Feb 28, 2015

சிவாக், மிஸ்வாக். (பற்சுத்தம்) தொடர் - 2

                                                                                                                                                        தொடர் - 02
ஆக்கம் - புஸ்தானுல் ஆஷிகீன்

نَعَمْ يُكْرَهُ بِمِبْرَدٍ وَعُودِ رَيْحَانٍ يُؤْذِي، وَيَحْرُمُ بِذِي سُمٍّ وَمَعَ ذَلِكَ يَحْصُلُ بِهِ أَصْلُ السُّنَّةِ. 
كتاب «تحفة المحتاج في شرح المنهاج» لابن حجر الهيتمي

மாதுளம் குச்சி, துளசி போன்ற வாசனைச் செடிகளின் குச்சி போன்ற வற்றாலும், அரத்தினாலும், மிஸ்வாக் செய்வது மக்ரூஹ். “நஜீஸ் உள்ள குச்சி, விஷத்தன்மையுள்ள குச்சி போன்றவற்றினால் மிஸ்வாக்குச் செய்வது ஹறாம் என்றிருந்தாலும், அவற்றினால் செய்தால் சுன்னத் உண்டாகிவிடும்.”.                                                   
துஹ்பதுல் முஹ்தாஜ் பீ ஷறஹில் மின்ஹாஜ்
(ஆசிரியர்: இப்னுஹஜர் ஹைதமீ)

“மிஸ்வாக் செய்த பின் அதைக் கழுவாமல் கீழே வைப்பது மக்ரூஹ்” என்பதாக  ஹஸன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு வைத்தால்  அதனைக் கொண்டு ஷைத்தான் மிஸ்வாக் செய்வான்  என்றும் கூறியுள்ளார்கள்.
               
மிஸ்வாக்குச் செய்து துப்பிய உமிழ் நீரை மறைத்து விட வேண்டும். இல்லாவிடில் ஷைத்தான்  அதைக்கொண்டு விளையாடுவான் என்று சிலர் கூறுகின்றார்கள். அந்த எச்சிலைத் தன் உடைகளின் மீது துப்பிக் கொள்வதால் ஆபத்து உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிஸ்வாக்கு குச்சியின் இரண்டு  தலைப்புகளைக் கொண்டும்  பல் துலக்குவது  மக்ரூஹ் ஆகும். 
وَأَنْ لَا يَسْتَاكَ بِطَرَفِهِ الْآخَرِ،

பெரு விரலையும், சுண்டு விரலையும் குச்சிக்குக் கீழே 
வைத்து மற்ற மூன்றுவிரல்களையும் மேலே வைத்து மிஸ்வாகைப் பிடிப்பது சுன்னத் ஆகும்
                                                          
وَأَنْ يَجْعَلَ خِنْصَرَهُ وَإِبْهَامَهُ تَحْتَهُ وَالْأَصَابِعَ الثَّلَاثَةَ الْبَاقِيَةَ فَوْقَهُ .

விரல்கள் முழுவதையும் கொண்டு மூடிப்பிடிப்பது மக்ரூஹ் ஆகும். அவ்வாறு பிடித்துத் துலக்குவது மூல வியாதியை உண்டாக்கும் என கூறப்பட்டுள்ளது. பல் துலக்கிய மிஸ்வாகை கழுவாமல் வைப்பது மக்ரூஹ் ஆகும்.

வுழூவில் இரண்டு தடவை மிஸ்வாக் செய்வது சுன்னத் ஆகும். வுழூவுக்காக  பிஸ்மி சொல்லும் முன் ஒரு தடவை. அது பிஸ்மிக்காக செய்யப்படும் மிஸ்வாக்காகும். பிறகு முன் கை கழுவிய பின்  வாய் கொப்பளிக்கும் முன் இரண்டாவது தடவை. இது வுழூவுக்காக செய்யப்படும் மிஸ்வாக்காகும்.

மிஸ்வாக்குச் செய்வதற்கு “பிஸ்மில்லாஹ்” சொல்வது அவசியமாகவும், அதுபோல் பிஸ்மில்லாஹ்வுக்கு “மிஸ்வாக்” அவசியமாகவும் இருப்பதால், வுழூவுடைய சுன்னத்துக்களில் செயல் அளவில் உள்ள  முதல் சுன்னத்து மிஸ்வாக்குச் செய்தல் என்பதாகவும், சொல் அளவில் உள்ள முதல் சுன்னத்து “பிஸ்மில்லாஹ்” சொல்வது என்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிஸ்வாக் செய்வதால்  எழுபது  வகையான பலன்கள் இருப்பதாக அறிஞர்களில் சிலர் (வைத்திய நிபுணர்கள்) எழுதியுள்ளனர். உணவை செறிக்கச்செய்தல், சளியை  முறித்தல், இரத்தத்தை சுத்தப்படுத்தல், பித்தம் தொடர்பான  பலநோய்களைக் குணப்படுத்துதல், போன்ற பல வகையான பலன்கள் அதனால் உண்டாவதாகக் கூறப்பட்டுள்ளது.

قَالَ النَّبِي عَلَيْهِ الصَّلَاة وَالسَّلَام من أكل البغبغة وَقذف الوغوغة وَاسْتعْمل الخشبتين أَمن من الشوس واللوص 
والعلوص.

(“சுஃப்ராவில்) விரிப்பில் விழுந்ததை எடுத்துச்சாப்பிட்டு, (இரு குச்சிகளை உபயோகித்தால் அதாவது) பல் குத்தும் குச்சியைக் கொண்டு பல்லிடுக்கிலுள்ளதை எடுத்தெறிந்து, மிஸ்வாக்கை கொண்டு பல் துலக்கினால், கண்வலி, காதுக்குத்தல், வயிற்று வலி ஆகிய நோய்கள் அணுகா” என்றும் அருளப்பட்டுள்ளது.

மிஸ்வாக் செய்தல்- சுன்னத்தான  இடங்கள்.
1. ஒவ்வொரு தொழுகையிலும் தக்பீர் கட்டுவதற்குச் சற்று முன்.           2. ஜனாஸாத் தொழுகைக்கு முன்.
3. திலாவத் சஜ்தாவிற்கு முன்.
4. ஷுக்றுடைய ஸஜ்தாவிற்கு முன்.
5.உணவு சாப்பிடும் முன்னும், சாப்பிட்ட பின்னும்.
6. வாய் நாற்ற மெடுக்கும்போது.
7. தூங்குவதற்கு முன். 
8. தூங்கி விழித்தபோது.
9. மரண வேதணையின் போது.
10. உபதேசம், ஹதீஸ் கூறும்போது.
11. குத்பா ஓதும்போது.
12.குர்ஆன் ஓதும்போது.
13. திக்ரு செய்யும்போது.
14. தன் வீட்டில் நுழையும் போது.
15. வித்ருத் தொழுத பிறகு.
16. ஸஹர் நேரம்.
17. குளிக்கும்போது.
18. ஒவ்வொரு வுழூவின்போதும்.

நோன்பாளி மதியத்திற்குப் பின்னர் மிஸ்வாக்குச் செய்வது மக்ரூஹ். ஆனால்  வாய் அதிக நாற்றமுடையதாய் இருந்தால் செய்யலாம். நாவின் நீள வாட்டத்திலும், பல்லின் அகல வாட்டத்திலும், மிஸ்வாக்செய்வது சுன்னத்து. இதற்கு மாற்றமாகச் செய்வது  மக்ரூஹ். மிஸ்வாக் செய்து விட்டு தரையில் வைத்ததைக் கழுவாமல் மீண்டும் மிஸ்வாக் செய்வது மக்ரூஹ். மிஸ்வாக் குச்சியில் அழுக்கு நாற்றம் ஏதேனும் இருந்தால் அதனைக் கழுவுவது சுன்னத்.

பல்லில்லாதவர்களும் மிஸ்வாக் செய்வது சுன்னத். தங்கம், வெள்ளியினால் பல் கட்டியிருப்பவர்களுக்கும் அது சுன்னத். கண் வலி போன்ற ஏதேனும் ஒரு நோயின் காரணத்தால் மிஸ்வாக் செய்ய முடியாதவர் முடிந்த மட்டும் இலேசான  முறையில்  செய்து கொள்வார்.

மிஸ்வாக் செய்வதால் ஏராளமான பலன்கள் இருக்கின்றன. அது நபி இப்றாஹீம்  அலை அவர்கள் முதலாக எல்லா  நபிமார்களின் வணக்கமாகவும், முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது பர்ளாகவும் இருந்தது.

இமாம்களில் சிலர்:                  
قَالَ فِي الْمَجْمُوعِ، وَهَذَا، وَإِنْ لَمْ يَكُنْ لَهُ أَصْلٌ لَا بَأْسَ بِهِ

மிஸ்வாக் செய்யும்போது கீழ் வரும் ஓதலை  ஓதிக்கொள்வது சிறப்புடையது, என்றும் இவ்வோதலுக்கு அடிப்படை இல்லாதிருந்தாலும் சரி அதில் பிரட்சணை இல்லை என்றும் கூறியுள்ளனர். 
நூல் : அல்மஜ்மூஃஹ்.
ஓதல் இது :                                                            
اللَّهُمَّ بَيِّضْ بِهِ أَسْنَانِي، وَشُدَّ بِهِ لِثَاتِي، وَثَبِّتْ بِهِ لَهَاتِي، وَبَارِكْ لِي فِيهِ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

பற்சுத்தம் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதாவது: தினசரி ஒரு முறை மட்டுமே பல் துலக்குவது நினைவாற்றலை பாதித்து மறதி நோயை ஏற்படுத்தும். எனவே காலை மாலை இரவு என அன்றாடம் 2 அல்லது 3 முறை வாய் மற்றும் பற்களை சுத்தப்படுத்துவது அவசியம். உணவு உண்ட பின் நல்ல தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம், பல் சொத்தை பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இரவு படுக்க போகும் முன்பு அவசியம் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஒரு முறை மட்டுமே பல் துலக்கும் பழக்கம் உள்ளவர்களை மறதி நோய் தாக்கும் சாத்தியம் 65 சதவீதம் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு ஓரல் ஹைஜீன் எனப்படும் வாய் மற்றும் பல் சுத்தம் அவசியம் என்பதை அவ்வப்போது மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது. எனவே, 2 அல்லது 3 முறை தினமும் பல் துலக்கினால் மறதி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். குறிப்பாக பெண்கள் தினசரி குறைந்தது 2 முறை பல் துலக்குவது அவசியம். இது அவர்களின் நினைவாற்றலை கூர்மையாக்கும். மறதி நோயை விரட்டும் இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

மேகூறப்பட்ட ஆய்வு இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பு தீர்க்கதரிசியாக இவ்வுலகில் அவதரித்த அண்ணல்  நாயகத்தின் வாழ்க்கையை 100 சதவீதம் உண்மையெனப்படம் பிடித்துக்காட்டுகின்றது. நபிகள் நாயகம் அவர்களின் விடயத்தில் பற்சுத்தம் ஏன் கடமையான ஒரு நற்செயலாக ஆக்கப்பட்டது? என சிந்தித்து, ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுடன் திணித்துப்பார்த்தால்  பல் சுத்தம் குறைவாக எம்மில் இடம்பெறும் போது மறதி வருகின்றது. ஒரு தீர்க்கதரிசியின் விடயத்தில் மறதி ஏற்படுவது ஆபத்தான முடிவுகளைக் கொண்டுவந்து சேர்க்கும். தீர்க்கதரிசியாக வாழும் ஒரு நபீ, மறதியை விட்டும் நீங்கியிருப்பது அவசியம். ஆகையால் அல்லாஹ்வால் கண்மணி நாயகம் அவர்களுக்கு ஏவப்பட்ட முக்கிய விடயம் பற்சுத்தம். அது சீராக மனித வாழ்வில் நடைபெறும்போது ஆபத்தான நோய்கள், மற்றும் மறதி போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம்.    

மரக்குச்சியினால் பற்சுத்தம் ஆக்கப்பட என்ன காரணம்?

அகிலத்தைப் படைத்த வள்ள அல்லாஹ் மரத்தின் குச்சியைக்கொண்டு பல்லைதுலக்குமாறு ஏன் ஏவினான்.?

தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான பேஷ்டுகள், பிரஷ்கள் ஆகியவற்றை உபயோகித்தால்.  கனிமங்களின் தாக்குதல் அதிகமாக இருப்பதாக நவீன விஞ்ஞானம் கூறுகின்றது. ஆயினும் மரங்களில் அது இல்லை.

மிஸ்வாக் குச்சியானது வருடக் கணக்கில்   வைத்திருந்து பாவிக்க முடியும். அதனால் பற்களுக்குப் பாதிப்போ அல்லது வேறு தீவிரநோய்களோ  எம்மை அணுகா.

ஆனால் இப்போது நாம் பாவிக்கும் “பிறஷ்” போன்றவற்றை உயோகிப்பதனால் பல அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை இன்றைய உலகம் ஏற்றுக் கொள்கின்றது. 

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகையில்:

வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.

நபி வழியில் பற்சுத்தம்பேணி நடப்பதால் பக்ரீரியா நோய் தொற்றுகளில் இருந்து, கிரிமித் தாக்கங்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை மேல் வந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.

என்னையும், உங்களையும் நேரான நபி வழியில் வாழ வள்ள அல்லாஹ் ஆக்கியருள்வானாக!.

ஆபத்தான நோய்களில் இருந்து பாது காப்பானாக! ஆமீன்! யாறப்பல் ஆலமீன்!

- முற்றும் -