Mar 16, 2013

இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா

கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியம் ஏற்பாடு செய்த இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா நிகழ்வு 08.03.2013 அன்று கல்முனைக் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் எண்கோண மேடையில் பி.ப 06.30 மணியளவில் (மஃரிப் தொழுகையின் பின்) வெகு சிறப்பாக ஆரம்பமானது. 

இப்பெரு விழாவில் கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அன்னவர்களின் நினைவாகவும், பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புகழ் காப்பியம் கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நூல் வெளியீட்டு விழாவும், சுன்னத் வல் ஜமாஅத் பெரும் உலமாக்களால் மார்க்க உபன்னியாசமும் இடம்பெற்றது. 
இந்நிகழ்வுக்கு கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியத்தின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர், M.H நூர்தீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். 

நிகழ்வுகளில் ஆரம்பமாக மௌலவீ பைஸல் அவர்களால் கிராஅத் ஓதி ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்முனை மத்றஸதுல் பத்ரிய்யஹ் மாணாக்களால் வரவேற்பு கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கல்முனை மஸ்ஜிது பத்ரிய்யஹ்வின் பேஷ் இமாம் மௌலவீ HMM. யூசுப் முஸ்தபீ அவர்களின் உரை இடம்பெற்றது. இஷா தொழுகையைத் தொடர்ந்து சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்ட கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவரும், ஏறாவூர் பைஸானுல் மதீனா அறபுக் கலாபீட அதிபருமான சங்கைக்குரிய மௌலவீ PMA. ஜலீல் பாகவீ அவர்களின் கௌதுல் அஃழம் றழி அன்னவர்களின் வாழ்க்கைச் சுருக்கம் அடங்கிய சொற்பொழிவு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த காத்தான்குடி காதிரிய்யஹ் திருச்சபையின் கலீபாவும், அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட விரியுரையாளருமான சங்கைக்குரிய மௌலவீ MMA. மஜீத் றப்பானீ அன்னவர்களின் வலீமார்களின் சிறப்புக்கள் அடங்கிய காத்திரமான உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஈழத்து ஹஸ்ஸான், கவித்திலகம் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்களால் பெருமானார் ஸல் அவர்களின் புகழ் தாங்கிய புனித வித்ரிய்யஹ் ஷரீபஹ்வுக்கு விரியுரையும், தமிழாக்கமும் எழுதியமைக்காக நபீ புகழ் கவியரசர் என்ற சிறப்புப் பட்டமும், கல்முனை மாநகரில் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நபீபுகழ் காப்பியம் என்ற நூல் அறிமுகமும் செய்யப்பட்டு மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அவர்களால் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நூலில் அகமியங்கள் நிறைந்த உரையும் நிகழ்த்தப்பட்டது. 

விழாவின் இறுதி நிகழ்வாக கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியத்தின் செயலாளர் ஜியாத் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு இனிதே ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றது. 

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லிம்