Apr 7, 2013

சீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு

தொடர் – 05 
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் 

நபிய்யுல்லாஹ் அல்லது வலிய்யுல்லாஹ் என்பவர்கள் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களேயாவர். இவர்களை நினைக்கும்போது அல்லாஹ்வின் நினைவுவருமேயன்றி ஷெய்தான், இப்லீஸ், பிர்அவ்ன், தஜ்ஜால், அபூஜஹ்ல், போன்றோரின் நினைவு ஒருபோதும் ஒருவருக்கும் வரமாட்டாது. நபீமார், வலீமார் ஆகியோரைப் புகழ்வதும் அவர்களின் வாழ்கை வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், அவர்கள் பெயரால் அன்னதானம் வழங்குவதும், பொதுவாக மௌலித் ஓதுவதும் அவர்களை கண்ணியப்படுத்துவதாகவே அமையும்.

அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துவது அவற்றை வணங்குவதாக ஆகமாட்டாது. ஏனெனில் இபாதத்- வணக்கம் என்பது வேறு. தஃளீம் – கண்ணியப்படுத்துதல் என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. மேற்கண்ட திருவசனங்களில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துமாறுதான் அல்லாஹ் கூறியுள்ளானே தவிர அவற்றை வணங்குமாறு கூறவில்லை. 

ஒரு வலிய்யுல்லாஹ்வின் பெயரால் அல்லது ஒரு நபிய்யுல்லாஹ்வின் பெயரால் மௌலித் ஓதுவது அவர்களைக் கண்ணியப்படுத்துவதாகுமேயன்றி அவர்களை வணங்குவதாக ஆகாது. ஒரு வலிய்யுல்லாஹ்வின் அல்லது ஒருநபிய்யுல்லாஹ்வின் சமாதிக்கு முன்னால் கைகட்டிநிற்பதும் அதை முத்தமிடுவதும் அதன்மேல் போர்வை போர்த்துவதும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அவர்களை வணங்குவதாக ஆகாது. திருக்குர்ஆனை முத்தமிடுவது அதைக் கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அதை வணங்குவதாக ஆகாது. 

ஓர் அசிரியருக்கு எழுந்து கைகட்டிநிற்பது அவரைக் கண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அவரை வணங்குவதாக ஆகாது. ஒருஷெய்கு-ஞானகுருவின் கைகால்களை முத்தமிடுவது அவரைகண்ணியப்படுத்துவதாக ஆகுமேயன்றி அவரை வணங்குவதாகஆகாது, எனவே இபாதத் – வணக்கம் என்பதற்கும், தஃளீம் – கண்ணியப்படுத்துதல் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். தெரிந்துகொண்டால் ஒரு சிருட்டியை வணங்குவதுதான் தவறேயன்றி அதைக் கண்ணியப்படுத்துதல் எந்தவகையிலும் தவறாகாதென்ற உண்மை தெளிவாகும்.

ஒருவன் ஒருசிருட்டியை அல்லாஹ் என்றுநம்பிக்கொண்டு அதற்கு ஸுஜுத்செய்தால் அல்லது அதற்கு முன்னால் றுகூஉசெய்தால், அல்லது அதற்கு முன்னால் கைகட்டிநின்றால், அல்லது அதனிடம் ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறுகேட்டால் அவன் “முஷ்ரிக்” - என்ற இணைவைத்தவனாகிவிடுவான் இவ்வாறு செய்தால் மட்டுமே “ஷிர்க்” என்ற இணைவைத்தல் உண்டாகும். இதுவே இபாதத் – வணக்கம் என்றும் சொல்லப்படும். இதற்குமாறாக ஒருவன் சிருஷ்டியை சிருட்டி என்று நம்பிக்கொண்டு அதற்கு முன்னால் கைகட்டி நின்றால், அல்லது அதனிடம் ஒரு தேவையை நிறைவேற்றித்தருமாறு கேட்டால் அவன் முஷ்ரிக் இணைவைத்தவனாக ஆகமாட்டான். இவ்வாறு செய்தல் ஷிர்க் என்ற .இணையை ஏற்படுத்தமாட்டாது. இதுவே தஃளீம் – கண்ணியப்படுத்துதல் என்று சொல்லப்படும். 

ஆனால் ஒரு சிருஷ்யை அல்லாஹ் என்று நம்பாமல் அதை சிருட்டி என்றுநம்பிக்கொண்டு அதற்கு சுஜுத் செய்தல், ருகூஉசெய்தல் இரண்டும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அறிஞர்களுக்கு கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட இவ்விரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு வலியின் அல்லது ஒரு நபியின் சமாதிக்கு முன்னால் கைகட்டிநிற்கும் ஒரு முஸ்லிம் அவரை அல்லாஹ்வின் சிருட்டி என்றுநம்பிக் கொண்டுதான் நிற்கின்றானேயன்றி அவரை அல்லாஹ் என்று நம்பிக்கொண்டு நிற்பதில்லை. இதற்கு ஆதாரம் அவன் முஸ்லிமாய் இருப்பதும், அவன் அவரை அழைக்கும்போது யாவலிய்யல்லாஹ், யாநபிய்யல்லாஹ் என்று அழைப்பதுமேயாகும். 

ஒரு வலியின் அல்லது ஒரு நபியின் சமாதியை முத்தமிடும் ஒரு முஸ்லிமி்ன் நம்பிக்கையும், அதன் மேல் மலர்தூவும் முஸ்லிமின் நம்பிக்கையும் இவ்வாறுதான் இருக்கிறது. நாகூர் நாயகம் ஷாஹுல் ஹமீத்பாதுஷா றஹ் அவர்களின் சமாதிக்கு முன்னால் நிற்கும் ஒரு முஸ்லிம் யாஷாஹல் ஹமீத் என்று அழைக்கின்றானேயன்றி யாஅல்லாஹ் என்று அவர்களை அழைப்பதில்லை. இவ்வாறுதான் ஏனைய வலீமார்களின் சமாதிக்கு முன்னால் நின்று அவர்களை அழைக்கும் முஸ்லிமின் நிலையுமாகும். 

எனவே நபீமார், வலீமார்களின் சமாதிகளைத் தரிசிக்கும் முஸ்லிம்கள், யாவரும் அவர்களை அல்லாஹ் என்று நம்பாமல் அல்லாஹ்வின் அருள்பெற்ற அவனின் சிருட்டிகள் என்ற நம்பிக்கையுடையவர்களாயிருப்பதால் அவர்களிடம் தேவைகளைக் கேட்பது கொண்டோ, மலர்தூவுவது கொண்டோ போர்வை போர்த்துவது கொண்டோ அவர்கள் முஷ்ரிக் – இணை வைத்தவர்களாகவோ, பாவிகளாகவோ ஆகிவிடமாட்டார்கள்.

ஒருவன் நபீமார், வலீமார்களிடம் தனது தேவையை நிறைவேற்றித்தருமாறு நேரடியாகக் கேட்பது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது ஆகுமென்பதே சரியான ஆய்வின் தீர்க்கமான முடிவாகும்.

அல்லாஹ்வின் சி்ன்னங்களைக் கண்ணியப்படுத்துதல் தொடர்பாக வந்துள்ள திருக்குர்ஆன் வசனங்களின்படி நபீமார்களும், வலீமார்களும் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களாயிருப்பதால் அவர்களின் வரலாறுகளைக் கூறும் மௌலித் ஓதுவதும், அன்னதானம்வழங்குவதும், மௌலித் ஓதப்படும் சபையை மலர்களாலும் மின்விளக்குகளாலும் அழகுபடுத்துவதும் அவர்களைக் கண்ணியப்படுத்தும் செயல்களேயன்றி ஷரீஅத்துக்கும் முரணானவையல்ல.

மூதேவி- ஒருவரை கௌரவிப்பதற்கும், கண்ணியப்படுத்துவதற்கும் திருக்குர்ஆனில் ஆதாரமுண்டா? என்ற என்னுடைய கேள்விக்கு விளக்கம் கூறிவிட்டாய். அல்ஹம்துலில்லாஹ். என்னுடைய கேள்விக்குஆ தாரமான நபீ மொழி உண்டா? 

சீதேவி- ஆம் “ மன்லம் யர்ஹம் ஸகீறனா வலம் யுவக்கிர் கபீறனா பலைஸ மின்னா ”சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர்களும், பெரியவர்களைக் கண்ணியப்படுத்தாதவர்களும் எங்களில் உள்ளவர்களல்லர் என்று நபீ ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த பொன்மொழி பெரியவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதிலிருந்து பெரியவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பதும், அவ்வாறு கண்ணியப்படுத்துவது “இபாதத்” வணக்கமாகாது என்பதும் தெளிவாகிறதல்லவா? திருவசனத்தில் “தஃளீம்” என்றசொல்லும், நபீமொழியில் “தவ்கீர்” என்ற சொல்லும் வந்துள்ளது. இவ்விரண்டுக்கும் கண்ணியம் செய்தல் என்ற ஒரேபொருள் என்பதையும் விளங்கிக்கொள். வயதில் முதிர்ந்த பெரியவர்களுக்குச் செய்யப்படும் கண்ணியம் இபாதத் வணக்கமாகாது.

மூதேவி- அல்லாஹ்வின் சின்னங்களையும், பெரியவர்களையும் கண்ணியப்படுத்தாவிட்டால் குற்றமா? என்ன தண்டனை? 

சீதேவி- ஆதம் அலை அவர்களுக்கு “ஸுஜுத்” செய்யுமாறு இப்லீஸ் என்பவனுக்கு அல்லாஹ் கட்டளையிட்டகதை உனக்குத் தெரியுமா? இது திருக்குர்ஆன் கூரும்ச ரிதம். ஸுஜுத் என்றால் பணிதல் . இப்லீஸ் ஆதமுக்குப் பணியவில்லை. அவருக்கு நான் பணிவதா? என்று பெருமை பேசினான். இதனால் அவன் காபிர்ஆனான். ஏன் காபிர்ஆனான் தெரியுமா? அவன் அல்லாஹ்வின் கட்டளைப்படி நபியை கண்ணியம் செய்யவில்லை. இதுவே காரணம். நபிமார்களைத் ”தஃளீம்” கண்ணியம் செய்வது ”ஈமான்” நம்பிக்கையைச் சேர்ந்தது. அவர்களைத் ”தஹ்கீர்” தரைக்குறைவாக மதிப்பீடு செய்வது ”குப்ர்” நிராகரிப்பைச் சேர்ந்தது. அதனால்தான் அவன் காபிர் ஆகிவிட்டான் என்று அல்லாஹ் கூறினான். நபிமார் பட்டியலில் வலீமார்களையும் சேர்த்துப்பார். அவர்களை கண்ணியம் செய்வது விசுவாசமும், அவர்களைத் தரக்குறைவாக எடைபோடுவது நிராகரிப்புமாகும். குப்ர் வந்துவிடும் எச்சரிக்கையாக இருந்துகொள்.

மூதேவி- நீ இது வரைசொன்னதிலிருந்து மறைந்த நபிமார், வலீமார் பெயரில் மௌலித் ஓதுவது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துதல் என்ற நல்லகாரியம் என்பது தெளிவாகிவிட்டது. இன்னும் ஒரு கேள்வி ஒருநபியை அல்லது ஒரு வலீயை எந்தளவு கண்ணியம் செய்யவேண்டும்?

சீதேவி- சுருக்கச் சொன்னால் அவர்களை அல்லாஹ் என்று நம்பக்கூடாது. அவர்களை ”இபாதத்” வணங்கவும் கூடாது. இது தவிர அவர்களை எவ்வாறும் புகழலாம். எவ்வாறும் கண்ணியம் செய்யலாம்.

மூதேவி- அல்லாஹ்வின் சின்னங்களை கண்ணியப்படுத்துவது தொடர்பாக நீ விளக்கம் சொல்லும்போது அல்லாஹ்வின் சின்னங்களாக பள்ளிவாயல்கள், மையவாடிகள், மத்ரஸாக்கள், திக்ர்மண்டபங்கள், நல்லடியார்கள், ஸாலிஹான உலமாஉகள், அவர்களின் சமாதிகள் ஆகியவற்றுக்கு கண்ணியம் செய்வது ஒருபோதும் இபாதத் – வணக்கமாகாது என்றுசொன்னாய். ஏன் வணக்கமாகாது? பெரியோர்களின் கை, கால்களை முத்தமிடுவதும், சமாதிக்கு முன்னால் கைகட்டி நிற்பதும், சமாதியை முத்தமிடுவதும் வணக்கமாகாதா?

சீதேவி- கேள்வி என்றால் நல்ல கேள்விதான். ஆனால் நாமிருவரும் இப்போது கலந்துரையாடுவது மௌலித் ஓதலாமா? இல்லையா? என்பது பற்றிய விடயமாகும். இதற்கு விளக்கம் சொல்லத்தொடங்கினால் நேரம் நீண்டுவிடும் இருந்தாலும் நீ கேட்டதற்காக மிகச்சுருக்கமான ஒரு பதில் தருகிறேன். நீசிந்திக்கும் ஆற்றலுள்ளவனாயிந்தால் சற்று விரிவுபடுத்திச் சிந்தனை செய்துபார்.

”இபாதத்” வணக்கம் என்பதற்கும் “தஃளீம்” கண்ணியம் செய்தல் என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளாதவர்கள்தான் சமாதிகளுக்குச் செல்வோரை கப்றுவணங்கிகள் என்று சொல்கிறார்கள். ”இபாததுல்குபூர்” கப்றுகளைவணங்குதல்என்பதும் ”இபாததுல் அவ்லியாஇ” அவ்லியாஉகளை வணங்குதல் என்பதும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்ற விடயமாகும் ”தஃளீமுல் குபூர்” கப்றுகளை கண்ணியப்படுத்தல் என்பதும் ”தஃளீமுல் அவ்லியாஇ” அவ்லியாஉகளைக் கண்ணியப்படுத்துதல் என்பது இஸ்லாம் அனுமதித்தவிடயமாகும்.

சமாதியாயிருந்தாலும் அவ்லியாஉகளாயிருந்தாலும், வேறு எந்தப்பொருளாயிருந்தாலும் அது அல்லாஹ் போல் தனக்குத்தானே உண்டான சுயமானதென்று நம்பிககொண்டு அதற்கு முன்னால் கைகட்டிநின்றாலும் அது வணக்கம்தான். குனிந்து நின்றாலும் அது வணக்கம்தான். இந்த நம்பிக்கையுடன் அதனிடம் எதைக்கேட்டாலும் அதுதவறுதான். ஆனால் சமாதியாயினும் அவ்லியாஉகளாகினும் அல்லது வேறு எந்தப்பொருளாயினும் அது அல்லாஹ்வின் படைப்பு தனக்குத்தானே உண்டான சுயமானதல்ல என்ற நம்பிக்கையுடன் அதற்கு முன்னால் கைகட்டிநிற்பதும், குனிந்துநிற்பதும், வணக்கமாகமாட்டாது. இந்த நம்பிக்கையுடன் அதனிடம் எதைக்கேட்டாலும் தவறில்லை. சுருங்கச் சொன்னால் எந்தவொருவஸ்துவாகினும் அதை அல்லாஹ்வுக்கு நிகராக்கி அதற்கு கண்ணியம் செய்தல்வ ணக்கமாகிவிடும். அதனிடம் கேட்பதும் தவறாகிவிடும். அந்தவஸ்துவை அல்லாஹ்வுக்கு நிகராக்காமல் அதை அல்லாஹ்வின் படைப்பு என்று நம்பிக்கொண்டு அதற்கு கண்ணியம் செய்தல் ஒருபோதும் இபாதத்ஆகாது.

இதுவே வணக்கத்துக்கும், கண்ணியத்துக்கு முள்ளவேறுபாடாகும்.

அல்லாஹ் தன்னைக்காட்டும் சின்னங்களைக் கண்ணியப்படுத்துமாறு சொல்லியுள்ளானேயன்றி அவற்றை வணங்குமாறு சொல்லவில்லை. மேற்கண்ட வித்தியாசம் தெரியாதவர்களே சமாதிக்குச் செல்வோரை கப்றுவணங்கிகள் என்று இழிந்துரைக்கின்றார்கள்.


(உரையாடல்தொடரும்……)

***==***==***==***

தொடர் – 04 
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ், 
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் 

 –பித்அத் எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களில் அநேகர், அல்லது அனைவரும் ”பித்அத்” செய்கின்ற வழிகேடர்களென்று கொள்ளவேண்டும். ஏனெனில் நபீஸல் அவர்களின் காலத்தில் ஒட்டகம், கழுதை, குதிரை போன்றவற்றிலேயே பயணம் செய்யப்பட்டது. விமானம், புகையிரதம்,கார், பஸ், மிதிவண்டி, மோட்டார்சைக்கிள் போன்றவை அவர்களின்பின் ஏற்படுத்தப்பட்டவையாகும். ஆகையால் இவற்றில் பயணம் செய்வது ”பித்அத்” என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீ சொல்வதுபோல் பித்அத் வழிகேடென்றால் மேற்கண்டவற்றில் பயணம்செய்யும் அனைவரும் வழிகேடர்களாகிவிடுவார்களல்லவா? ஒருவரா? இருவரா? உலகில் வாழும் முஸ்லிம்கள் யாவரும் வழிகேடர்களாகி விடுவார்களே! ஸுப்ஹானல்லாஹ்! இக்காலத்தை பொறுத்தவரை இவற்றில் பயணம் செய்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். நீ இவ்வாறு பயணம் செய்கிறாய்? உனது வழிகாட்டி இந்திய முஜத்தித் எவ்வாறு பயணம் செய்கிறார்? சிந்தி. நீ ”சிந்தீகா” ய் விடாதே. 

நபீ ஸல் அவர்களின் காலத்தில் குர்ஆன் பாடசாலை, அறபுக்கல்லூரி, பல்கலைக்கழகம் என்பன இருக்கவில்லை. இவை அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவையாகும். இவையாவும் “பித்அத்” என்பதில் சந்தேகமில்லை. இவற்றை ஏற்படுத்தினவர்கள் மார்க்க அறிஞர்களேயாவார். இவற்றில் கல்வி கற்றுக் கொடுப்பவர்களும் மார்க்க அறிஞர்களே! நீ சொல்வது போல் பித்அத் எல்லாம் வழிகேடென்றால் இவையெல்லாம் வழிகேடல்லவா? இவற்றை செய்பவர்களும் வழிகேடர்களல்லவா? இவ்வாறான “பித்அத்” செய்யாமல் இக்காலத்தை பொறுத்தவரையில் மக்களுக்கு எவ்வாறு கல்வி ஞானம் கொடுக்க முடியும்? 

நபீ ஸல் அவர்களின் காலத்தில் இக்கால வீடுகள் போன்ற வீடுகள் இருக்கவில்லை. பெட்றூம், பாத்றூம், கிச்சன், டைனிங் ஹோல், பெல்கனி, விஸிடர்ஸ் றூம் என்ற பெயர்களிலும் அமைப்புக்களிலும் வீடுகள் இருக்கவில்லை. இக்கால வீடுகள் அழகுப் பொருட்களால் அலங்கரிக்கப்படுவது போல் அக்கால வீடுகள் அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. நீ சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் இவ்வாறு வீடுகட்டுபவர்களும், அலங்கரிப்பவர்களும் வழிகேடர்களாகிவிடுவார்களல்லவா? 

உன் கூற்றின் படி “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு வீதமான முஸ்லிம்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். இவ்வாறு முடிவு செய்து உலக முஸ்லிம்களை வழிகேடர்களாக்குவது பெருங்குற்றம் ஆகையால்.. كل بدعةضلالة பித்அத் எல்லாம் வழிகேடு என்ற நபீஸல் அவர்களின் அந்தவசனத்துக்கு வலிந்துரை கொண்டு பொருள் கொள்ளவேண்டும். அந்த வலிந்துரை திருக்குர்ஆனுக்கோ, நபீமொழிக்கோ, இஸ்லாமிய அகீதஹ் கொள்கைக்கோ முரணானதாக இருக்கக்கூடாது. எவ்வாறு வலிந்துரை கொள்ளவேண்டுமென்பதையும், பித்அத்தின் வகைகளையும் பின்னர் சொல்கிறேன். 

எல்லா பித்அத்தும் வழிகேடென்றால் நூல்கள் – கிதாபுகள் எழுதி புத்தகவடிவில் அமைப்பதும் வழிகேடேயாகும். ஏனெனில் நபீஸல் அவர்களின் காலத்தில் இந்த அமைப்பு இருக்கவில்லை. நீ சொல்வதுபோல் ”பித்அத்” எல்லாம் வழிகேடென்றால் உலகில் தோன்றிய அறிஞர்களில் அநேகர் ”பித்அத்’’ செய்த வழிகேடர்களென்று முடிவு செய்யவேண்டும்.இதேபோல் ”பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக்கொண்டால் புனிதப் போர் ”ஜிஹாத்” செய்வதாயினும் அம்பு, வில், வாள்போன்றவை கொண்டே யுத்தம் செய்யவேண்டும். நவீன ஆயுதங்கள் கொண்டு யுத்தம் செய்யக்கூடாது.அது வழிகேடாகிவிடும். நபீஸல் அவர்களின் காலத்தில் நவீன ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. இக்காலத்தில் யஹூதிகள் நவீன ஆயுதங்களால் முஸ்லிம்களையும், முஸ்லிம் நாடுகளையும் தாக்கும்போது அவர்கள் அம்பையும், வில்லையும், வாளையும் வைத்திருந்து என்ன பயன்? 

மூதேவி: நபீஸல் அவர்களின் காலத்தின் பிறகு நபீ தோழர்கள் செய்த ”பித்அத்” துகளில் சிலதைக் கூறு பாரக்கலாம். 

சீதேவி: பல விடயங்கள் இருக்கின்றன. நீ விளங்கிக் கொள்ளவேண்டுமென்பதற்காக அவற்றில் சிலதை மட்டும் கூறுகிறேன். 

நபீயவர்களின் காலத்தில் ”தறாவீஹ்” தொழுகை ஜமாஅத்தாக- கூட்டமாகத் தொழப்படவில்லை. தோழர்கள் தனித்தனியாகவே தொழுது வந்தார்கள். நபீயவர்களின்மறைவுக்குப் பின் ஓர் இரவு உமர்றழி அவர்கள் மதீனஹ் பள்ளிவாயலில் பிரவேசித்தபோது தோழர்கள் தனித்தனியாக தொழுது கொண்டிருந்ததை கண்ட உமர்றழி அவர்கள் இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின்கீழ் ஒன்று சேர்த்தால்சிறந்தது என்று கூறிவிட்டு நபீதோழர் உபய்யிப்னு கஃப்ற ழி அவர்களை ”இமாம்” ஆக நியமித்து தறாவீஹ் தொழுகையை கூட்டமாக நடாத்த ஏற்பாடு செய்தார்கள். மறுநாளிரவு உமர்றழி அவர்கள் பள்ளிவாயலுக்குள் பிரவேசித்தபோது அனைவரும் ஓர் இமாமின் பின்னால் கூட்டமாக தொழுது கொண்டிருந்ததைக் கண்டு "نعمت البدعة هذه இது நல்லபித்அத்” என்று கூறிபுகழ்ந்தார்கள். 
அறிவிப்பு அப்துர்றஹ்மான் இப்னு அப்துல்காரீ 
ஆதாரம்- புஹாரிபக்கம் -252 பாகம் -08 

இது இரண்டாவது கலீபஹ் உமர் றழி அவர்கள் செய்த பித்அத் 
ஆகும்.அவர்கள் ”நிஃமதில் பித்அது” நல்லபித்அத் என்ற சொல்லை பயன்படுத்தியதிலிருந்து பித்அத் என்பதில் நல்லது முண்டு என்ற உண்மை தெளிவாகிறது. 

நபீயவர்களின் காலத்தில் திருக்குர்ஆன் அதை மனனம் செய்தவர்களின் மனதில் மட்டுமே இருந்தது. நபீயவர்களின் மறைவுக்குப்பின் அதை ஒன்று சேர்க்கவேண்டிய அவசியமும் ஏடுகளில் எழுதிவைக்கவேண்டிய அவசியமும்ஏற்பட்டது. இப்பணியை முதலாம் இரண்டாம் கலீபஹ்களும் நபீ தோழர் செய்த் றழி அவர்களும் செய்துமுடித்தார்கள். இது நபீ தோழர்கள் செய்தபித்அத் ஆகும். 

மூதேவி: நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நபீயவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகைஜமாஅத்தாக தொழப்பட்டதாகச் சொல்கிறார்களே! இதன் விபரம் என்ன? 

சீதேவி: தறாவீஹ் தொழுகை அவ்வாறு தொழப்படவில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் அதுசரியானதகவல் அல்ல.ஆயிஷாநாயகி றழி அவர்கள் அறிவித்ததாக புஹாரீ 8ம் பாகம் 252ம் பக்கத்தில் ஒரு ஹதீத் வந்துள்ளது. இதற்குரிய விளக்கம் வேறு விரிவையஞ்சி சொல்லவில்லை. ஆயினும் உமர்றழி அவர்கள்தான் ”தறாவீஹ்” தொழுகையை கூட்டமாகத் தொழுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். என்பதே சரியான முடிவு. ஏனெனில் நபீயவர்களின் காலத்தில் தறாவீஹ் தொழுகை கூட்டாகத் தொழப்பட்டிருந்தால் அது அவர்களின் கட்டளைப்படியே நடந்திருக்க வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் அது தொடராக நடந்துவந்தே இருக்கும் இடையில் நிறுத்தப்பட்டிருக்காது. அதோடு ”பித்அத்” என்ற சொல்லையும் அவர்கள் பயன்படுத்திருக்கத் தேவையில்லை. உமர்றழி அவர்கள் புதிதாகத் தொடங்கியதினால்தான் ”பித்அத்” என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தினார்கள். 

மூதேவி: உமர்றழி அவர்கள் இது நல்ல ”பித்அத்” என்று கூறியதிலிருந்து ”பித்அத்” தில் நல்லதும் இருப்பது போல் விளங்குகிறதே! இதன் விபரம் என்ன? 

சீதேவி: ஆம் ”பித்அத்” என்பதில் நல்லது முண்டு. கெட்டது முண்டு. ”புகஹாஉ” எனும் சட்டமேதைகள் ”பித்அத்” என்பதை ஐந்து வகைகளாகப் பிரித்துக் கூறியுள்ளார்கள். அவர்கள் தமது கண்களை மூடிக்கொண்டும், மூளைக்கு மூடிபோட்டுக் கொண்டும் அவ்வாறு பிரிக்கவில்லை. மிக நுட்பமாகவும், ஆழமாகவும் ஆராய்ந்த பின்னரே அவ்வாறு செய்துள்ளார்கள். 

மூதேவி: அவை எவை? ஒவ்வொன்றையும் உதாரணத்துடன் கூறுவாயா? 

சீதேவி: அவை ஐந்து வகைப்படும் 

ஒன்று – “பித்அத்துன் முஹர்றமதுன்” ஹறாமாக்கப்பட்ட ‘பித்அத்”. இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். செய்வது குற்றம். கதரிய்யஹ்களின் மத்ஹப் போன்றும், எந்த ஒரு மார்க்க ரீதியான நன்மையிம் தராத ஷரீஅத்துக்கு விரோதமான புதிதாக உண்டாக்கப்பட்டது போன்றும். 

இரண்டு – “பித்அத்துன் வாஜிபதுன்” கட்டாயம் செய்ய வேண்டிய “பித்அத்” செய்யாவிட்டால் குற்றம் கிடைக்கும், திருக்குர்ஆனையும், நபீ மொழியையும் ஆராயும் ஒருவன் சொல்லிலக்கணம், மொழியிலக்கணம் கற்றுக் கொள்ளுதல் போன்று. 

மூன்று – “பித்அத்துன் மன்தூபதுன்” ஸுன்னத் ஆன பித்அத் செய்தால் நன்மையுண்டு. செய்யாவிட்டால் தண்டனை இல்லை. பாடசாலைகள், கல்லூரிகள் கட்டுதல் போன்று. 

நான்கு –“பித்அத்துன் மக்றூஹதுன்” வெறுக்கப்பட்ட பித்அத். பள்ளிவாயல்களை அலங்கரிப்பது போன்று செய்தால் தண்டனையில்லாவிட்டாலும் செய்யாமல் விடுதல் சிறந்தது. 

ஐந்து – “பித்அத்துன் முபாஹதுன்” ஆகுமாக்கப்பட்ட பித்அத். செய்வதும், செய்யாமல் விடுவதும் சமம். 

இந்த விபரத்தை சட்ட மேதைகளில் அநேகர் சொல்லியுள்ளார்கள். குறிப்பாக அல் இமாம் இஸ்ஸுப்னு அப்திஸ்ஸலாம் றஹ், இமாம் நவவீ றஹ், இமாம் இப்னுல் அதீர் றஹ் ஆகியோர்கூறியுள்ளார்கள். 

மூதேவி: இவ்வாறு பிரித்தல் அவசியம்தானா? பிரிக்காமல் விட்டால் என்ன? 

சீதேவி: இதற்கான பதிலை ஏற்கனவே சொல்லிவிட்டேன். நீ கேட்பது போல் பிரிக்காமல் மொத்தமாக எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்று கொண்டால் நல்வழி பெற்ற நபீதோழர்களும், நானும், நீயும், உலகிலுள்ள முஸ்லிம்களில் அநேகரும் வழிகேடர்கள் என்று கொள்ளவேண்டிவரும். ஆகையால் பித்அத் என்பதை ஐந்தாகப்பிரிக்கவும் வேண்டும். ”குல்லுபித்அத்தின்” என்ற நபீஸல் அவர்களின் வசனத்துக்கு ”முஹர்றமதின்” என்ற ஒரு சொல்லை வலிந்துரையாகக் கொண்டு ”குல்லு பித்அதின் முஹர்றமதின்” ஹறாமாக்கப்பட்ட பித்அத் எல்லாம் வழிகேடு என்று பொருள் கொள்ளவும் வேண்டும். இப்போது நான் சொன்ன விளக்கத்தின்படி மௌலித் ஓதுதல் பித்அத் என்றுவைத்துக் கொண்டாலும் கூட அது ஹறாமாக்கப்பட்ட பித்அத்தில் சேரவுமாட்டாது. வழிகேடாகவுமாட்டாது. 

மூதேவி: நீ பித்அத் தொடர்பாக சொன்ன விளக்கத்திலிருந்தும், பித்அத் எல்லாம்வழிகேடு என்று நபீமொழிக்குக்கூறிக்காட்டிய விளக்கத்திலிருந்தும் மௌலித் ஓதுதல் கெட்ட பித்அத்தில் சேராது என்பதை விளங்கிக் கொண்டேன். இ்ன்னும் ஒரு கேள்விகேட்கிறேன். பதில் தருவாயா? மௌலித் ஓதுவதன் இலட்சியம், குறிக்கோள் என்ன? 

சீதேவி: யாரை நினைவுபடுத்தி மௌலித் ஓதப்படுகிறதோ அவரைக் கௌரவிப்பதும், கண்ணியப்படுத்துவதுமே மௌலித் ஓதுவதன் குறிக்கோளாகும். 

மூதேவி: ஒருவரை கௌரவிப்பதற்கும், கண்ணியப்படுத்துவதற்கும் திருக்குர்ஆனில் ஆதாரம்உண்டா? 

சீதேவி: ஆம் உண்டு. 
ومن يعظم شعائر الله فانها من تقوى القلوب 

எவன் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறானோ அது அவனுடைய இருதய பரிசுத்தத்தன்மையை அறிவிக்கும். உள்ளத்திலுள்ள இறையச்சத்தைக் காட்டும். 
ஸுறதுல் ஹஜ், வசனம் 32 

இத்திருவசனத்தின் சுருக்கம் என்னவெனில் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தல் இறையச்சத்தைச் சேர்ந்ததாகும் என்பதாகும். அல்லாஹ்வின் சின்னங்கள் எவை என்பதை முதலில் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் சின்னங்கள்என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளது கருத்திற்கொள்ளப்படவேண்டும். 

இன்னொரு வசனத்தில் ஒட்டகங்களைக் குறிப்பிட்டு அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 
والبد ن جعلناها لكم من شعائرالله 

ஒட்டகங்கள் உங்களுக்காக உண்டாக்கப்பட்ட அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும். 
ஸுரதுல் ஹஜ்,வசனம்-36 

இன்னுமொரு வசனத்தில் ”ஸபா” என்ற இடத்தையும், ”மர்வஹ்” என்ற இடத்தையும் அல்லாஹ்வின் சின்னங்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

إن الصفا والمروة من شعائرالله 

நிச்சயமாக ஸபாவும், மர்வஹ்வும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவையாகும். 
ஸுரதுல் பகறஹ், வசனம் -158 

அல்லாஹ்வின் சின்னங்கள் என்பன மேற்கண்ட இரண்டுவசனங்களிலும் கூறப்பட்டவைமட்டு மல்ல.ஒட்டகம்,ஸபா,மர்வஹ், என்பன தெளிவாகக் கூறப்பட்டிருந்தாலும் ஸுரதுல் ஹஜ்-ஹஜ் அத்தியாயத்தில் பொதுவாகச் சொல்லப்பட்டிருப்பது போல்எதெல்லாம் அல்லாஹ்வை நினைவூட்டுகிறதோ அதெல்லாம் அல்லாஹ்வின் சின்னங்களாகும். 

உதாரணமாக: பள்ளிவாயல், மத்ரஸஹ், அவ்லியாஉகளின் சமாதி, கஃபதுல்லாஹ், இஸ்லாமிய மதப்பெரியார் ,திருக்குர்ஆன், மார்க்க நூல் என்பன போன்று. மேற்கண்ட இவற்றைக்காணும் போது அல்லாஹ்வின் நினைவு நிச்சயமாக வருமென்பதில் ஐயமில்லை. ஆகையால் அல்லாஹ்வின் நினைவைத் தருகின்ற அவனின் சின்னங்களான இவற்றைக் கண்ணியப்படுத்துதல் வேண்டும். பள்ளிவாயலைக் கண்ணியப்படுத்துதல் என்பது அங்குதொழுதல், அதைச்சுத்தமாக வைத்திருத்தல், அங்கு வீண்பேச்சுக்கள் பேசாதிருத்தல்,சண்டை அடிதடி போன்றவற்றில் ஈடுபடாதிருத்தல், அங்கு மலசலம் கழிக்காதிருத்தல் போன்றவற்றைக் குறிக்கும். 

மத்ரஸஹ்வை கண்ணியப்படுத்துதல் என்பது அங்கு கல்வி கற்றுக்கொடுத்தல், கற்றுக்கொள்ளுதல், அதைச் சுத்தமாகவைத்திருத்தல், மார்க்கத்துக்கு முரணான செயல்களை அங்கு செய்யாதிருத்தல் போன்றவற்றைக் குறிக்கும். அவ்லியாஉகளின் சமாதியைக் கண்ணியப்படுத்துதல் என்பது அங்கு சென்று அவர்களுக்கு ஸலாம் சொல்லுதல், திருக்குர்ஆன், ஸலவாத் போன்றவற்றை ஓதி அதன்நன்மையை அவர்களுக்கு ஈஸால்-சேர்த்துவைத்தல், அவ்விடத்தை மலசலம்கழித்து அசுத்தமாக்காதிருத்தல், அவ்விடம் இருளடையாம ல்விளக்கேற்றிவைத்தல், அவர்களின் சமாதிக்குப் போர்வை போர்த்துதல், அவர்களின் சமாதிக்கு சுஜுத் செய்யாமல் அதை முத்தமிடுதல் போன்றவற்றைக் குறிக்கும். கஃபதுல்லாஹ்வை கண்ணியப்படுத்துதல் என்பது அதைத் தவாப்செய்தல், அதைச்சுத்தமாக வைத்திருத்தல், அதைமுன்னோக்கித் தொழுதல், அதில்ப திக்கப்பட்டுள்ள ஹஜருல்அஸ்வத் என்ற கல்லைமுத்தமிடுதல் போன்றவற்றைக்குறிக்கும். இஸ்லாமிய மதப்பெரியார்களைக் கண்ணியப்படுத்துதல் என்பது அவர்களின் சொற்கேட்டு நடத்தல், அவர்களிடமிருந்து அறிவுஞானங்களைக் கற்றுக்கொள்ளுதல், அவர்களைக் காணும் போது எழுந்துநிற்றல், அவர்களின் கையை முத்தமிடுதல் போன்றவற்றைக் குறிக்கும். திருக்குர்ஆனைக் கண்ணியப்படுத்துதல் என்பது அதை ஓதுதல், அதில் கூறப்பட்டவாறு வாழ்தல், அதை முத்தமிடுதல், அதைத்தரையில் வைக்காமல் உயரமான இடத்தில்வைத்தல் போன்றவற்றைக் குறிக்கும். மார்க்க நுால்களைக் கண்ணியப்படுத்துதல் என்பதும் இவ்வாறுதான். 

மேலே சொல்லப்பட்டயாவும் ”ஷஆயிருல்லாஹ்” அல்லாஹ்வின் சின்னங்கள் எனப்படும். இவற்றை ஒருவன் காணும்போது அவனுக்கு அல்லாஹ்வின் நினைவு நிச்சயமாக வருமாதலால் திருவசனத்தில் கூறப்பட்டபடி அவன் இவற்றைக் கண்ணியப்படுத்துதல் வேண்டும். 

மேலே குறிப்பிட்ட ஒட்டகங்கள் உங்களுக்காக உண்டாக்கப்பட்ட அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை என்ற வசனத்தில் அவற்றைக் கண்ணியப்படுத்துதல் என்பது எல்லா ஒட்டகங்களுக்கும் பொருத்தமானதல்ல. 

மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட ஒட்டகங்கள் ஹஜ்ஜின் போது குர்பான் செய்வதற்கென் றுவிடப்பட்ட ஒட்டகங்களை மட்டுமே குறிக்கும்.இவ்ஒட்டகங்கள் மட்டுமே அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களாகும். அவை அல்லாஹ்வின் சின்னங்கள் என்ற வகையில் அவற்றை கண்ணியப்படுத்துதல் வேண்டும்.அவற்றைக் கண்ணியப்படுத்துதல் என்பது அவற்றுக்கு அடிக்காதிருத்தல், அவற்றை பட்டினி பசியில் போடாதிருத்தல், அவற்றை ஏனைய சாதாரண ஒட்டகங்களுடன் மேயவிடாமல் அவற்றைத் தனியாக மேயவிடுதல், அவற்றின் மீது சுமைகளை ஏற்றாதிருத்தல் போன்றவற்றைக் குறிக்கும். 

மக்கஹ்வில் உள்ள ஸபா, மர்வஹ் என்ற இரண்டு மலைகளும் அல்லாஹ்வை நினைவூட்டும் சின்னங்களாகயிருப்பதால் அவையும் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவையேயாகும். 

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் அவ்லியாஉகளையும், அன்பியாஉகளையும் கண்ணியப்படுத்துவேதேயாகும். 

தொடரும்)

***==***==***==***
தொடர் –03 
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ், 
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் 

நாலாவதுஅம்சம் - மௌலித் ஓதுவதிலுள்ள நாலாவது அம்சம் அங்குகலந்து கொள்பவருக்கு சாப்பாடு இனிப்புப்பண்டங்கள் பழவகைகள் வழங்குதலாகும். 

மனிதர்களுக்கு சாப்பாடு வழங்குவது ஷரீஅத்தில் ஆகுமாக்கப்பட்டதா? இல்லையா? என்று ஆராய்ந்தறியத்தேவையில்லை. இதற்கு ஆதாரம்கூறவேண்டிய அவசியமும் இல்லை. மனிதா்களுக்கோ மிருகங்களுக்கோ உணவுவழங்குவது நல்லகாரியமென்பது சுருதிப்பிரமாணங்கள் மூலமும் யுக்திப் பிரமாணங்கள் மூலமும் எல்லோராலும் பகிரங்கமாக அறியப்பட்டவிடயமாகும். மாற்று மதத்தினர் கூட இது நல்லகாரியமென்றே சொல்வார்கள். 
ஐந்தாவது அம்சம் - மௌலித் ஓதுவதிலுள்ள ஐந்தாவது அம்சம் அதில் கலந்துகொள்ளும்மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதாகும். 

இந்த அம்சமும் நாலாவது அம்சம்போல் இ்ஸ்லாம் வரவேற்கும் அம்சமேயன்றி எந்த வகையிலும் ஷரீஅத்துக்கு முரணானதல்ல. இதையும் ஆதாரங்கள் கூறி நிறுவத்தேவையில்லை. 

எனவே மௌலித் ஓதுவதிலுள்ள ஐந்துஅ ம்சங்களில் ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வுசெய்தால் ஐந்து அம்சங்களும் இஸ்லாம் அனுமதித்த திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் அதாரமுள்ள அம்சங்களென்பது தெளிவாகும். 

ஆகையால் இஸ்லாம் அனுமதித்த ஐந்து அம்சங்கள் கொண்ட மௌலித் ஓதுதல் என்பது எந்தவகையிலும் இஸ்லாமிய ஷரீஅத்துக்கு முரணானதல்ல 
என்பது தெளிவான விடயமாகும். 

மூதேவியே!

மௌலித் ஓதுவதற்குத் திருக்குர்ஆனிலிருந்தும் நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரம் கேட்கும் நீ முன்பு நான் சொன்ன ஐந்து அம்சங்களில் ஒவ்வொன்றையும் உனது கவனத்திற்கெடுத்து ”ஷரீஅத்” என்ற தராசில் நிறுத்துப்பார். குர்ஆன்ஹதீது என்ற உரைகல்லில் உரைத்துப்பார். அவற்றில் எது ஷரீஅத்துக்கு முரணானதோ அதைவிட்டுவிடு. அவற்றில் ஒன்றுகூட அதற்கு முரணாகவில்லையானால் அனைத்தையும்செய். அதாவது மௌலித் ஓது. எ ல்லா அம்சங்களுமே முரணானதாயிருந்தால் மௌலிது ஓதுவதை நிறுத்து. 

மூதேவி: மௌலித் ஓதுவதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் தெளிவான, நேரடியான ஆதாரம்உண்டா?சுற்றிவளைக்காமல் நேரடியான ஆதாரமிருந்தால் கூறு. 

சீதேவி: திருக்குர்ஆனிலும்,ந பீமொழிகளிலும் تجوز قراءة المولد மௌலித் ஓதுவது ஆகுமென்று தெளிவாக வந்துள்ளதா? என்றுதானே நீ கேட்கிறாய். உன்னுடைய இக்கேள்வி வட்டிலப்பம் சாப்பிடுவதற்கும்பு ரியாணிசாப்பிடுவதற்கும் திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் தெளிவான நேரடியான ஆதாரம்உண்டா? என்று கேட்ப துபோலிருக்கிறது. மேற்கண்ட இரண்டும் சாப்பிடலாமென்பதற்கு திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் தெளிவான நேரடியான ஆதாரமுண்டா? என்று நான் உன்னிடம்கேட்கிறேன். உன்னால் ஆதாரம்கூற முடியுமா? உன்னால் கூறமுடியாது போனாலும் உன்னுடைய இந்திய முஜத்திதாலேனும் கூறமுடியுமா?நீயோ அவரோ திருக்குர்ஆனையும் நபீ மொழிகளையும், எவ்வளவுதான் ஆழமாக ஆராய்ந்தாலும் மேற்கண்ட இரண்டையும் சாப்பிடலாம்எ ன்பதற்கு தெளிவான நேரடியான ஆதாரம் காணவே முடியாதென்பதைப் புரிந்துகொள். இவ்விரண்டும் சாப்பிடலாமென்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ ஆதாரம் இல்லவே இல்லை. இவற்றைச் சாப்பிடலாமென்பதற்கு இவ்விரண்டிலும் தெளிவான, நேரடியான ஆதாரம் இல்லாதிருந்தும் அவற்றை நீயும் சாப்பிடுகிறாய். அவரும் சாப்பிடுகிறார்.. ஆனால் மௌலித் ஓதும் விடயத்தில் மட்டும் நீயும் ஆதாரம் கேட்கிறாய். அவரும் ஆதாரம் கேட்கிறார். ஆனால் வட்டிலப்பம் , புரியாணிசாப்பிடும் விடயத்தில் நீயும் மௌனியாகஇருக்கிறாய். அவரும் மௌனியாக இருக்கிறார். ஏன்இந்தநிலை! 

மூதேவியே! ஒன்றைத் தூயமனதோடு விளங்கிக்கொள். அதாவது வட்டிலப்பம் என்பது ஓர் இனிப்பான பண்டம். இது சீனி, பால், முட்டை போன்றவற்றால் செய்யப்படுவது. இம்மூன்றும் சேர்ந்ததே வட்டிலப்பம் எனப்படும். இம்மூன்றும் சாப்பிடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டவையாயிருப்பதால் இவை கொண்டு தயாரிக்கப்பட்டதும் ஆகுமானதே. எனவே வட்டிலப்பம் சாப்பிடலாம் என்பதற்கு திருக்குர்ஆனிலோ நபீ மொழிகளிலோ ஆதாரம் தேடத்தேவையில்லை. இவ்வாறுதான் புரியாணியின் கதையுமாகும். புரியாணிஎன்பதுஅரிசி, இறைச்சி, இஞ்சி, மிளகாய் போன்றவற்றால் செய்யப்படுவதாகும். இவையாவும் சேர்ந்ததே புரியாணி எனப்படும். இவையாவும் சாப்பிடுவது மார்க்கத்தில் ஆகுமாக்கபட்டவையாயிருப்பதால் இவை கொண்டு தயாரிக்கப்பட்ட புரியாணி சாப்பிடுவது ஆகுமானதே. ஆகையால் புரியாணிசாப்பிடுவது ஆகுமென்பதற்கு திருக்குர்ஆனிலோ நபீ மொழிகளிலோ ஆதாரம்தேடத் தேவையில்லை. தேடினாலும் கூட புரியாணிசாப்பிடுவது ஆகுமென்று தெளிவான ஆதாரம்காணமுடியாது. வட்டிலப்பம், புரியாணி என்பதற்கான அறபுச் சொற்கள் குர்ஆனிலும், ஹதீதிலும் வரவே இல்லை. 

எனவே, மௌலித் ஓதுவது ஆகுமென்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ தெளிவான ஆதாரமுண்டா? எனக்கேட்டு அடம்பிடிப்பது அறியாமையாகும். அல்லது பிடிவாதமாகும். வாதத்துக்கு மருந்தும், மருத்துவமனையும் உண்டு. ஆனால் பிடிவாதத்திற்கு அல்லாஹ்வின்பிடியே மருந்து. 
إن بطش ربك لشديد 

பலவஸ்த்துக்கள்கொண்டுதயாரிக்கப்பட்டஒன்றுக்குவட்டிலப்பம்என்றும்புரியாணிஎன்றும்சொல்லப்படுவதுபோல்நான்முன்புசொன்னஐந்துஅம்சங்கள்கொண்டஒன்றுக்குமௌலித்என்றுசொல்லப்படுமென்பதைநீதெரிந்துகொண்டாய். 

மூதேவி:நமது உரையாடலுக்கிடையில் ஒரு குறுக்குக் கேள்வி கேட்க வேண்டும் போல் தோணுகிறது. கேட்கலாமா? 

சீதேவி:குறுக்குக் கேள்வியோ, முறுக்குக் கேள்வியோ எந்தக் கேள்வியாயினும் அதற்கு விடை உண்டு. கேள். தாராளமாகக் கேள். ஏராளமாகவும் கேள். 

மூதேவி:சமீபத்தில் நமதூரான காத்தான்குடியில் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியானது. அதை இந்திய “முஜத்தித்” அவர்களின் கொள்கை வழி வாழும் என்னுடைய நண்பர்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் மௌலித் ஓதலாம் என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் தெளிவான நேரடியான ஆதாரம் காட்டினால் இரண்டு மில்லியன் ரூபா தருவதாகக் கூறப்பட்டிருந்ததே! நீ ஒன்றும் கூறாமல் மௌனியாக இருந்ததேன். மௌலித் ஓதுவது பற்றி இப்படி விரிவான விளக்கம் கொடுக்கும் நீ அந்த பிரசுரத்துக்குப் பதிலடி கொடுத்து இரண்டு மில்லியனையும் கைப்பற்றியிருக்கலாமல்லவா? 

சீதேவி: இரண்டு மில்லியன் அல்ல. இரண்டு பில்லியன் தருவதாக அவர்ககள் சொல்லியிருந்தாலும் கூட நான் அதற்கு பதில் கொடுத்திருக்கமாட்டேன். காரணம். ஒன்று அவர்கள் போல் எனக்கு பணவாசை இல்லை. இரண்டு السكوت عن الجاهل جوابه மடையன் கேட்கும் கேள்விக்கு விடை சொல்லாமல் மௌனமாயிருப்பதே அவனுக்கு விடை. இவ்விரு காரணங்களினாலுமே நான் விடை கூறவில்லை. 

மூதேவி:மௌலித் ஓதுவதற்கு திருக்குர்ஆனிலிருந்தும், நபீ மொழிகளிலிருந்தும் தெளிவான, நேரடியான ஆதாரம் கேட்பவன் மடையனா? 

சீதேவி: அவன் மடையன் மட்டுமல்ல பைத்தியகாரனும் கூட ஏன் தெரியுமா? துரியான் பழம் சாப்பிடலாம், பலாப்பழம் சாப்பிடலாம், பெட்டிஸ் சாப்பிடலாம், கட்லட் சாப்பிடலாம், சிக்னல் கொண்டு பல் துலக்கலாம், லக்ஸ் சோப் பாவிக்கலாம், மொபைல் பாவிக்கலாம் என்பதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ தெளிவானதும், நேரடியானதுமான ஆதாரம் இல்லவே இல்லை. மேற்கண்ட இவ்வஸ்துக்களின் பெயர் குறிப்பிட்டு திருக்குர்ஆன் வசனம் வரவுமில்லை. நபீ மொழிகள் வரவுமில்லை. ஆகையால் மேற்கண்டவை சாப்பிடலாம், பாவிக்கலாம் என்பதற்குத் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதுகளிலிருந்தும் நேரடியான ஆதாரம் கேட்பவன் மடையனா? புத்திக்காரனா? பைத்தியக்காரனா? 

மூதேவி: நீ சொல்வது சரிதான். இப்போதுதான் அவ்வாறு கேள்வி கேட்பவன் கல்லாத வம்பன், பொல்லாத வம்பன், அறிவில்லா வம்பன். ஒரு காசும் பெறாத வம்பன் என்பது எனக்கு விளங்குகிறது. அல்ஹம்துலில்லாஹ். எனக்கு ஒரு சந்தேகம். மௌலித் ஓதுவது கூடாது என்று சொல்லாவிட்டாலும் அதற்கு பதிலாக அது ஓதும் நேரத்தில் திருக்குர்ஆன் ஓதுவது சிறந்ததென்று நினைக்கின்றேன். ஆகையால் சிறப்புக் குறைந்ததை செய்வதை விடச் சிறப்புக் கூடியதைச் செய்வது நல்லதல்லவா? 

சீதேவி: நீ நல்லவன் தான். ஆனால் உனது மூளையைச் சற்று சலவை செய்யவேண்டும் போல்எ னக்குத் தோணுகிறது. திருக்குர்ஆன் ஓதுவதைவிட மௌலித் ஓதுவது சிறப்புக்குறைந்ததென்று உனக்குச் சொல்லித்தந்தது யார்? நீயாகக் கற்பனை செய்து சொல்கிறாயா? அல்லது யாராவது உனக்கு சொல்லித்தந்தாரா? 

மூதேவி: மௌலவீமார்கள் பள்ளிவாயல்களில் அவ்வாறு பயான் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். 

சீதேவி: நீ பொய் சொல்லவில்லை. கேட்டுத்தானிருப்பாய். ஆனால் மின்னுவதெல்லாம் பொன்னல்ல. சிவப்பெல்லாம் நெருப்பல்ல என்பது உனக்குப் புரியாதா? 

மூதேவி: சரி சொல்லு. புரிகிறது. கி.பி 570ம் ஆண்டு நபீ ஸல் அவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு கிப்லாவுக்குப் பின்னால் பிறந்தார்கள் என்று விளக்கம் சொன்ன ஒரு மௌலவீயையும் நான் கண்டுதான் இருக்கிறேன். 

சீதேவி: நீ சொல்வது போல் சிறப்புக் குறைந்ததைச் செய்யாமல் சிறப்புக் கூடியதைச் செய்ய வேண்டுமென்று யாரோ ஒரு ஸாஹிபு பேசியதைக் கேட்ட சில பள்ளிவாயல் நிர்வாகிகள் நமதூரில் மௌலித் ஓதாமல் அதற்கு பதிலாக குர்ஆன் ஓதி இருக்கிறார்கள். இந்த விடயத்துக்கு விரிவான விளக்கம் கூறி உன்னைத் திருப்திப்படுத்த முடியும். ஆயினும் குறுகிய நேர இச்சந்திப்பில் விரிவான விளக்கம் கூற முடியவில்லை. மெளலித் தொடர்பாக ஒரு நூல் விளக்கமாக எழுத நான் நாடியுள்ளேன். அதில் விரிவான விளக்கம் பெற்றுக் கொள். இங்கு சுருக்கமாகச் சொல்கிறேன். செவிமடு. செயல்படு. திருக் குர்ஆன் ஓதுவதிலும், மௌலித் ஓதுவதிலும் எது சிறப்புக் கூடியது? எது சிறப்புக் குறைந்தது? என்று நீ சிந்திக்காமல் இரண்டையும் செய்வதே சிறப்பு என்ற முடிவுக்கு வா. மௌலிதும் ஓது. குர்ஆனும் ஓது. மௌலித் என்பது எல்லா நேரமும் எல்லா நாளும் ஓத வேண்டிய ஒன்றல்ல. முஹ்யித்தீன் மௌலித் என்பது வருடத்தில் ஒரு தரம் அவர்களின் நினைவு தினத்தில் ஓதப்படுகின்ற ஒன்று. ஸுப்ஹான மௌலித் என்பது நபீ ஸல் அவர்கள் பிறந்த மாதம் ஓதப்படுகின்ற ஒன்று. புர்தஹ் என்பது வாரத்தில் ஒரு தரம் ஓதப்படுகின்ற ஒன்று. வித்ரிய்யஹ் என்பது வருடத்தில் ஒரு தரம் ஓதப்படுகின்ற ஒன்று. ஆனால் திருக்குர்ஆன் இவ்வாறானதல்ல. அது எல்லாக் காலமும், எல்லா நேரமும் ஓதப்படுகின்ற ஓதப்பட வேண்டிய ஒன்று. ஆகையால் எது சிறப்புக் கூடியது எது சிறப்புக் குறைந்தது என்று ஆராய்ந்து சிறப்புக் கூடியதை மட்டும் செய்ய வேண்டும் மற்றதை விட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்யாமல் இரண்டையும் செய்வதே சிறந்ததாகும். குர்ஆன் ஓதுதல், ஸலவாத் சொல்லுதல் திக்று செய்தல் இம்மூன்றில் எது சிறப்புக் கூடியதென்று ஆராய்ந்து அதை மடடும் செய்து கொண்டிருக்காமல் மூன்றையும் செய்ய வேண்டும். 

திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ திருக்குர்ஆனை ஓதுவது மட்டும் ஏனைய நல்லமல்களை விடச் சிறந்ததென்று சொல்லப்படவில்லை. திருக்குர்ஆன் ஓதுதல் ஒரு வகையில் சிறந்தது. திக்ர் செய்தல் இன்னொரு வகையில் சிறந்தது. ஸலவாத் சொல்லுதல் பிறிதொரு வகையில் சிறந்தது. பொதுவாக எல்லா அமல்களும் சிறப்புள்ளவைதான். சிறப்புக் கூடியதை மட்டுமே செய்ய வேண்டுமென்று ஒரு நியதி இருக்குமாயின் ஒருவன் அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதும். அதோடு ஏனைய அமல்கள் மார்க்கமாக்கப்பட்டிருக்கவும் தேவையில்லை. 

திருக்குர்ஆன் ஓதுவதால் கிடைக்கின்ற நன்மை பற்றிக் கூறிய நபீ ஸல் அவர்கள் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மையுண்டு என்று சொல்லியுள்ளார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளதால், ஓர் எழுத்துக்குப் பத்துக்குக் குறையாத நன்மைகிடைக்குமென்பதைப் புரிந்து கொள்ளவேண்டுமே தவிர திக்று, ஸலவாத், ஸுன்னத்ஆன தொழுகை போன்ற வணங்கக்களுக்கு பத்துக்கும் குறைந்த நன்மையே கிடைக்கும் என்ற கருத்தைப் புரிந்து கொள்ளக்கூடாது. 

மௌலித் ஓதுதல் என்பது ஒரு நபீயை, அல்லது ஒரு வலீயைப் புகழ்வதாயும், அவரின் வாழ்க்கை வரலாறைச் சொல்வதாயுமிருப்பதால் ஒரு வகையில் மௌலித் ஓதுவதால் திருக்குர்ஆன் ஓதுவதற்கு சமமான நன்மை கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. அல்லது அதை விடக்கூடுதலான நன்மை கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. ஒருவன் முசம்மில் என்பவனைப் புகழ்வதால் அவனுக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியை விட முசம்மிலின் அன்புக்குரிய மனைவியைப் புகழ்வதால் முசம்மிலுக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுவதுமுண்டு. 

ஆகையினால் மௌலித் ஓதுவது சிறப்புக்கூடியதா?திருக்குர்ஆன் ஓதுவது சிறப்புக்கூடியதா? என்று சிந்திக்காமல் இரண்டையும் செய்வதே சிறந்தது. 

கி-பி.க்கு விளக்கம் தெரியாதலபனுக்கும் – லபினுக்கும் வித்தியாசம் புரியாத ஒரு சில மௌலவீமார் சொல்வது போல் எல்லாவணக்கங்களை விடவும் திருக்குர்ஆன் ஓதுவதேசி றந்ததென்றிருந்தால் ஸலவாத் சொல்லுங்கள், திக்று செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கத் தேவையில்லை. மூதேவியே விஷயம் புரிகிறதா?. 

மூதேவி: ஆம் புரிகிறது. உண்மை விளக்கம் இவ்வாறிருக்க ஒரு சில மௌலவீமார் இதற்கு மாற்றமாகக் கூறுவதேன். 

சீதேவி: ஒன்றோ அறியாமையின் வெளிப்பாடு. அல்லது மின்னல் ஹபீப் கொடுக்கும் போதையின் உளறல். அவ்வளவுதான். 

மூதேவி: இன்னொரு சந்தேகம். மௌலித் என்பது நபீ (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ செய்யாத ஒன்றாயிருப்பதால் அது பித்அத் ஆகாதா? பித்அத் எல்லாம் வழிகேடு என்ற கருத்தின் படி அது வழிகேடாகாதா?வழிகேடெல்லாம் நரகத்திற்குரியவை என்ற கூற்றின் படி மௌலித் ஓதுதல் நரகத்திற்குரிய செயலாகாதா? 

சீதேவி: இது கேட்க வேண்டிய கேள்விதான். 

كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فى النار 

இப்படியொரு சரியான நபீ மொழி இருப்பதும் உண்மைதான். இந்த நபீ மொழிக்கு விளக்கம் சொல்லுமுன் ஒரு விடயத்தை உனது சிந்தனைக்கு தருகிறேன். மௌலித் என்பது ஒருவரைப் புகழ்வதும் அவரின் வாழ்க்கை வரலாறை எடுத்துரைப்பதுமென்ற அடிப்படையில் திருக்குர்ஆன் ஓதுவதும் ஒரு வகையில் மௌலித் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீமார், வலீமார்களைப் புகழ்ந்துள்ளான். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்தியம்பியுள்ளான். இந்த அடிப்படையில் திருக்குர்ஆனும் ஒரு வகையில் மௌலித் என்பதை தெளிவான அறிவுள்ள எவரும் மறுக்க மாட்டார். இந்த விளக்கத்தின் படி திருக்குர்ஆன் ஓதுகின்ற அனைவரும் மௌலித் ஓதுகின்றார்கள் என்று முடிவு செய்ய வேண்டும். நபீ ஸல் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார்களா? இல்லையா? ஓதினார்கள் என்று நீ ஏற்றுக்கொண்டால் அவர்களும் மௌலித் ஓதியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸஹாபாக்கள் திருக்குர்ஆன் ஓதியிருப்பதால் அவர்களும மெளலித் ஓதியுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நீ பின்பற்றுகின்ற இந்திய முஜத்தித் திருக்குர்ஆன் ஓதுகிறாரோ என்னவோ எனக்குத் தெரியாது. அவர் ஓதியிருந்தால் அவரும் மௌலித் ஓதியுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த விளக்கத்தின் படி மௌலித் ஓதுதல் நபீ ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் செய்ததே தவிர அது “பித்அத்” இல்லை என்பதைப் புரிந்து கொள். 

மூதேவி: நீ சொல்லும் விபரம் யாவும் “மௌலித்” என்பதற்கு நீ சொன்ன விளக்கத்தையும் வரைவிலக்கணத்தையும் தழுவியதாகவே இருக்கிறது. உன்னுடைய விளக்கத்தை விட்டுவிடுவோம். பொதுவாக “மௌலித்”என்பது நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டதென்ற அடிப்படையில் அது“பித்அத்”ஆகாதா? 

சீதேவி: நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்ட யாவும் “பித்அத்”என்பது உண்மைதான். ஆனால் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று முடிவு செய்வதே பிழையானது. 

மூதேவி: நபீ ஸல் அவர்கள் “குல்லு பித்அத்தின் ழலாலதுன்” பித்அத் எல்லாம் வழிகேடென்று தெளிவாகச் சொல்லியிருக்க நீ அதற்கு மாறாக “பித்அத்” எல்லாம் வழிகேடென்று முடிவு செய்வது பிழை என்று சொல்கிறாயே! இது நபீ ஸல் அவர்களின் பேச்சுக்கு முரணானதல்லவா? அவர்களின் பேச்சு பிழையாகுமா? 

சீதேவி: நான் சொன்னது நபீ ஸல் அவர்களின்பேச்சுக்கு முமரணானதுமல்ல. அவர்களின் பேச்சு பிழையானுதுமல்ல. ஆனால் “பித்அத்” எல்லாம் வழிகேடென்ற நபீ ஸல் அவர்களின் ஆழமான நாகரீகமான பேச்சை நீ சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். 

மூதேவி: நீ என்ன சொல்கிறாய்? சற்று விளக்கமாகக் கூறு பார்க்கலாம். 

சீதேவி: நீ சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் இஸ்லாமிய அகீதஹ் கொள்கைக்கு முரணான பல ஆட்சேபனைகள் ஏற்படும். அவற்றை எவ்வாறு சமாளிப்பது? அவற்றுக்கு எவ்வாறு விடை சொல்வது.? 

ஒன்று – நபீ ஸல் அவர்களின் தோழர்களிற் பலர் வழிகேடர்களென்று கொள்ள வேண்டி வரும். இது ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணானது. நபீ ஸல் அவர்களின் தோழர்கள் யாவரும் நேர் வழி பெற்ற நல்லடியார்களாவர். இதுவே ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாகும். நீ சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று கொண்டால் நபீ தோழர்களிற் பலர் வழிகேடர்களென்று கொள்ள வேண்டிவரும். (அல்லாஹ் என்னையும் உன்னையும் காப்பாற்றுவானாக!) நபீ ஸல் அவர்கள் செய்யாத பல விடயங்கள் அவர்களின் தோழர்கள் செய்துள்ளார்கள். அவற்றின் விபரம் பின்னால் சொல்வேன். 
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي 

எனது வழிமுறையையும், எனக்குப் பின்னுள்ள நல்வழிபெற்ற கலீபஹ்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். – பின்பற்றுங்கள் என்று நபீ ஸல் அவர்கள் சொல்லியுள்ளார்கள். இக்கூற்றிலிருந்து நபீ தோழர்கள் நபீ ஸல் அவர்கள் செய்யாத பல விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பது புலனாகிறது. ஏனெனில் நபீ ஸல் அவர்கள் செய்ததையே தோழர்களும் செய்திருந்தால் எனது வழி முறைகயைப் பின்பற்றுங்கள் என்று மட்டும் சொல்லியிருப்பார்கள். எனக்குப் பின்னுள்ள கலீபஹ்களின் வழி முறையையும் பின்பற்றுங்கள் என்று சொல்லியிருக்கமாட்டார்கள். மேற்கண்ட நபீ மொழியை இலக்கண இலக்கியத்தோடு ஆய்வு செய்தால் இவ்வுண்மை தெளிவாகும். 

எனவே நபீ தோழர்களும் ஒரு வழிமுறையை ஏற்படுத்தி “பித்அத்” செய்துள்ளார்களாயாகையால் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று கொள்ளும் போது நபீ தோழர்களும் வழிகேடர்களென்று கொள்ள வேண்டி வரும். இது இஸ்லாமிய அகீதஹ் – கொள்கைக்கு முரணானது. இது முதலாவது ஆட்சேபனை. 

( தொடரும்......... )

==***==***==***==***==

தொடர் - 02
சங்கைக்குரிய ஞானபிதா, அல்ஹாஜ்,
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ

மூதேவி – நீ சொல்லும் விளக்கத்தைக் கேட்கும்போது “மௌலித்“ ஓதலாம் போல் தெரிகிறதே!

சீதேவி – ஒரு மனிதன் தனது வாழ்வில் பின்பற்றுவற்கு திருக்குர்ஆனை விட வேறு எது இருக்கிறது? திருக்குர்ஆன் ஓதுவதை யாராவது தடைசெய்வார்களா? செய்யத்தான் முடியுமா? “மௌலித்“ ஓதக்கூடாதென்று கூறுவோர் திருக்குர்ஆன் ஓதுவதையும் தடை செய்ய வேண்டுமே? செய்கிறார்களா? இப்போது செய்யா விட்டாலும் பின்னொரு காலத்தில் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். பணமும் பதவியும் பலதும் செய்யும்.

நபீமார் வலீமார் நல்லடியார்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் புகழ்ந்துள்ளான் என்பதற்கான ஆதாரங்களை இப்போது தருகிறேன். 
01. அல்லாஹ்வும் அவனின் மலக்குகளும் நபீ (ஸல்) அவர்கள் மீது “ஸலவாத்“ சொல்கிறார்கள். விசுவாசிகளே! நீங்களும் இவர்கள் மீது ஸலவாத்தும் சலாமும் சொல்லுங்கள். 

(அல்குர்ஆன்,அத்தியாயம்- அஹ்சாப்,வசனம் – 56) 

அல்லாஹ்வும் மலக்குகளும் “ஸலவாத்“ சொல்கிறார்கள் என்றால் அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா முஹம்மதின் என்று சொல்கிறார்கள் என்பது கருத்தல்ல. 

இமாம் பைழாவீ (றஹ்) அவர்கள் இதற்கு விளக்கம் எழுதுகையில் நபீ ஸல் அவர்களின் சிறப்பை வெளிப்படுத்துவதிலும் அவர்களைக் கண்ணியப்படுத்துவதிலும் கவனம் எடுக்கின்றார்கள் என்று கூறுயுள்ளார்கள். 

(ஆதாரம் – பைழாவீ, பக்கம் 562, தப்ஸீர் றாஸி) 

இத்திருவசனத்தின் விரிவுரையில் இமாம் புஹாரி றஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். அபுல் ஆலியஹ் சொன்னார்கள். அல்லாஹ் நபி மீது ஸலவாத் சொல்வதென்றால் அவன் மலக்குகளிடம் அவர்களைப்புகழ்ந்து கூறுவதாகும். மலக்குகள் ஸலவாத் சொல்வதென்றால் நபி ஸல் அவர்களுக்காக துஆ- பிரார்த்தனை செய்வதாகும் என்று இப்னு அப்பாஸ் றழி அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்– புஹாரீ 
பாகம் – 02 பக்கம் 707 

02. உங்களுக்காக உங்களை நினைப்பதை உயர்த்தினோம். 

அல் குர்ஆன்
அத்தியாயம் – அஷ்ஷர்ஹ்,வசனம் - 04

இவ்வசனத்திற்கு விளக்கம் எழுதிய இமாம் குர்துபீ றஹ் அவர்கள் வானத்தில் மலக்குகளிடம் உங்களை நினைப்பதை உயர்த்தினோம். பூமியில் விசுவாசிகளிடம் உயர்த்தினோம். என்று கூறியுள்ளார்கள்.

ஆதாரம் – குர்துபி,பக்கம் – 107,பாகம் - 20

இதுதொடர்பாக ஷெய்குல் இஸ்லாம் இமாம் றாஸீ றஹ் அவர்கள் கூறுகையில் உங்களைத் தொடர்பவர்களைக் கொண்டு நான் உலகை நிரப்புவேன். அவர்கள் அனைவரும் உங்களைப் புகழ்வார்கள். வாயலுக்கு அப்பால் நின்று உங்களுக்கு ஸலாம் சொல்வார்கள். உங்களின் றவ்ழஹ் சமாதியின் மண்கொண்டு அவர்களின் முகத்தை தடவிக் கொள்வார்கள். உங்களின் ஷபாஅத் பரிந்துரைப்பை ஆதரவு வைப்பார்கள். மறுமைநாள்வரை உங்களின் சிறப்பு நிலையானதாகும் என குறிப்பிட்டுள்ளார்கள். 

ஆதாரம் – றாஸீ,பக்கம் – 05,பாகம் – 32

03. நிச்சயமாக நாங்கள் உங்களை சாட்சி சொல்பவராகவும் சுபச் செய்தி சொல்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பினோம். 

நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டும் அவனின் தூதரைக் கொண்டும் விசுவாசம் கொள்வதற்காகவும் அவனின் தூதரை கண்ணியப்படுத்துவதற்காகவும் அவர்களை மரியாதை செய்வதற்காகவும் காலையும் மாலையும் அவர்களைத் துதிப்பதற்காகவும்.

அல்குர்ஆன் – அல்பத்ஹ்,வசனம் - 09

இத்திருவசனத்தில் காலையும் மாலையும் நபி ஸல் அவர்களைப் புகழ வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறியுள்ளான். இதன்படி வருடத்தில் ஒருதரம் அல்லது மாதத்தில் ஒருதரம் மௌலித் ஓதாமல் தினமும் காலையிலும் மாலையிலும் ஓதவேண்டுமென்பது தெளிவாகிறது. நபீ (ஸல்) அவர்களைப் புகழவேண்டுமென்பது விளங்குகின்றது.

நபீ ஸல் அவர்கள் ஸஹாபி ஹஸ்ஸான் அவர்களுக்கு பள்ளிவாயலில் ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். அதில் அவர் தினமும் அமர்ந்து நபீ ஸல் அவர்கள் பரிசுத்த றூஹ்கொண்டு அல்லாஹ் ஹஸ்ஸானைப் பலப்படுத்துவானாக என்று பிரார்த்தனை செய்வார்கள்.

ஆதாரம் – புஹாரீ,மிஷ்காத் - பக்கம் - 410

நபீ ஸல் அவர்கள் தங்களைப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காக கவிஞர் ஹஸ்ஸான் றழி அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்ததிலிருந்து சில உண்மைகள் தெளிவாகின்றன. 

ஒன்று - நபீ ஸல் அவர்கள் மீது மஹப்பத் – அன்பு கொண்டவர்கள் அவர்களைப் புகழ வேண்டும். அது அவர்களுக்கு விருப்பமானது.

இரண்டு – அவர்களின் புகழைப் பலர் கேட்க வேண்டும். தரையில் இருந்து அவர்களின் புகழைப்பாடுவதைவிட உயரமான ஓர் இடத்தில் இருந்து பாட வேண்டும்.அதுவே சிறந்தது. தரையில் இருந்து அவர்களின் புகழ் பாடினால் அதை ஒருசிலரால் மட்டுமே கேட்கமுடியும். ஆனால் மேடை போன்ற உயரமான இடத்தில் இருந்து பாடினால் அதை பலர் கேட்கலாம். இந்த அடிப்படையில் இக்காலத்தைப் பொருத்தவரை ஒலி பெருக்கியில் இவர்களின் புகழ்பாடுவது மேடை அமைத்துப் பாடுவதைவிடச்சிறந்ததென்பது தெளிவாகிறது.

நபீ தோழர்களிற் சிலர் ஓர் இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அங்கு நபீ ஸல் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ் இப்றாஹீம் நபீ அலை அவர்களை கலீல் ஆக ஆக்கிக் கொண்டான் என்று சொன்னார். இன்னொருவர் அல்லாஹ் மூஸா அலை அவர்களுடன் பேசினான் என்றார். இன்னொருவர் அல்லாஹ் ஆதம் நபீ அவர்களைத் தேர்தெடுத்துள்ளான் என்றார். அப்போது நபீ ஸல் அவர்கள் நீங்கள் வியந்து பேசியதை நான் கேட்டேன். நீங்கள் பேசியது உண்மைதான். ஆனால் நானோ ஹபீபுல்லாஹ் இதில் எனக்கு பெருமை ஒன்றுமில்லை. மறுமை நாளில் “லிவாஉல் ஹம்த்“ என்ற கொடியை நானே சுமப்பேன். இதிலும் எனக்கு பெருமை ஒன்றுமில்லை. சுவர்க்கத்தின் வளையத்தை நானே முதலில் அசைப்பேன். இதிலும் எனக்கு பெருமைஒன்றுமில்லை. நான் முன்னோர்களிலும் பின்னோர்களிலும் மிகச் சங்கையுள்ளவன். இதிலும் எனக்குப் பெருமையில்லை என்று கூறினார்கள். 

ஆதாரம் – துர்முதீ, தாரமீ, மிஷ்காத் 
பக்கம் – 513 பாகம் - 02 

நபீ தோழர்கள் நபீ ஸல் அவர்களைப் புகழாமல் நபீ இப்றாஹீம் அலை, நபி மூஸா அலை, நபீ ஈஸா அலை, நபீ ஆதம் அலை ஆகியோரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததை செவியுற்றபோது தாங்களே தங்களின் புகழையும் மகிமையையும் தோழர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இதிலிருந்து மற்றநபிமார்கள் புகழப்படுவது போல் தாங்களும் புகழப்பட வேண்டுமென்று நபீ ஸல் அவர்கள் விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது. ஒரு நபீயின் விருப்பத்தை நிறைவேற்றுவது அவர்களின் உம்மத்துகளின் கடமையாகும். 

ஈமான் – விசுவாசம் என்பது நபீ ஸல் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவது கொண்டும் பெற்றோர் பிள்ளைகள் அனைவரைவிடவும் அவர்களின் அந்தஸ்த்தை உயர்த்துவது கொண்டுமேயன்றிச் சரிவர மாட்டாது. எவன் இதை நம்பவில்லையோ அல்லது இதற்கு மாறாக நம்பினானோ அவன் விசுவாசியல்லன். 
ஆதாரம் – ஷர்ஹ் முஸ்லிம் 
பாகம் - 01 பக்கம் - 16

முஅவ்வித் உடைய மகள் றுபையிஉ என்பவர் பின்வருமாறு கூறுகிறார்.

ஒரு நாள் நபீ ஸல் அவர்கள் என்னிடம் வந்து விரிப்பில் அமர்ந்தார்கள். அந்நேரம் சில பெண்கள் “துப்“ தஹறா அடித்துக் கொண்டு “பத்ர்“ யுத்த நேரம் மரணித்த அவர்களின் தந்தைகளின் நற் பண்புகளைப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பெண் يعلم ما في غد وفينا نبي எங்களிடம் ஒரு நபீ இருக்கின்றார்கள். அவர்கள் நாளைய விடயத்தை இன்றே அறிவார்கள் என்றுபாடினார். இது கேட்ட நபீ ஸல் அவர்கள் இவ்வாறு சொல்லாமல் நீ்ங்கள் ஏற்கனவே சொன்னதைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். 
ஆதாரம் - புஹாரீ
பக்கம் - 570 வால்யூம் - 02

இந்த நபீ மொழி வந்துள்ள அந்நத்பு الندبஎன்ற சொல் மரணித்தவர்களின் நற்பண்புகளை எடுத்துக்கூறுவதைக் குறிக்கும். 
ஆதாரம் பத்ஹல் பாரீ
பக்கம் - 316 வால்யூம் - 07

அந்தப்பெண்க يعلم ما في غد وفينا نبي எங்களிடம் ஒரு நபீ இருக்கிறார்கள். அவர்கள் நாளையவிடயத்தை இன்றே அறிவார்கள் என்று சொன்ன போது நபீ ஸல் அவர்கள் இவ்வாறு சொல்லாமல் நீங்கள் ஏற்கனவே சொன்னதையே சொல்லுங்கள் என்று கூறியதிலிருந்து அந்தக் கருத்தை அவர்கள் மறுத்து விட்டார்கள் என்று புரிந்து கொண்டு நபீ ஸல் அவர்களுக்கு நாளைய விடயம் இன்று தெரியாதென்று கருத்துக் கொள்வது பிழையானதாகும். நபீ ஸல் அவர்கள் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவும் அந்தப் பெண்கள் சொன்னதைத் தொடராகச் சொல்ல வேண்டுமென்பதற்காகவுமே அவ்வாறு சொன்னார்களென்று விளங்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில் நபீ ஸல் அவர்களுக்கு நாளைய விடயமும் தெரியும் இறுதி நாள் வரையுள்ள விடயமும் தெரியுமென்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவை ”மௌலித்“ என்று நாம் பேசி வருகின்ற இத்தலைப்புக்கு அப்பாற்பட்டதாகையால் விட்டு விட்டேன்.

மரணித்தவர்களின் நற்பண்புகளை “தகறா“ அடித்துக்கொண்டு எடுத்துக் கூறுவதற்கும் கவிகள் மூலம் பாடுவதற்கும் நபீ ஸல் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதை மேலே சொன்ன நபீ மொழி தெளிவாகக் கூறுகின்றது.

“பத்ர்“ யுத்தம் நேரம் மரணித்தவர்களின் நற்பண்புகளை “தகறா“ அடித்துக் கொண்டு கவிகள் மூலம் பாடுவதற்கு நபீ ஸல் அவர்கள் அனுமதி வழங்கியிருப்பது நபீமார்களினதும் அவ்லியாஉகளினதும் நற்பண்புகளையும் அவர்களின் வரலாறுகளையும் ஆகுமாக்கப்பட்ட இசையுடன் பாடலாம் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். 

மௌலித் உடைய ஐந்து அம்சங்களில் மூன்றாவது அம்சம் பற்றி உனக்கு இதுவரை சொன்னேன். நான் சொன்ன விபரத்தின் மூலம் நபீமார் வலீமார் நல்லடியார்கள் உயிரோடிருக்கும் போது அவர்களைப் புகழலாம் அவர்கள் மரணித்த பிறகும் அவர்களைப் புகழலாம் என்பதையும் இது ஷரீஅத்துக்கு எந்த வகையிலும் முரணானதில்லை என்பதையும் நீ அறிந்து கொண்டாய். 


وكلا نقص عليك من انباء الرسل ما نثبت به فؤادك وجائك في هذه الحق وموعظة وذكرى للمومنين

“உங்கள் இருதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவையாவும் நாம் உங்களுக்கு கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும் நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன.”
திருக்குர்ஆன் – ஸூறது ஹுத்
வசனம் - 120

நபீ ஸல் அவர்களுக்கு முன் வாழ்ந்த தூதர்களின் வரலாறுகளை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் காட்டுவதன் மூலம் அவர்களின் மனம் திருப்திப்பட்டு சாந்தி பெறுவதுடன் விசுவாசிகளுடன் நினைவூட்டலும் படிப்பினைகளும் இருக்கின்றன. எனவே முன்னர் வாழ்ந்த தூதர்கள் வலீமார்கள் நல்லடியார்கள் ஆகியோர்களின் வரலாறுகளை மக்களுக்குச் சொல்லிக் காட்டுவதால் அவர்களுக்கு மனச்சாந்தியும் பல பாடங்களும் ஏற்படும். மௌலித் ஓதும் நிகழ்வின் போது மேற்கண்ட நன்மைகள் ஏற்படுவதை அறிவுள்ள எவரும் மறுக்கமாட்டார்.

மௌலித் நிகழ்வின் போது எந்தப் பெரியார் பெயரால் மௌலித் ஓதப்படுகின்றதோ அவரின் வாழ்க்கை வரலாறுகள் அவர் செய்த தீனுடைய சேவைகள் தியாகங்கள் என்பவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம். இதனால் பொது மக்கள் பெரிதும் பயன் பெறுகிறார்கள் என்பதையும் எவராலும் மறுக்க முடியாது.

அமைதி கொண்டு ஈமான் அதிகமாவது போல் நபீமார்களினதும் முன்னோர்களினதும் வரலாறுகளைக் கேட்பது கொண்டும் ஈமான் – நம்பிக்கை அதிகமாகுமென்று இமாம் இஸ்மாயீல் புறூஸவீ றஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். 
ஆதாரம் – றூஹூல் பயான்
பக்கம் - 204 பாகம் – 04 


اولئك الذين هدى الله فبهداهم اقتده

அவர்கள் அல்லாஹ் வழிகாட்டியவர்களாவர் அவர்களின் நல்வழியை நீங்கள் பின்பற்றுவீர்களாக!
ஆதாரம் - அல்குர்ஆன் 
ஸுறத்துல் அன்ஆம் 
வசனம் - 90

இத்திருவசனம் மூலம் அல்லாஹ் நல்வழிகாட்டிய நல்லடியார்களைப் பின்பற்றி வாழுமாறு நபீ ஸல் அவர்களைப் பணித்துள்ளான். அவர்கள் நபீமார் வலீமார் நல்லடியார்களாவர் இத்திருவசனத்தின் மூலம் அல்லாஹ் நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்ந்துள்ளான் என்பது தெளிவாகின்றது. 

ஒருவன் பின்பற்ற விரும்பினால் மரணித்தவர்களை பின்பற்றட்டும். ஏனெனில் உயிருள்ளவன் பித்னஹ் குழப்பத்துக்குரியவனாயிருப்பான். மரணித்தவர்கள் என்பது நபீ தோழர்களைக் குறிக்கும். அவர்கள் இச் சமூகத்தின் மிகச்சிறந்தவர்களாவர். அவர்கள் உள்ளத்தால் நல்லவர்கள். அறிவால் ஆழமானவர்கள். கஷ்டத்தால் குறைந்தவர்கள். அல்லாஹ் அவர்களைத் தனது நபீயின் நண்பர்களாகவும் தனது மார்க்கத்தை நிலை பெறச்செய்வதற்காகவும் தெரிவு செய்தான். அவர்களின் சிறப்புக்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள். ஏனெனில் அவர்கள் நல்வழியில் உள்ளார்கள். 
ஆதாரம் – றஸீன் மிஷ்காத்
பக்கம் – 32 - பாகம் – 01

(தொடரும்....)

==***==***==***==***==

தொடர் - 01 
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ், 
மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் 


சீதேவி –நண்பா! நீ எங்கே செல்கிறாய்? 

மூதேவி – இந்திய நாட்டிலிருந்து முஜத்தித் ஒருவர் இலங்கை வந்துள்ளார். கொழும்பில் இன்றிரவு உரை நிகழ்த்தவுள்ளார். அவரின் உரை கேட்கச்செல்கிறேன். நீ எங்கே செல்கிறாய்? 

சீதேவி – கொழும்பிலுள்ள எனது நண்பன் வீட்டிற்கு சிரியாவிலுள்ள ஒரு ஷெய்கு – ஞான குரு வந்துள்ளார். அவரைக்கண்டு அருள் பெறச்செல்கிறேன். 

மூதேவி – உன் கையில் இருப்பதென்ன? 

சீதேவி – ஒன்று மௌலித் கிதாபு. மற்றது றாதிப் கிதாபு 
மூதேவி – மிகப் பெரிதாக இருக்கின்றதே! எல்லாமே மௌலித் கிதாபுதானா? 

சீதேவி – ஆம். எல்லாமே மௌலித் கிதாபுதான். 

மூதேவி – யார் எழுதியது? யார் பெயரால் எழுதப்பட்டது. 

சீதேவி – தமிழகத்தின் தலைசிறந்த மார்க்கமேதை அல்லாமஹ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹ் அவர்கள் 500 அவ்லியாஉகள் பெயரால் எழுதியது. 

மூதேவி – நீயும் கப்று வணங்கிகளுடன் பித்அத்காரர்களுடனும் சேர்ந்து கொண்டாயா? 

சீதேவி – வார்த்தைகளை அளந்து பேசு. நிதானமாகவும் பேசு. குனிந்துபார். அதுவே உனக்கு பதில் சொல்லும். மண்டையில் சரக்கில்லாதவனே! நீ சாப்பிடுவது சோறா? வைக்கோலா? 

மௌலித் ஓதுவது கப்று வணக்கமென்றும் பித்அத் என்றும் சொல்கின்றாயே! முதலில் மௌலித் என்றால் என்ன? பித்அத் என்றால் என்ன? என்பதை விளக்கமாகத் தெரிந்து கொள். அதன்பிறகு அது கப்று வணக்கமா? பித்அத்தா? என்பதை தெளிவாக அறிந்து கொள்வாய் விளக்கமின்மையே குழப்பத்திற்குக் காரணம். 

மூதேவி – நண்பா! நீ என்ன சொல்கிறாய்? மௌலித் பற்றி சற்றுவிளக்கமாகச் சொல். 

சீதேவி – மௌலித் என்பது அறபுச்சொல். இதற்கு மொழிஅடிப்படையில் ஓர் அர்த்தமும் “இஸ்திலாஹுல் முஸ்லிமீன்” முஸ்லிம்களின் பரிபாஷையில் இன்னோர் அர்த்தமும் உண்டு. இச்சொல்லுக்கு மொழிஅடிப்படையில் பிறந்த இடம் பிறந்த நேரம் என்று பொருள்வரும். உதாரணமாக “மௌலிது முஸம்மில்” என்பது போன்று இதற்கும் முஸம்மில் பிறந்த இடம் அல்லது முஸம்மில் பிறந்த நேரம் என்று கொள்ளலாம். “மௌலூத்” என்ற சொல்லுக்கு பிறந்த சிறுபிள்ளை என்று பொருள் வரும் உதாரணமாக “மௌலூது முஸம்மில்” என்பது போன்று. இதற்கு முஸம்மிலின் பிள்ளை என்று பொருள்வரும். “விலாதத்“ என்ற சொல்லுக்கு பிறப்பு என்று பொருள்வரும். உதாரணமாக “விலாததுமுஸம்மி்ல்“ முஸம்மிலின் பிறப்பு என்பது போன்று அநேகர் விபரம் தெரியாமல் மௌலித் என்று எழுதவேண்டிய இடத்தில் “மெளலூத்“ என்று எழுதுகிறார்கள். இது தவறு இச் சொல்லை பொது மக்கள் “மஹ்லத்து” என்று சொல்வர். இதுவும் தவறுதான். 

மூதேவி – “மௌலித்“ என்ற சொல்லுக்கு மொழி அடிப்படையில் விளக்கம் சொன்னாய். மிகப் பிரமாதம். ஆனால் “இஸ்திலாஹுல் முஸ்லிமீன்“ முஸ்லிம்கள் வழக்கத்தில் அதற்கு இன்னோர் அர்த்தம் இருப்பதாக சொன்னாய் அல்லவா? அதைச் சற்று சிளக்கமாகச் சொல். 

சீதேவி –முஸ்லிம்களிடம் மௌலித் என்பதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் சொல்லப்படும். 

“பள்ளிவாயல் மத்ரஸ்ஹ் - பாடசாலை வீடு கடை போன்ற இடங்களில் மனிதர்கள் ஒன்று கூடி திருக்குர்ஆன் வசனங்களிற் சிலதை ஓதி ஒரு நபி அல்லது ஒரு வலீ அல்லது ஒரு நல்ல மனிதரைப் புகழ்ந்து அவரின் பிறப்பு இறப்பு பற்றிக் கூறி அவரின் வாழ்விலும் அவர்மறைந்த பின்னும் அவரால் வெளியான அற்புதங்களைக் கூறி, அவரின் உயர்குணங்களையும் விஷேட தன்மைகளையும் எடுத்தோதி, அவர் சொன்ன பேச்சுக்கள் தத்துவங்களை பேசி, அல்லது பாடி அங்கு கூடும் மக்களுக்கு சாப்பாடு பழவகை வினியோகம் செய்து மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி அவர்களைக் கௌரவித்தல்”. 

இவ்வாறு செய்தலே முஸ்லிம்களிடம் மௌலித் ஓதுதல் என்று சொல்லப்படும்.இதுவே மௌலித் ஓதுதல் என்பதன் வரைவிலக்கணமாகும். 

மூதேவி – மேற்கண்ட அம்சங்கள் கொண்ட ஒன்றுக்கே மௌலித் ஓதுதல் என்று நீ சொல்கிறாய். இதற்கு திருக்குர்ஆனிலும் நபீ மொழிகளிலும் ஆதாரம்முண்டா? 

சீதேவி – நான் முன்பு சொன்ன வரைவிலக்கணத்தை நீ சரியாக புரிந்து கொண்டால் என்னிடம் இப்படியொரு கேள்வி கேட்கமாட்டாய். அந்த வரைவிலக்கணத்தில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவற்றை ஜந்து அம்சங்களாகச் சுருக்கி ஆராய்ந்து பார்க்கலாம். 

01. மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல். 

02. திருக்குர்ஆன் ஓதுதல். 

03. நபீமார் வலீமார் நல்லடியார்களைப்புகழ்தல். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுதல். அவர்களின் அற்புதங்கள் விஷேட தன்மைகள் உயர் குணங்கள் அவர்கள் செய்த சேவைகள். அவர்கள் பேசிய தத்துவங்கள் எனபவற்றை கூறுதல். 

04. மனிதர்களுக்கு சாப்பாடு இனிப்புப் பண்டங்கள் வழங்குதல். 

05. மார்க்க அறிஞர்களுக்கு அன்பளிப்பு வழங்குதல். 

மேற்கண்ட ஐந்து அம்சங்களும் அடங்கிய ஒன்றே மௌலித் ஓதுதல் என்றழைக்கப்படுகிறது. 

முதலாவது அம்சம் 

மௌலித் ஓதுவதிலுள்ள ஐந்து அம்சங்களில் முதலாவது அம்சம் மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதல். இது பற்றிச் சற்று ஆராய்வோமா? நிதானமாகக் கேள். பக்க சார்பற்ற மன நிலையுடன் செவிமடு. 

பள்ளிவாயல், பாடசாலை, வீடு, கடை போன்ற இடங்களில் மௌலித் ஓதுவதற்காக மனிதர்கள் ஒன்று கூடுதல் இஸ்லாம் அனுமதித்த ஒன்றேயாகும். மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுதலை ஷரீஅத் – புனித மார்க்கம் வரவேற்கிறதேயன்றி அதை வெறுக்கவில்லை. இதனால்தான் ஐங்காலத் தொழுகையில் மனிதர்கள் ஜமாஅத் கூட்டமாக சேர்ந்து தொழுவது நற்செயலாக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை ஜும்அஹ் தொழுகையை மனிதர்கள் கூட்டமாக சேர்ந்து தொழுதல் கடமையாக்கப்பட்டதும் இதனால்தான். மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்ளுதல் ஒன்று. ஸலாம் சொல்லிக் கொள்வது பற்றி அநேக நபி மொழிகள் வந்துள்ளன. விரிவையஞ்சி அவற்றை சொல்லவில்லை. ஸலாம் சொல்லிக் கொள்வது ஷரீஅத்தில் ஸுன்னத் ஆக்கப்பட்ட விடயமாகும். 

ஒருவர் இன்னொருவருக்கு முதலில் “அஸ்ஸலாமு அலைக்கும்“ என்று சொல்வது ஸுன்னத் என்றும் மற்றவர் அதற்கு “வஅலைக்கு முஸ்ஸலாம்“ என்று பதில் சொல்வது “வாஜிபு“ கடமை என்றும் மார்க்கம் சொல்கிறது. மனிதர்கள் ஓர் இடத்தி்ல் ஒன்று கூடுவதால் ஸலாம் சொல்லும் வணக்கத்துக்கு வழி ஏற்படுகிறது. அதோடு ஒருவர் இன்னொருவரிடம் குசலம் விசாரித்தல் – சுக செய்தி கேட்டறிந்து கொள்ளுதல். என்ற வணக்கமும் மனிதர்கள் ஒன்று கூடுவதால் உண்டாகிறது. 

ஒருவர் இன்னொருவரி்ம் “கைபஹாலுக“ உன் நிலமை எப்படி? என்று சுகம் விசாரிப்பது மார்க்கம் வேண்டிக் கொண்ட விடயமாகும். இவை மட்டுமன்றி மனிதர்கள் ஒன்று கூடுவதால் ஒருவர் மற்றவருடன் “முஸாபஹஹ்“ கை கொடுத்தல் என்ற வணக்கத்திற்கும் வழி ஏற்படுகிறது. கை கொடுத்தல் கை குலுக்குதல் என்பது சாதாரணவிடயமல்ல. மனிதர்களிடையே இது சாதாரண காரியமாகக்கருதப்பட்டாலும் இதில் ஆழமான தத்துவம் இருப்பதாக தத்துவ ஞானிகள் கூறுகின்றனர். இதன் விபரத்தை இங்கு சொல்லவில்லை. தெரிந்துகொள்ள விரும்புவோர். தொடர்பு கொள்ளலாமல்லவா? 

மேற்கண்ட நன்மைகள் யாவும் மனிதர்கள் ஒன்று கூடுவதாலேயே ஏற்படுகின்றன. எனவே மௌலித் ஓதுவதற்காக மனிதர்கள் ஒன்று கூடுதல் நல்லகாரியமேயன்றி அது ஷரீஅத்திற்கு எந்த வகையிலும் முரணானதல்ல. 

மூதேவி – நீ இப்போது கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ சொன்ன நன்மைகள் எல்லாம் மனிதர்கள் ஒன்று கூடும் போது மட்டுமே ஏற்படும். ஆனால் ஒருவர் தனிமையாக மௌலித் ஓதும் போது மேற்கண்ட நன்மைகளுக்கு வழியில்லையே. இதற்கு நீ என்ன சொல்வாய்? 

சீதேவி – உனது கேள்வி சரியானதே. மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடி மௌலித் ஓதுவதே வழக்கம். தனிமையாக ஓதுவது மிகக்குறைவு. ஒருவர் தனிமையாக ஓதினால் மேற்கண்ட நன்மைகள் உண்டாக வழியில்லை. இதனால் தான் மௌலித் ஓதவிரும்பும் ஒருவர் தன்னுடன் இன்னும் சிலரை சேர்த்துக் கொள்கிறார். அதே போல் மௌலித் ஓத விரும்பும் வீட்டவர்கள் ஓதத் தெரிந்த ஒருவரை மட்டும் அழைக்காமல் பலரை அழைக்கின்றார்கள். 

மூதேவி – “அல்ஹம்துலில்லாஹ்“ உனது விளக்கத்தின் மூலம் எனது அறியாமை கொஞ்சம் கொஞ்சமாக அகன்று செல்வதை நான் உணர்கிறேன். இரண்டாவது அம்சம் பற்றிச் சொல் பார்க்கலாம். 

இரண்டாவது அம்சம் 

சீதேவி – திருக்குர்ஆன் ஓதுதல். இது இரண்டாவது அம்சம். மௌலித் ஓதுவதற்கு ஒரு முறையுண்டு. ஓர் அமைப்பும் இருக்கின்றது. நமக்கு முன் வாழ்ந்த நல்லடியார்கள் மௌலித் எவ்வாறு ஆரம்பிக்கவேண்டும் எவ்வாறு முடிக்கவேண்டும். 

என்பதைக் காட்டித் தந்துள்ளார்கள். முதலில் யார் பெயரால் ஒதவேண்டுமோ அவரின் பெயர் குறித்து “அல்பாதிஹஹ்“ என்று கூறி ஸுறத்துல் பாத்திஹஹ், ஸுறத்துல் இக்லாஸ், முஅவ்விததைன் - குல்அஊது பிறப்பில் பலக் குல்அஊது பிரப்பின்னாஸ் போன்ற திருவசனங்களையும் இன்னா பதஹ்னா லக பத்ஹன் முபீனன் என்று ஆரம்பமாகும் திருவசனத்தையும் ஓதியபின் மௌலித் ஆரம்பிக்கப்படும். திருக்குர்ஆன் ஓதுவது ஷரீஅத்துக்கு முரணாணதென்று எந்த ஒரு பைத்தியக்காரன் கூடச் சொல்லமாட்டான். ஆகையால் ஆதாரங்கள் கூறி இதை நிறுவத் தேவையில்லை. 

இனி மௌலிதின் மூன்றாவது அம்சம் பற்றிச் சொல்லிக் காட்டுகிறேன். 

மூன்றாவது அம்சம் 

நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்தல் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுதல். அவர்களின் அற்புதங்கள் விஷேட தன்மைகள் உயர் குணங்கள் அவர்கள் செய்த சேவைகள் அவர்கள் பேசிய தத்துவங்கள் என்பதைக் கூறுதல். 

மூன்றாவது அம்சத்தில் கூறப்பட்ட விடயங்கள் யாவும் இஸ்லாமிய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட விடயங்களே. இவற்றிற்கு ஆதாரங்கள் கூறி விரிவாக விளக்கம் கூறத் தேவையி்ல்லை. அல்லாஹ் திருக்குர்ஆனில் நபீமார் வலீமார்களைப் புகழவில்லையா? இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறவில்லையா? அவர்களின் அற்புதங்கள் விஷேட தன்மைகள் உயர்குணங்கள் சேவைகள் அவர்கள் பேசிய தத்துவங்கள் என்பவற்றைச் சொல்லவில்லையா? இவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் சொல்வதாயின் நாமிருவரும் ஸுர் ஊதும் வரை - உலக முடிவுவரை பேசிக் கொண்டிருக்கவேண்டும். இது முடிந்த காரியமா? இல்லையே? ஆகையால் மறு சந்திப்பின் போது முடிந்தவரை ஆதாரம் கூறி விளக்கிவைக்கிறேன். இப்போது மிகச் சுருக்கமாக நபீமார் வலீமார் நல்லடியார்களைப்புகழ்தல் தொடர்பாக சிறு விளக்கம் தருகிறேன். 

நபீமார்,வலீமார்,நல்லடியார்கள் உயிரோடிருக்கும்போது அவர்களைப் புகழ்வதும் அவர்கள் மரணித்தபின் புகழ்வதும் இஸ்லாம் அனுமதித்த விடயமேயன்றி அது எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணாணதல்ல. 

அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்ந்துள்ளான். நபீ (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்திலேயே நபீ தோழர்கள் அவர்களைப் புகழ்ந்துள்ளார்கள். இதற்கு ஆதாரம் அதிகம் உண்டு. அவற்றில் சிலதை மட்டும் சொல்கிறேன். அதற்கு முன் இவ்விடயம் மிக ஆழமாக ஆய்வு செய்து ஆதாரங்கள் தேடிக் கெள்ளக் கூடிய விடயமில்லை என்பதை நீ புரிந்து கொள்வதற்காக நடைமுறையிலுள்ளசில உதாரணங்கள் தருகிறேன். அதன் பின் நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்தல் தொடர்பாக திருக்குர்ஆனில் இருந்தும் நபீ மொழிகளில் இருந்தும் ஆதாரம் தருகிறேன். சிந்தனையுடன் கேள். நிதான நிலையில் இருந்து கேள். ஒரு பக்க சார்புடைய மன நிலையில் இருந்து கேட்காமல் சத்தியத்தை அறிந்துகொள்ளும் நோக்குடன் மட்டும் கேள். அல்லாஹ் உனது மனக்கண்ணையும் அறிவுக்கண்ணையும் திறந்து விடுவானாக. 

நமது நாட்டில் பாராட்டு விழாக்கள், வரவேற்பு விழாக்கள் என்று பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு அரசியல் வாதியை, படித்துப் பட்டம் பெற்ற ஒரு அறிஞனை, விளையாட்டில் வெற்றிபெற்ற ஒரு வீரனை மௌலவிப்பட்டம் பெற்ற ஒரு மார்க்க அறிஞனை கௌரவிப்பதற்காக மேடை அமைப்பதும் அதை மின் விளக்குகளாலும் அலங்காரப் பொருட்களாலும் அலங்கலிப்பதும் ஊரெல்லாம் அறிவித்து அதற்கு பேச்சாளர்கள் கவிஞர்களை அழைப்பதும் விழாவின் கதாநாயகன் அங்கு வரும்போது அவருக்கு மாலை சூடி, மலர் தூவி, பன்னீர் தெளித்து, அத்தர் பூசி கஸீதஹ் முழக்கத்துடன் “தகறா” ஒலிக்க அவரை மேடைக்கு அவரை அழைத்து வருவதும் தலைவர் அவரை புகழ்ந்து தலைமையுரை நிகழ்த்தி பேச்சாளர்கள் அவரைப் புகழ்ந்து பேசி கவிஞர்கள் அவரைப் புகழ்ந்து கவிகள் பாடி நன்றியுரை ஸலவாத்துடன் விழா நிறைவு பெறுவதும் வழக்கத்தில் உண்டு. 

மௌலித் ஓதக்கூடாதென்று கூறுவோர் கூட இவ்வாறான விழாக்கள் நடத்துவதும் அதில் கதாநாயகர்களாகக் கலந்து கொள்வதும் விழாக்களுக்கு நிதியுதவி வழங்குவதும் வழக்கத்தில் உண்டு. 

மௌலித் என்பதற்கு நான் மேலே சொன்ன விளக்கத்தின் படியும் வரைவிலக்கணத்தின்படியும் இது தமிழில் விழா என்று சொல்லப்பட்டாலும் கூடஇது மௌலித் என்ற வகையைச் சேர்ந்ததேயாகும். 

தமிழ் மொழியில் மௌலித் ஓதலாமென்றால் – ஒருவரைப் புகழலாமென்றால் அறபு மொழியிலும் ஓதலாமல்லவா புகழலாமல்லவா? 

தொன்று தொட்டு மேற்கண்ட விழாக்கள் நடைபெற்றேவருகின்றன. இவை கூடாதென்றோ பித்அத் என்றோ எவரும் குரல் கொடுப்பதுமில்லை. கொடி தூக்குவதுமில்லை. குண்டுகள் குண்டாந்தடிகளுடன் சென்று மேடையை உடைப்பதுமில்லை. கூட்டத்தைக் கலைப்பதுமில்லை. பொதுவாக இது சர்ச்சைக்குரிய விடயமாக கருதப்படுவதே இல்லை. ஆனால் இந்த அம்சங்கள் கொண்ட ஒருவிழா மௌலித் என்ற பெயரில் அறபு மொழியில் நடைபெறும்போது அது “ஷிர்க்“ என்றும் “பித்அத்“ என்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்என்றும் குரல் கொடுக்கப்படுகிறது. கொடியும் தூக்கப்படுகிறது. பலாத்காரமாக நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறது. நிகழ்ச்சி நடைபெறும் பள்ளிவாயல்கள், தர்ஹாக்கள், சியாறங்கள், மத்ரசஹ்கள் உடைக்கப்படுகின்றன. இத்தகைய வன்செயல் காத்தான்குடியில் மட்டும் நடைபெறுவது விந்தைக்கும் வேதனைக்குமுரியதாகும். காத்தநகர் வாசிகள் மிக நல்லவர்கள். 

ஓர் அரசியல்வாதிக்கும் ஓர் அறிஞனுக்கும் ஒரு வீரனுக்கும் ஒரு மார்க்க அறிஞனுக்கும் மேற்கண்ட அமைப்பில் விழா எடுப்பது​ ஆகுமென்றால் ஷரீஅத், தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகிய நான்கு துறைகளிலும் ஆழ்ந்த ஞானம் பெற்று நப்ஸ் என்ற மனவெழுச்சியுடன​ போராடி,அதன் கொட்டத்தை அடக்கி,இராப்பகலாய் கண்விழித்து இறைதியானம் செய்து “விலாயத்“ என்ற ஒலித்தனம் அல்லது “நுபுவ்வத்” என்ற நபித்துவம் பெற்ற மகான்களுக்கு விழா எடுப்பது எங்கனம் தவறாகும்? எந்த வகையில் ஷரீஅத்துக்கு முரணாகும். சிந்தனை செய்துபார். 

இப்பொழுது ஓரளவு விளங்கியிருப்பாயென்று நம்புகிறேன். இனி நபீமார் வலீமார் நல்லடியார்களைப் புகழ்தல் தொடர்பாக திருக்குர்ஆனில் இருந்தும் நபீ மொழிகளிலிருந்தும் ஆதாரம் தருகிறேன். 

திருக்குர்ஆனில் பல இடங்களில் 25 நபீமாரின் வாழ்கை வரலாறுகளை அல்லாஹ் கூறியுள்ளான். அவர்களைப் புகழ்ந்துள்ளான். அவர்கள் செய்த சேவைகளை எடுத்தியம்பியுள்ளான். அவர்களின் நற் குணங்களை விபரித்துள்ளான். 

எனவே ஒருவரைப்புகழலாம். அவரின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துரைக்கலாம். அவரின் சேவையை பாராட்டலாம். என்பதற்கு திருக்குர்ஆன் தரும்ஆதாரத்தை விட வேறு ஆதாரம் தேவைதானா? 

“மௌலித்“ என்பதற்கு நான் கூறிய வரைவிலக்கணப்படி திருக்குர்ஆன் கூட ஒரு மௌலித் என்று சொல்ல முடியுமல்லவா? திருக்குர்ஆன் உரைநடையிலுள்ளது. அவ்வளவுதான். ஒரு விடயத்தை உரைநடையில் கூறுவது ஆகுமென்றால் அதைப்பாடலில் கூறுவதும் ஆகுமானதே. 

(தொடரும்......)