகவும் வரிசைக்கிரமமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாறாக நிற்க சக்தி பெற்றோர் பர்ழான தொழுகைகளை தரையில் அமர்ந்தோ அல்லது கதிரையில் அமர்ந்தோ தொழுவது கூடவே கூடாது. அப்படித் தொழுதால் தொழுத தொழுகையை அவர்கள் மீட்டித் தொழ வேண்டும்.

ஏனெனில் நிற்றல் என்பது தொழுகையின் றுக்ன்களில் ஒன்றாகும். அதாவது தொழுகை நிறை வேற்றுவதற்குரிய காரணங்களில் நின்றுமுள்ளதாகும். இவ்விடயத்தில் இயலாதோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் நிற்காவிட்டாலும், தலையை ஊன்றி நிலத்தில் நெற்றிபட சுஜூது செய்யாவிட்டாலும் இயன்ற வரை தங்கள் தொழுகையில் அவர்கள் செய்ததை ஏற்று அவர்கள் இயலாதோர் என்பதற்காக அவர்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்.

அமர்ந்து கொண்டு தொழும் முறையும் அதில் கவனிக்கப் பட வேண்டியவைகளும்

பொதுவாக அமர்ந்து கொண்டு தொழும் பொழுதோ அல்லது நின்று கொண்டு தொழும் பொழுதோ எம் அங்க உறுப்புக்கள் அனைத்தும் கிப்லாவை நோக்கி இருக்க வேண்டும். கால் விரல்கள் கூட திசையை விட்டும் மாறி வேறு திசைகளில் இருப்பது கூடாது.

ருகூஃவில் குனியவோ அல்லது சுஜூதில் நெற்றியை நில்தில் பதிக்கவோ இயலாது தரையிலோ, கதிரையிலோ அமர்ந்து தொழுவோர் தங்களின் ருகூஃவிலும் சுஜூதிலும் அளவால் வித்தியாசம் காட்ட வேண்டும். அதாவது ருகூஃவிலும் ஓர் கூறிப்பிட்ட அளவிலும், சுஜூதில் அக்குறிப்பிட்ட அளவை விட சற்று கூடிய அளவிலும் கையை காலில் வைத்து பணிய வேண்டும்.

ஜமாஅத்தாக ஸப்பில் அமர்ந்து தொழும் போது அருகில் நிற்கக் கூடியவர்களின் தோற்புயங்களுக்கு நேரே தன் தோற்புயத்தையும் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அமர்ந்து தொழுவோர் தமக்கு முன்னால் சிறிய மேசை ஒன்றையோ அல்லது சிறிய கதிரை ஒன்றையோ சுஜூத் செய்ய போடுவது அவசியம் இல்லை.

அமர்ந்து தொழுதாலும் நின்று தொழுத நன்மை கிடைக்குமா?

ஆம், பர்ழான தொழுகைகளை இயலாதோர் அமர்ந்து தொழுதாலும் நின்று தொழுத நன்மை கிடைக்கும். இது இமாம்களின் ஏகோபித்த முடிவாகும்.
குறிப்புசக்தியுள்ளோர் பர்ழான தொழுகைகளை  நின்றே தொழ வேண்டும். எனினும் நப்லான தொழுகைகளை அமர்ந்து தொழ சக்தியுள்ளோருக்கு அனுமதி இருக்கின்றது. ஆனால் அமர்ந்து தொழும் போது நன்மையில் இவர்களுக்கு குறைவு ஏற்படும். நின்று தொழுபவரின் பாதி அளவு நன்மை அமர்ந்து தொழுபவருக்கு கிடைக்கும்

எனவே அன்புக்குரியவர்களே!

உண்மையை அறிந்து கொள்ளுங்கள். பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள். சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள். அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள். அல்லாஹ் தஆலா உங்கள் மீது ஈருளகிலும் அவனது அருள் மழை எனும் எனும் விடா மழையைக் கொட்டுவானாக!