Dec 28, 2013

நபீகள் நாயகம் நம் போன்ற மனிதனா?

சங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A. அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்


நபீ (ஸல்) அவர்கள் மனிதனா? “மலக்” எனப்படும் அமரரா? அல்லது ஜின்னா?
இப்படியான கேள்விகள் இன்று நேற்று எழுந்த கேள்விகளில்லை.

நபீ ஸல் அவர்களின் காலத்திலேயே இப்படியான கேள்விகள் அன்று வாழ்ந்த மக்களின் நெஞ்சங்களைத் துளைத்துக் கொண்டிருந்தன. இதனால்தான்.... 
قل إنــّمـا أنـا بشـر مـثـلـكم 
“குல் இன்னமா அன பஷறுன் மித்லுகும்”        (18 : 110) 
‘முஹம்மதே ! நான் உங்கள் போன்ற மனிதனென்று (அந்த மக்களிடம்) சொல்லுங்கள்’ என்ற திருமறை வசனம் இறங்கிற்று. 

நபீ ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அந்த மக்களின் நெஞ்சங்களை மேற்கூறிய வினாக்கள் துளைக்வில்லையாயின், நான் உங்கள் போன்ற மனிதனென்று நபீ ஸல் அவர்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் – மனிதனென்பது அந்த மக்களனைவருக்கும் தெரிந்த விஷயமாகத்தானிருந்தது.
நபீ ஸல் அவர்களின் அபார அற்புதங்களையும், அகமியங்களையும் கண்ட அந்த மக்களுக்கு மேற்கண்டவாறெல்லாம் அவர்களைப்பற்றி எண்ணத்தோன்றிற்று. 

அந்த மக்களின் நெஞ்சங்களில் நிழலாடிய வினாக்களையறிந்த அல்லாஹ் மேற்கண்டவாறு சொல்லுமாறு நபீ ஸல் அவர்களுக்குத் திருக்குர்ஆன் மூலம் கட்டளையிட்டான். 

நபீ ஸல் அவர்கள் நம் போன்ற இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும், இரண்டு காதுகளையும் மற்றும் மனித உறுப்புக்கள்போல் ஏனைய உறுப்புக்களையும் உடையவராவார்கள். 

இந்த அம்சங்களில் மட்டும்தான் அவர்கள் நம் போன்ற மனிதன். விஷேசமாக நம்மிலில்லாத அல்லது நமது உறுப்புக்ளுக்கு மாறான எந்த ஒரு உறுப்பும் அவர்களின் திருவுடலில் இருக்கவில்லை. 

சாதாரண மனிதனுக்குரிய உடலமைப்பிலேயே நபியவர்களின் திருவுடலும் அமைந்திருந்தது. 

அவர்கள் நம்மைப்போல காலால் நடப்பார்கள். வலக்கரத்தினால் சாப்பிடுவார்கள். கண்களினால் பார்ப்பார்கள். காதால் கேட்பார்கள். நம்மைப்போல்தான் குளிப்பார்கள். 

உலகத்தோடு ஒட்டிய ஒரு சில நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய சகல நடவடிக்கைகளிலும் நம் போன்றுதான் நபீ ஸல் அவர்கள் நடந்து கொள்வார்கள். 

மேலே சொல்லப்பட்ட உடலமைப்பு அம்சத்தில் அவர்கள் நம் போன்ற ஒரு மனிதன்தான். நமக்கு மாற்றமாக அவர்கள் தலையால் நடப்பதுமில்லை, காலால் சாப்பிடுபவர்களுமில்லை, காதால் பார்ப்பவர்களுமில்லை, கண்ணால் கேட்பவர்களுமில்லை. 

எனினுமவர்கள் அந்தஸ்த்திலும், எதார்த்தத்திலும் நமக்கு முற்றிலும் முரணானவர்கள். உலகில் பிறந்த, இதன் பிறகு பிறக்கப்போகின்ற எந்த மனிதனும் அவ்விரண்டிலும் அவர்களை நெருங்கவுமில்லை, நெருங்கவும் முடியாது. 

அந்தஸ்த்திலும் எதார்த்த அகமியத்திலும் அணுப்பிரமாணமேனும் அவர்கள் நம்மைப் போன்றவர்களில்லை. 

நான் மேலே எழுதிக் காட்டிய “குல் இன்னமா அனபஷறுன் மித்லுகும்” முஹம்மதே ! நான் உங்களைப் போன்ற மனிதனென்று சொல்லுங்களென்ற திருக்குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு முஹம்மத் ஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனென்று வழிதவறியோரின் தந்தை நஜ்தி சாஹிபும், அவரின் முகவர்களும் நாடெங்கும் பறைசாற்றிவருகிறார்கள். 

இத்திருவசனத்தின் சரியான விளக்கம் தெரியாத காரணத்தால் இதைத் தமது பிழையான வாதத்துக்குச் சாதகமான ஆதாரமென்றெண்ணிக் கொள்கிறார்கள். இத்திருவசனத்தைக் கொண்டு நபீ ஸல் அவர்களைச் சாதாரண மனிதன்தானென்று நிரூபித்துவிடத் துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்களின் அறியாமை எல்லை கடந்து, கட்டுக்கடங்காமல் போய் விட்டபடியால் கண்டதையெல்லாம் “ஷிர்க்” “பித்அத்” என்று கூறுவதற்கும், தமது அறியாமையினால் தமக்குப்பாதகமான ஆதாரங்களைத் தமக்குச் சாதகமானவையென்றெண்ணிக் கொண்டு சண்டைக்கு வருவதற்கும் துணிந்து விட்டார்கள். 

அவர்கள் மேலே எழுதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனத்தின் விளக்கத்தைச் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதுடன் அறபு மொழிப்பாணியையும் திருக்குர்ஆனின் மொழி நடையையும் தெரியாதவர்களாகவே உள்ளார்கள். 

நபீ(ஸல்) அவர்கள் நம்போன்று சாதரண பிரஜையென்ற நம்பிக்கையும், முடிவும் அவர்களிடம் இருப்பதினால்தான் நபீ(ஸல்) அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியமும், மரியாதையும் கொடுக்காமல் அவர்களைக் கீழ்த்தரமாகக் கருதிவருகிறார்கள். 

இதனால்தான் நஜ்தி சாஹிபுடைய சிஷ்யர்களிலொருவன் “அஸாய ஹாதிஹீ கைறுன் மின் முஹம்மதின்” எனது கையிலிருக்கும் இத்தடி முஹம்மதை விடச் சிறந்ததென்று கூறினான். 

இச்செய்தியை “இமாம் ஸெய்னீ தஹ்லான் (றழி)” அவர்கள் தங்களின் “அத்துறறுஸ்ஸனிய்யா” என்னும் நூலில் எழுதியுள்ளார்கள். 

இமாம் ஸெய்னீ தஹ்லான் றழி 
தோற்றம் : 1817 
மறைவு : 1887 
வயது : 70 

அவர்கள் மக்கா நகரின் “முப்தீ” மார்க்கத் தீர்ப்பு வழங்கும் மாமேதையாக திகழ்ந்தார்கள். அங்கேயே மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். இறுதியில் திருமதீனா நகர் வந்து இறையடி சேர்ந்தார்கள். 

அல் புதூஹாதுல் இஸ்லாமிய்யா, அல் ஜதாவில் மர்ழிய்யா, அஸ்ஸீறதுன் நபவிய்யா, அத்துறறுஸ்ஸனிய்யா முதலான நூல்கள் இவர்களின் பிரசித்தி பெற்ற நூல்களாகும். 

வழி தவறியோரின் தலைவர் நஜ்தி சாஹிபு நபீஸல் அவர்களைத் தரக்குறைவாகக் கண்டதினால்தான் அவர்களை “றஸுல்” என்று சொல்வதற்குப் பதிலாக “தாரிஷ்” என்று சொல்லிவந்தார். 

“தாரிஷ்” என்றால் ஒரு கூட்டத்திடமிருந்து இன்னொரு கூட்டத்திற்குச் செய்தி கொண்டு செல்லும் ஒருவனுக்கு சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்கள் சொல்வார்கள். வழிதவறிய நஜ்தி ஸாஹிபு சவூதியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

“றஸூல்” என்ற சொல் தருகின்ற “தூது” என்ற அர்த்தம். “தாரிஷ்” என்ற சொல்லுக்கு இருந்தாலுங்கூட இச்சொல் அவர்களின் பேச்சு வழக்கில் கீழ்த் தரமான விஷயங்களுக்குத் தூது கொண்டு செல்லும் கீழ்த்தரமான ஒருவனுக்கு வழங்கப்பட்டு வந்தது. 

திருக்குர்ஆனில் நபீ(ஸல்) அவர்கள் “றஸூல்” என்ற கௌரவமான சொல் கொண்டுதான் அழைக்கப்பட்டார்களேயன்றி, வழிதவறியவர் கூறுவதுபோல் “தாரிஷ்” என்ற கீழ்த்தரமான சொல் கொண்டு அழைக்கப்பட்டதற்கு எந்த ஓர் இடத்திலும் ஆதாரமில்லை. 

இவர் நபீஸல் அவர்களைச் சாதாரண மனிதனென்று கணித்திருந்ததினால்தான், “றஸூல்” என்று சொல்வதற்கு பதிலாக “தாரிஷ்” எனக் கூறினார். 

நான் உங்களைப் போன்ற மனிதனென்று நபீ(ஸல்) அவர்கள் கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்திக் காட்டுவதற்கேயன்றி – அந்தஸ்த்திலும், எதார்த்த அகமியத்திலும் உங்களைப் போன்றவனென்ற கருத்தைக் காட்டுவதற்காக அல்ல. 

பணிவும், தாழ்மையுமுள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி அந்நாட்டு மக்களுடன் அன்னியோன்னியமாக உரையாடும் பொழுது தனது பணிவை வெளிப்படுத்தி நான் உங்களைப் போன்ற மனிதனென்று சொன்னால் அவ்வாறு சொன்னதற்கான அடிப்படைக் காரணத்தை உணராமல் மக்கள் அவரைப் பார்த்து என்ன மச்சான்? என்று கேட்டுவிட முடியுமா? அவரின் பெயர் சொல்லி அழைக்க முடியுமா? அல்லது அவரின் தோளில் கைபோட்டுக் கொண்டு தெருவெல்லாம் சுற்றத்தான் முடியுமா? 

பணிவும், தாழ்மையுமுள்ள ஓர் அறிஞன் “அவாம்” படிக்காதவர்கள் முன்னிலையில் நான் உங்களைப் போன்ற மனிதனெனக்கூறித் தனது பணிவை வெளிப்படுத்தினால் அவர் அவ்வாறு சொன்னதற்கான அடிப்படை நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் தங்களுக்கிடையில் உறவாடுவதைப்போல் அவருடன் உறவாட முடியுமா? அவ்வாறு உறவாடுதல் ஒழுக்கமாக ஆகுமா? 

எனவே ஜனாதிபதியும், அறிஞனும் தமது பணிவை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு சொன்னதுபோல் நபீ (ஸல்) அவர்களும் தமது பணிவை வெளிப்படுத்துவதற்காகத்தான், அவ்வாறு சொன்னார்கள் என்று கொள்ளவேண்டுமே தவிர அவர்களையும் நம்போன்ற மனிதனென்றெண்ணி மச்சான் என்று கூப்பிட்டுவிடவோ, எங்கடா போகிறாய் என்று கேட்கவோ முடியாது. 

நபீ ஸல் அவர்களின் விடயத்தில் அவர்கள் தரக்குறைவாக நடந்து கொள்ளக் காரணம் அவர்கள் நபீ ஸல் அவர்களை நம்போன்ற சாதாரண மனிதனென்று எண்ணிக் கொண்டதேயாகும். 

இரு நிலையுள்ள றஸூல் நபீ ஸல் அவர்களுக்கு இரண்டு நிலைகள் உள்ளன. 

ஒன்று – தங்களை உயர்த்திப் பேசும் நிலை. 
இரண்டு – தங்களை தாழ்த்திப் பேசும் நிலை, பணிவை வெளிப்படுத்தும் நிலை. 

இவ்விரு நிலைகளில் தங்களையுயர்த்திப் பேசும் நிலையை “ஜலால்” என்றும், தாழ்த்திப்பேசிப் பணிவைக் காட்டும் நிலையை “ஜமால்” என்றும் கொள்ளலாம். 

இவ்விரு நிலைகளும் அல்லாஹ்வின் நிலைகள்தான். அல்லாஹ்வின் திருநாமங்களை ஞானிகள் இரு பிரிவாகப் பிரித்துள்ளனர். அவ்விரண்டில் ஒன்று “அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா” என்றும், மற்றது “அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” என்றும் சொல்லப்படும். 

“அல் அஸ்மாஉல் ஜலாலிய்யா” என்றால் அதிகாரம், அடக்குமுறை, பழிவாங்கல், தண்டித்தல், வேதனை செய்தல் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய திருநாமங்களாகும். 

“அல் கஹ்ஹார்”, “அல் ஜப்பார்”, “அல் முன்தகிம்”, “அல் முதகப்பிர்”, “அல் காபிள்”, “அல் முதில்லு”, “அல் ஜலீல்”, “அல் கவிய்யு”, “அல் மதீன்” போன்ற வன்மைமிகு திருநாமங்கள் அல் அஸ்மாஉல் ஜலாலிய்யாவில் அடங்கும். 

இத்திருநாமங்களின் செயற்பாடுகள் கடுமையானவையாகவும், பயங்கரமானவையாகவும், வேதனைக்குரியனவையாகவும் சோதனைக்குரியனவையாகவும் இருக்கும். 

அல்லாஹ் திருக்குர்ஆனில் தன்னைப் பற்றிப்பேசும் பொழுது “அன” என்று ஒருமையில் பேசியது “ஜலாலியத்”தான திருநாமங்களின் பிரதிபலிப்பும், “நஹ்னு” என்று பன்மையில் பேசியது “ஜமாலிய்யத்”தான திருநாமங்களின் பிரதிபலிப்புமாகும். 

“அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” என்றால் அன்பு, இரக்கம், அருள், ஈடேற்றம், நம்பிக்கை, மன்னித்தல், சிறப்புபோன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய திருநாமங்களாகும். 

“அர்றஹ்மான்”, “அர்றஹீம்”, “அல்முன்இம்”, “அல்கப்பார்”, அர்றஊப்”, “அல்பத்தாஹ்”, “அல்அபுவ்வு” போன்ற மென்மையும், கருணையுமுள்ள திருநாமங்கள் “அல் அஸ்மாஉல் ஜமாலிய்யா” எனும் பிரிவில் அடங்கும். 

இத்திருநாமங்களின் செயற்பாடுகள் அன்பானவையாகவும், மகிழ்ச்சிகரமானவையாகவும் , திருப்திகரமானவையாகவும் இருக்கும். 

ஒருவனின் வாழ்வில் ஏற்படுகின்ற பயங்கரம், வேதனை, சோதனை போன்றவை “ஜலாலிய்யத்”தான திருநாமங்களின் செயற்பாடுகளும், அன்பு, இரக்கம், மகிழ்ச்சி போன்றவை “ஜமாலிய்யத்”தான திருநாமங்களின் செயற்பாடுகளுமாகும். 

அல்லாஹ்வின் இவ்விருவகைத் திருநாமங்களின் செயற்பாடுகளும் அவனுடைய சிருஷ்டிகள் மூலமாகவே நிகழும். 

அப்துல்லாஹ் என்பவன் அன்பு காட்டும் பொழுது அவனில் அல்லாஹ்வினது “ஜமாலிய்யத்”தான திருநாமங்களில் “றஹ்மான்”, “றஹீம்” போன்ற திருநாமங்கள் செயற்படுகின்றன. 

அவன் கோபப்படும் பொழுது, அவனில் அல்லாஹ்வினது “ஜலாலிய்யத்”தான திருநாமங்களில் “கஹ்ஹார்”, “ஜப்பார்” போன்றவை செயற்படுகின்றன. 

நபீ ஸல் அவர்கள் “நான் உங்களைப் போன்ற மனிதன்” என்று சொன்னது அவர்களில் அல்லாஹ்வின் “ஜமாலிய்யத்”தான திருநாமம் செயற்பட்டதினாலாகும். 

நபீ ஸல் அவர்கள் இன்னொரு சமயம்لا تفضـّـلونى على يونس بن متـى“லாதுபள்ளிலூனீ அலா யூனுஸப்னி மத்தா” நபீ யூனுஸ் பின் மத்தாவைவிட என்னைச் சிறப்பாக்கிவிடாதீர்கள் என்று சொல்லியுள்ளார்கள். 

நபீ ஸல் அவர்கள் நபீ யூனுஸ் பின் மத்தாவைவிடவும், நபீ யூசுப் பின் யஃகூபைவிடவும் சிறந்தவர்களென்பது இஸ்லாம் கூறியுள்ள முடிவாகவும், இஸ்லாமியக் கொள்கையாகவுமிருக்க நபீ ஸல் அவர்கள் அவ்வாறு கூறியது தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவேயன்றித் தங்களின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல. அவர்களின் இப்பேச்சுக் கூட அல்லாஹ்வின் “ஜமாலிய்யத்”தான திருநாம வெளிப்பாட்டைச் சேர்ந்ததேயாகும். 

இந்த விபரங்களைத் தெரிந்து கொள்ளாமல் நான் உங்களைப் போன்ற மனிதனென்று நபீ ஸல் அவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு அவர்களைக் கீழ்த்தரமாகவும், தரக்குறைவாகவும், சாதாரண மனிதனென்றும் எழுதியும், பேசியும் வருகின்றவர்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளுதல் வேண்டும். 

நபீ ஸல் அவர்கள் பணிவை வெளிப்படுத்துவதற்காக “நான் உங்களைப் போன்ற மனிதன்” என்று சொன்னதை வைத்துக் கொண்டு நபீ ஸல் அவர்கள் தம்மைப் போன்ற மனிதனென்று சொல்வோர் கீழே தரப்படுகின்ற நபீ மொழிகளை ஊன்றிக் கவனிக்க வேண்டும். 

“நான் உங்களைப் போன்றவனல்ல, எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருகிறான். எனக்குக் குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்குக் குடிக்கத் தருகிறான்.” என நபீ ஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் : புஹாரி 
அறிவிப்பு : அனஸ் (றழி)

“நான் உங்களைப் போன்றவனல்ல, எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருகிறான். எனக்குக் குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்குக் குடிக்கத் தருகிறான்.” என நபீ ஸல் அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம் : புஹாரி 
அறிவிப்பு : அனஸ் றழி 
இந்த நபீ மொழியில் நான் உங்களைப் போன்றவனில்லையென்று நபீ ஸல் அவர்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். 

நபீ (ஸல்) அவர்கள் நம் போன்ற மனிதனில்லையென்பதற்கு இதைவிடத் தெளிவான ஆதாரம் வேறென்னதான் வேண்டும்? 

எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் உணவு தருவான். எனக்கு குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான் அவன் குடிக்கத் தருவான். என்று நபீ ஸல் அவர்கள் கூறிய கூற்றில் ஆழமான தத்துவம் மறைந்துள்ளது. 

ஏனெனில், உலகிலுள்ள சர்வ படைப்புகளுக்கும் உணவு கொடுக்கவும், குடிக்கக் கொடுக்கவும் அல்லாஹ் ஒருவனே இருக்க நபீ ஸல் அவர்கள் தங்களை மட்டும் குறிப்பிட்டுக் கூறியதில் ஓர் இரகசியம் இருக்க வேண்டுமல்லவா? இவ்வாறு சொல்லியிருப்பதில் இரகசியமும், தத்துவமும் இல்லையென்றால் நபீயவர்களின் கூற்றுப்படி மற்றப்படைப்புகளுக்கு உணவு கொடுப்பதும், குடிக்கக் கொடுப்பதும் யார்? 

இது வரை சொன்ன விபரங்களில் இருந்து நபீ (ஸல்) அவர்கள் நான் உங்களைப் போன்ற மனிதனென்றும் நபீ யூனுஸ் பின் மத்தாவைவிட என்னைச் சிறப்பாக்கிவிடாதீர்கள் என்றும் கூறியது அவர்களின் பணிவை வெளிப்படுத்துவதற்கேயன்றி, அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல என்ற உண்மையும், நான் உங்களைப் போன்ற மனிதனில்லையென்று அவர்கள் கூறியது அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்துவதற்காக என்ற உண்மையும் தெளிவாகியிருக்கும். 

எனவே எதார்த்தத்திலும், அகமியத்திலும் நபீ ஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது. 

ஒளி 

“கத்ஜாஅகும் மினல்லாஹி நூறுன் வகிதாபுன் முபீன்” அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஓர் ஒளியும், தெளிவான வேதமும் வந்துவிட்டன. 

திருக்குர்ஆன் : 05 – 15 

இந்த விஷயமும் வழிதவறிய கொள்கையுடையோர் மறுத்துவரும் ஒரு விஷயமேயாகும். அவர்கள் நபீ ஸல் அவர்களை ஒளியில்லையென்று கூறிவருகிறார்கள். 

மேலே கூறிய திருவசனத்தில் தெளிவான வேதம் என்று திருக்குர்அனும், ஒளியென்று நபீ(ஸல்) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். 

இதிலிருந்து நபீ (ஸல்) அவர்கள் “நூர்” ஒளியென்பது தெளிவாகிவிட்டது. 

மேலும் நபீஸல் அவர்கள் ஒளியென்பதற்கும், அவர்களின் ஒளியிலிருந்துதான் அனைத்து சிருஷ்டிகளும் படைக்கப்பட்டுள்ளன என்பதற்கும் பல ஹதீதை ஸுபிகளும் ஞானிகளும் கையாண்டுள்ளனர். 

நபீஸல் அவர்கள் ஒளியில்லை என்பதை நரூபித்துவிட ஆதாரம் தேடியலையும் இவர்கள் மேலே சொன்ன திருவசனத்தில் நபீ(ஸல்) அவர்கள் ஒளியென்று அல்லாஹ் தெளிவாகக் கூறியிருப்பது பற்றி என்ன சொல்வார்களோ? 

வழிதவறியோர் கொள்கைக்கு மாறாக திருக்குர்ஆன் கூறிவிட்டபடியால் அவர்கள் தமது மனமுரண்பாட்டின் காரணமாக திருக்குர்ஆனைக்கூட மறுத்துவிடவும் கூடும். 
(மஆதல்லாஹ்) 

நான் கூறுகின்ற கருத்து திருக்குர்ஆனுக்கும், திருநபீயின் நிறை மொழிக்கும் மாறாக இருந்தால் எனது கருத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் திருக்குர்ஆனையும், ஹதீதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சட்ட மேதை இமாம் ஷாபிஈ றழி அவர்கள் சொல்லியிருக்க நஜ்தி ஸாஹிபும், அவரின் ஏஜெண்டுகளும் மேற்கண்டவாறு திருக்குர்ஆன் நபீ(ஸல்) அவர்கள் ஒளியென்று வலியுறுத்தியிருந்தும் அதை ஏற்றுக் கொள்ளாது மறுத்துரைத்து அவர்கள் ஒளியென்பதற்கு என்ன ஆதாரமென்று கேட்பது அவர்களின் மனமுரண்டையும், வரம்பு மீறிய முரட்டுத்தனமான பிடிவாதக் கொள்கையையுமே எடுத்துக் காட்டுகிறது. 

“நபீஸல் அவர்கள் ஒளியாயிருப்பதால் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது” 

நிழலில்லா நபி 

நபீஸல் அவர்களுக்கு நிழலில்லை என்பது உலகத்து அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையாகும். 

நம்போன்ற ஒரு சாதாரண மனிதன் வெயிலிலோ, அல்லது மின்னொளியிலோ நிற்கும்போது அவனுக்கு நிழல் விழுவதை நன்றாகக் காணமுடியும். 

எனினும் : நபீஸல் அவர்கள் வெயிலில் நின்றாலும், நிலவொளியில் நின்றாலும் அவர்களுக்கு நிழல் விழாது. 

இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் கூறப்படுகின்றன. 

ஒன்று : 

நபீஸல் அவர்கள் ஒளிமயமானவர்களாயிருப்பதால் ஒளிக்கு நிழலில்லையென்ற தத்துவத்தின்படி அவர்களுக்கு நிழலில்லாமற் போயிற்று. 

இரண்டு : 

நபீஸல் அவர்களின் நிழல் பூமியில் விழுவதையும், அது விழுந்த இடங்களில் மக்கள் காலால் அல்லது பாதணியால் மிதித்துவிடுவதையும் விரும்பாத இறைவன் அவர்களுக்கு நிழலை கொடுக்கவில்லை. 

நபீஸல் அவர்களுக்கு நிழலில்லாமற் போனதற்கு மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களல்லாத வேறு காரணங்கள் உண்டு. காரணம் எதுவாயிருந்தாலும் அவர்களுக்கு நிழலில்லையென்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். 

இவர்கள் சொல்வதுபோல் நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்களுக்கு நம்போன்ற நிழல் இருக்கவேண்டு மல்லவா? 

எனவே இதிலிருந்து நபீஸல் நம்போன்ற மனிதனில்லையென்பது வௌ்ளிமடைபோல் விளங்கும். 

வியர்வை 

நபீஸல் அவர்களின் வியர்வை கஸ்தூரி வாசமுள்ளது. அவர்களின் உடலிலும், கஸ்தூரி மணமே கமழ்ந்து கொண்டிருக்கும். 

நபீஸல் அவர்கள் ஒரு வழியால் போனார்களாயின் அவர்கள் நடந்து சென்ற அவ்வழியில் மூன்று நாள்வரை கஸ்தூரி மணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அம்மணத்தைக் கொண்டு அவ்வழியால் நபீஸல் அவர்கள் போயுள்ளார்களென்பதை ஸஹாபாக்கள் அறிந்து கொள்வார்கள் அவர்கள் கஸ்தூரி மணங்கமழும் எம்மான். 

நபீஸல் அவர்கள் ஒரு வழியால் சென்றார்களாயின், அவ்வழியால் செல்பவர்கள் நபிகளாரின் வியர்வையின் நறுமணத்தைக் கொண்டு அவர்கள் அவ்வழியால் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள். 
ஆதாரம் :தாரமீ 
அறிவிப்பு : ஜாபிர் றழி 

நபீஸல் அவர்களின் வியர்வையை ஸஹாபாக்கள் மிகப் பக்குவமாக எடுத்துச் சிறிய சீசாக்களில் வைத்துக் கொள்வார்கள். அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களுக்குப் பதிலாக அதைப் பாவித்து வந்தார்கள். 

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால், அவர்களின் வியர்வையிலும், உடலிலும் கஸ்தூரி மணம் கமழ்ந்திருக்குமா? அதில் கஸ்தூரி மணம் கமழ்ந்திருக்காவிட்டால் நபித்தோழர்கள் அதை பக்குவமாக பாதுகாத்து அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களுக்குப் பதிலாக பாவித்திருப்பார்களா? 

இவர்கள் சொல்வதுபோல் நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால், அவ்வாறு சொல்லுவோரின் வியர்வையிலும் கஸ்தூரி மணம் கமழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அதை அவர்களின் பக்தர்கள் பக்குவமாக எடுத்து போத்தல்களில் அடைத்து வாசனைத்திரவியமாக பாவித்திருக்கவும் வேண்டுமல்லவா? இவ்வாறு நடந்ததோ? இதற்கு வரலாறுதான் உண்டா? 

வியர்வை தொடர்பாகச் சொல்லப்பட்ட விபரத்திலிருந்தும் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது. 

சுவடு 

கால் பாதச் சுவடுகள் பதியக்கூடிய மணல் போன்ற இடத்தில் நபீஸல் அவர்கள் நடந்தால், அவர்களின் காலடிச்சுவடுகள் மணலில் பதியாது. எனினும்; கல், பாறை போன்ற சுவடுகள் பதிய முடியாத இடத்தில் நபீயவர்கள் நடந்தார்களாயின், அவற்றின்மேல் திருப்பாதங்களின் சுவடுகள் பதிந்துவிடும். 

நஜ்திஸாஹிபு சொல்வதுபோல் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் நமக்கும் இத்தன்மை இருக்க வேண்டுமல்லவா? அல்லது அவரின் ஏஜென்டுகளில் ஒருவருக்காவது இருக்க வேண்டுமல்லவா? இதற்கு வரலாறு உண்டா? 

சுவடு தொடர்பாக நான் எழுதிய விபரத்திலிருந்தும் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது. 

திருமணம் 

திருக்குர்ஆனின் தீர்ப்பின் படியும், ஹதீதுகளின் தீர்ப்பின் படியும் “புகஹாஉ” சட்டக்கலை மேதைகளின் தீர்ப்பின்படியும் ஒருவர் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மட்டும்தான் திருமணம் செய்யலாம். நான்கு பெண்களை மனைவியர்களாக வைத்திருக்க முடியும். நாலுக்குமேல் திருமணம் செய்வது அதாவது ஏக காலத்தில் நான்கு மனைவியர்களுக்குமேல் வைத்திருப்பது “ஹராம்” தண்டனைக்குரிய குற்றமாகும். 

எனினும் நபீஸல் அவர்களுக்கு மாத்திரம் ஏக காலத்தில் நான்கு மனைவியர்களுக்குமேல் திருமணம் செய்து கொள்ள அனுமதியுண்டு. 

நபீஸல் அவர்கள் “வபாத்” இறையடி சேர்ந்த நேரம் ஒன்பது மனைவியர் உயிருடன் இருந்தார்களென்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நபியவர்களின் வபாத்துக்குமுன் ஏக காலத்தில் பதின்மூன்று மனைவியர் இருந்ததற்கும் ஆதாரமுண்டு. 

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் நபியவர்களும் ஏககாலத்தில் நான்கு திருமணங்களுக்குமேல் செய்திருக்கக் கூடாது. அல்லது நாமும் அவர்கள்போல் நாலுக்குமேல் திருமணம் செய்யலாமென்று சட்டம் வந்திருக்க வேண்டும். 

ஒரே நேரத்தில் நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்திருக்க நபீஸல் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதில் ஓர் இரகசியமுண்டு. 

நபீமார்கள் நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்திருந்ததற்கும் நபீ ஸுலைமான் அலை அவர்கள் ஒரே இரவில் ஐந்நூறு மனைவியர்களுடன் உடலுறவு கொண்டதற்கும், நபீஸல் அவர்கள் ஒரே இரவில் ஒன்பது மனைவியர்களுடன் உடலுறவு கொண்டதற்கும், ஹதீதுக் கிரந்தங்களிலும், வரலாற்று நூல்களிலும் ஆதாரங்கள் உள்ளன. 

நபீமார்களுக்கு பல மனைவியர் தேவைப்பட்டதற்கும், அவர்கள் ஒரே இரவில் பல தடவை உடலுறவு கொண்டதற்குமுள்ள காரணம் பற்றிச் சுருக்கமாக எழுதுகிறேன். நான் கூறப்போதும் காரணத்தைத் தெரிந்து கொள்ளுமுன் நபீமார்களுக்கு அதிகமான மனைவியர் தேவைப்பட்டதற்கும், ஒரே இரவில் பல தடவை உடலுறவு கொண்டதும் “ஷஹ்வத்” எனும் காம இச்சையினாலா? அல்லது வேறு காரணத்தினாலா? என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். 

“ஷஹ்வத்” எனும் காம இச்சையினாலென்று வைத்துக் கொண்டால் நபீமார்கள் காம இச்சைக் கூடினவர்களென்ற கருத்து வந்துவிடும். இக்கருத்து நபீமார்களின் அந்தஸ்த்தைப் பொறுத்துப் பிழையான கருத்தாகும். 

இக்கருத்து இரண்டு வகையில் பிழையென்று நிரூபிக்கலாம். 

ஒன்று – காம இச்சையென்ற இகழப்பட்ட குணம் இல்லாமை. 

இரண்டு – அதற்கான காரணம் இல்லாமை. 

காம இச்சையென்பது இகழப்பட்ட குணமேயன்றி புகழப்பட்ட குணமில்லை. இகழப்பட்ட குணமொன்றும் நபீமார்களிடம் இருக்காது. அவர்களனைவரும், குறிப்பாக நபீஸல் அவர்களும் சகல தீக்குணங்களைவிட்டும் பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாவார்கள். எனவே நபீமார்கள் அதிகமான திருமணம் செய்ததும், அதிகமாக உடலுறவு கொண்டதும் காம இச்சையினாலில்லையென்பது தெளிவாகிவிட்டது. 

காம இச்சையென்பது மிதமிஞ்சி உண்பதாலும், பல்வேறு ஊட்டச் சத்துக்களுள்ள உணவு, மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதாலும், காம உணர்வைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளினாலும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இவைதான் காம இச்சைக்கு அடிப்படைக் காரணங்களாக விளங்குகின்றன. 

நபீமார்கள் பரிசுத்தமானவர்கள், உயர் குணங்கள் நிறைந்தவர்கள் மேலே கூறிய இகழப்பட்ட இக்காரணங்களிலொன்றும் நபீமார்களிடம் காணப்படவில்லை. நபீமார்களிலெவரும் மிதமிஞ்சி உண்டதாகவோ, ஊட்டச்சத்துக்கள் பாவித்ததாகவோ, காம இச்சையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவோ வரலாறு எதுவுமில்லை. 

நபீஸல் அவர்களின் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் அடுப்பு எரிந்ததில்லையென்று ஹதீதுகள் கூறுகின்றன. 

அதாவது நபீஸல் அவர்களின் வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்கள் எதுவுமே சமைக்கப்படவில்லையென்றும் அந்த ஹதீதுகள் கூறுகின்றன. 

“அகழ்”ப் போரின்போது ஒரு “ஸஹாபி” நபித்தோழர் கடும் பசியால் தனது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டிருந்தார். பசியை சமாளிப்பதற்காக அவர் அவ்வாறு செய்தார். 

போர் செய்து நின்ற அவர் ஒரு கட்டத்தில் பசியைத் தாங்க முடியாதவராய் நபீஸல் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் றஸூலே ! இதோ பாருங்கள்” என்று தனது சட்டையை உயர்த்திக் காட்டினார். அவரின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருப்பதைக்கண்ட நபீஸல் அவர்கள் தங்களின் சட்டையை புன்னகையுடன் உயர்த்திக் காட்டினார்கள். என்னே புதுமை ! நபீயவர்களின் திருவயிற்றில் மூன்று கற்கள் கட்டப்பட்டிருந்தன. 

இவ்வரலாறும் தொடர்ந்து மூன்று நாட்கள் அடுப்பு எரிக்கப்படவில்லையென்ற வரலாறும், நபீஸல் அவர்களின் சாப்பாடுபற்றிய விளக்கத்தை விளக்குகின்றது.

நபீ(ஸல்) அவர்கள் ஒரு சமயம் “அஜூஉ யவ்மன் வ அஷ்ப உயவ்மன்” நான் ஒரு நாள் சாப்பிடுவேன், ஒரு நாள் பசியுடனிருப்பேன் என்று கூறினார்கள்.

இன்னுமொரு சமயம் “அன இப்னும் றஅதின் தஃகுலுல் கதீத” நான் காய்ந்த இறைச்சி சாப்பிடுகின்ற ஒரு பெண்ணின் மகன் என்றும் அவர்கள் அருளினார்கள்.
இந்தக் கூற்றுக்களிலிருந்தும் நபீ(ஸல்) அவர்களின் சாப்பாடு பற்றிய விவரம் தெளிவாகிவிட்டது. 

சாப்பிடும் முறை பற்றிக் கூறிய இஸ்லாம் ஒரு மனிதன் தனது வயிற்றை மூன்று பகுதிகளாக வகுத்து ஒரு பகுதிக்கு உணவும், இன்னொரு பகுதிக்கு நீரும் கொடுக்க​ வேண்டுமென்றும், எஞ்சிய பகுதியைக் காலியாக வைத்திருக்க வேண்டுமென்றும் கூறுகிறது. இவ்வாறு சாப்பிடுபவன்தான் மனிதன். 

இதற்கு மாறாகக் கட்டுப்பாடெதுவுமின்றி வயிறு புடைக்கச் சாப்பிடுகின்றவன் உருவத்தில் மனிதனாக இருந்தாலுங்கூட அவன் எதார்த்தத்தில் மிருகம்தான். 

நபீ(ஸல்) அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களின் வயிற்றை மூன்றாகவோ முப்பதாகவோ பிரிக்காமல் உணவு கிடைத்தால் உண்பார்கள் இல்லையாயின் எத்தனை நாட்களாயினும் பட்டினியுடன் இருப்பார்கள். நபீ(ஸல்) அவர்கள் பசி பட்டினியுடன் இருந்த நாட்கள்தான் அவர்களின் வாழ்க்கையில் அதிகம். நபீ(ஸல்) அவர்கள் பசியுடனிருந்ததிலும், வயிற்றில் கல்லைக் கட்டியிருந்ததிலும் மெய்ஞ்ஞான அகமிய விளக்கம் உண்டு. 

நபீ(ஸல்) அவர்கள் மிதமிஞ்சி உண்ணாமலிருந்ததுபோல் வீண் விளையாட்டுக்களிலும், காம இச்சையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளிலும் ஈடுபடவுமில்லை. 

மேலே சொன்ன விவரங்களிலிருந்து நபீ(ஸல்) அவர்கள் தங்களின் வாழ்க்கையில் வயிறு நிரம்பச் சாப்பிடவில்லையென்பதும், ஊட்டச் சத்துள்ள மருந்து மாத்திரைகள் பாவித்தவருமில்லையென்பதும், காம இச்சையைத் தூண்டக்கூடிய விடயங்களில் ஈடுபடவில்லையென்பதும் தெளிவாகிவிட்டன. 

எனவே ஒரு மனிதனுக்குக் காம இச்சையை உண்டுபண்ணக்கூடிய உணவு வகைகளோ மருந்து வகைகளோ நபியவர்கள் உட்கொள்ளாததினாலும் காம உணர்வை தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடாததினாலும் நபீ(ஸல்) அவர்களிடம் காம இச்சை இருந்ததென்று சொல்வதற்கு எந்த நியாயமுமில்லை. 

“ஸபப்” இல்லையாயின் “முஸப்பப்” இல்லையென்பது பொதுவிதி அதாவது ஒரு காரியம் உண்டாவதற்கு அவசியமான காரணம் இல்லாமற் போனால் அந்தக் காரியமும் இல்லாமற்போய்விடும். 

ஆகையால் நபீஸல் அவர்களும், ஏனைய நபிமார்களும் பலதார மணம் புரிந்ததற்கும், ஒரு இரவில் பல மனைவிகளுடன் உடலுறவு கொண்டதற்கும் காம இச்சை காரணம் என்று சொல்ல நியாயமில்லை. 

இதற்கு மாறாக காம இச்சைதான் காரணமென்று கொள்ளுதல் பழையானதும், பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமாகும். 

ஏனெனில் ஊட்டச் சத்துக்கள் ஒன்றுமே பாவிக்காமலும், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் கால் வயிறுகூட நிரம்பாத அளவு சாப்பிடும், ஏனைய நாட்களில் பட்டினி பசியுடன் இருந்ததும் வருகின்ற ஒரு மனிதன் ; நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்திருப்பதற்கும், அவர்களுடன் ஒரே இரவில் பல தடவைகள் உடலுறவு கொள்வதற்கும் எவ்வாறு சக்தி பெறுவான்? ஒரு மனிதனால் அது எங்ஙனம் சக்தியாகும்? 

எனவே நம்மைப் போல் மிதமிஞ்சிய உணவும், ஊட்டச் சத்துக்களும் உட்கொண்டும், சக்தியை ஏற்படுத்தக் கூடிய தற்கால நவீன மருந்து மாத்திரைகள் பாவித்தும் வருகிறவர்கள் நாலுக்கு மேற்பட்ட மனைவியர்களை வைத்துக் கொள்வதும், கூடுதலாக உடலுறவு கொள்வதும் காம இச்சையினாலென்று சொன்னால் அது பிழையானதுமில்லை. பகுத்தறிவுக்கு முரணானதுமில்லை. நபீமார்கள் பெண்களை அதிகமாக விரும்பினதும், அவர்களுடன் அதிகமாக உடலுறவு கொண்டதும் அவர்களின் ஆன்மீக வேகத்தைக் கொண்டதாயிருப்பதால், அவர்களின் ஆன்மீக வேகத்திற்கேற்றவாரு நாலென்ன நானூறு மனைவியர்களையும் அவர்கள் வைத்திருக்கலாம். 

நபீஸல் அவர்கள் பெண்களை அதிகமாக விரும்பினதற்கும், அவர்களுடன் அதிகமாக உடலுறவு கொண்டதற்கும் அவர்களின் காம இச்சைதான் காரணமென்று வழிகேடர்கள் கூறுகிறார்கள். 

இவர்களின் இக்கூற்று மேலே நான் கூறிவந்த விவரங்களைக் கொண்டு மறுக்கப்பட்டுவிட்டது. 

நபீமார்கள் அதிகமாகப் பெண்களை விரும்பினதும், அதிகமாக அவர்களுடன் உடலுறவு கொண்டதும் அவர்களின் சிறப்பையும், ஆன்மீகப் பலத்தையும், அதன் வேகத்தையும் காட்டுகின்றதேயல்லாமல் அவர்கள் காம இச்சையுள்ளவர்கள் என்பதையல்ல. 

நபீஸல் அவர்கள் அதிகமாகப் பெண்களை விரும்பினதும், அவர்களுடன் அதிகமாக உடலுறவு கொண்டதும் அவர்களின் ஆன்மீக வேகத்தினாலேயன்றி காம இச்சையினாலில்லை என்ற கூற்றை பின்வரும் இரண்டு அம்சங்களைக் கொண்டு நிரூபிக்கலாம். 

முதலாவது அம்சம்: நபீஸல் அவர்கள் முதலில் அன்னை கதீஜா (றழி) அவர்களைத் திருமணம் செய்த பொழுது அவர்களின் வயது நாற்பதாயும், நாயகம் ஸல் அவர்களின் வயது இருபத்தைந்தாயும் இருந்தது. 

நபீஸல் அவர்கள் காம இச்சைக்காகத் திருமணஞ் செய்திருந்தால் தன்னைவிட பதினைந்து வயது கூடிய ஒரு விதவையைத் திருமணம் செய்திருக்கமாட்டார்கள். மாறாக வயதில் குறைந்த கன்னியொருத்தியையே காம சுபமனுபவிப்பதற்காகத் தெரிவு செய்து மணம் புரிந்திருப்பார்கள். 

ஏனெனில் ஒரு வாலிபன் காம சுகத்தை அனுபவிப்பதற்காக ஒரு பெண்ணை மணப்பதென்றால் தன்னைவிட வயதில் குறைந்தவளையே விரும்புவான் இது மனித இயல்பு. 

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் இவ்வியல்பு அவர்களிடமும் இருந்திருக்க வேண்டும். 

இரண்டாவது அம்சம் : அன்னை கதீஜா றழி அவர்கள் ஒரு விதவை ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்தவர். ஆனால் நபீஸல் அவர்கள் ஏற்கனவே திருமணம் செய்யாதவர்கள். கதீஜா நாயகி றழி அவர்கள்தான் பெருமானார் ஸல் அவர்களின் முதல் மனைவியாவார். 

நபீஸல் அவர்கள் பெண்களைக் கூடுதலாக விரும்பியது காம இச்சையினாலென்றிருந்தால் முதல் தரமாக வயதுகூடிய ஒரு விதவையைத் திருமணம் செய்திருக்கமாட்டார்கள். 

ஏனெனில் ; முதலில் திருமணம் செய்யாத இருபத்தைந்து வயதுள்ள ஒரு வாலிபன் காம இச்சைக்காகத் திருமணம் செய்வதென்றால் ஏற்கனவே திருமணம் செய்த ஒரு விதவையை திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டான். இது மனித இயல்பு. 

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் அவ்வியல்பு அவர்களிடமும் இருந்திருக்க வேண்டுமல்லவா? 

காம இச்சையினால்தான் நபீஸல் அவர்கள் கூடுதலாகப் பெண்களை விரும்பினார்கள் என்றும், அதிகமான மனைவியர்களை வைத்திருந்தார்கள் என்றும் கூறுவது மேலே நான் எழுதிக் காட்டிய காரணங்களினால் “பாதில்” வீணாகிவிட்டது. 

நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்றால் அவர்களும் நம்மைப்போல் நான்கு மனைவியர்களுக்குமேல் திருமணம் செய்யக்கூடாதென்று சட்டம் வந்திருக்க வேண்டும். மேலும் நம்போன்ற சாதாரண மனிதனுக்குள்ள இயற்கையும், இயல்பும், சுபாவமும் அவர்களுக்கும் இருந்திருக்க வேண்டும். இதன்படி வயதில் குறைந்த, அழகில் கூடிய கன்னி ஆயிஷா றழி அவர்களின் மூலமே அதிகமான குழந்தைகள் பிறந்திருக்கவும் வேண்டும். 

இந்நியாயங்களைக் கொண்டு நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனென்ற வழிகேடர்களின் வாதம் தவிடு பொடியாயிற்று. 

அண்ணலின் அழைப்பு 

ஒருவன் தொழுது கொண்டிருக்கையில் அவனைத் தனது பெற்றோர், மனைவி, மக்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட எவர் அழைத்தாலும் அவர்களின் அழைப்புக்காக அவன் தொழுகையை விட்டுவிடுவது “ஹராம்” தண்டனைக்குரிய குற்றமாகும். 

எனினும் ; தொழுது கொண்டிருக்கும் ஒருவனை நபீஸல் அவர்கள் அழைத்தால் அக்கணமே அவன் தொழுகையை விட்டுவிட்டு நபீஸல் அவர்களின் அழைப்புக்குப் பதில் கூற வேண்டும். இது அவன்மீது கடமை. அவன் பதில் கூறவில்லையாயின் கடமையான ஒரு காரியத்தை விட்ட குற்றவாளியாவான். 

“புகஹாஉ” எனும் மார்க்கச் சட்ட மேதைகள் இது பற்றித் தமது சட்ட நூல்களில் விரிவாக வரைந்துள்ளனர். அச்சட்டத்துக்கு ஆதாரமாக திருக்குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தைக் கூறிக் காட்டுகின்றார்கள். 

“இஸ்தஜீபு லில்லாஹி வலிர்றசூலி இதா தஆகும்” 

அல்லாஹ்வும், றஸுலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு நீங்கள் பதில் கூறுங்கள். 
- திருக்குர்ஆன் : 08-24 - 

அல்லாஹ்வும் றஸூலும் அழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறவேண்டுமென்பது பொதுவான கட்டளை. இக்கட்டளைப்படி நபீ ஸல் அவர்களும், அல்லாஹ்வும் தொழுது கொண்டிருப்பவனை அழைத்தால் அவன் உடனே தனது வேலையையும் வணக்கத்தையும் விட்டுவிட்டு அவர்களுக்குப் பதில் கூறுவது கடமையாகும். பதில் கூறாமல் விடுவது தண்டனைக்குரிய குற்றம். 

இத்திருவசனத்தின்படி வணக்கத்தில் இருப்பவன் கூடத் தனது வணக்கத்தை நிறுத்திவிட்டு நபீயின் அழைப்புக்கு பதில் கூறுவது கடமை என்பது தெளிவாகிவிட்டது. 

நபீஸல் அவர்களின் அழைப்புக்கு வணக்கத்தை விட்டுவிட்டு பதில் கூற வேண்டுமென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருப்பதினாலும் “புகஹா” மார்க்கச் சட்ட மேதைகள் சட்ட நூல்களில் கூறியிருப்பதினாலும் தொழுகை போன்ற பிரதான வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட நபீ ஸல் அவர்களின் அழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பது தெளிவாகிவிட்டது. 

மேலே கூறிக்காட்டிய விவகாரத்தில் இருந்தும் நபீஸல் அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிவிட்டது. 

வழிகேடன் நஜ்தியினதும், அவனின் முகவர்களினதும் கூற்றுப்படி நபீஸல் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனென்றால் தொழுகின்ற ஒருவனை நாம் அழைத்தால்க்கூட அவன் தொழுகையை விட்டுவிட்டு நமக்குப் பதில் கூற வேண்டுமல்லவா? அல்லது நபீ அழைத்தாலுங்கூட தொழுகையை விட்டுவிட்டு பதில் கூறக்கூடாதென்று சட்டம் வந்திருக்க வேண்டுமல்லவா? எங்கே சட்டம் இருக்கிறது? இதற்கு என்ன சொல்வார்கள்? 

தொழுகை இறைவனுடன் வசனிக்கும் ஒரு மகோன்னத வணக்கமாகும். அவ்வணக்கத்தைக்கூட விட்டுவிட்டு நபீயவர்களின் அழைப்புக்குப் பதிலளிக்க வேண்டுமென்று திருக்குர்ஆன் கட்டளையிடுகிறதென்றால் அந்த நபீ நம்போன்ற சாதாரண மனிதன்தானா? என்பதை சிந்தித்துணர வேண்டும். 

அதான் ஒலிக்காத அண்ணல் 

“அதான்” பாங்கு சொல்வதிலும், “இமாமத்” இமாமாக நின்று தொழுகை நடத்துவதிலும் எது சிறந்ததென்ற கேள்விக்கு தொழுகை நடாத்துவதைவிட பாங்கு சொல்வதுதான் சிறந்ததென்று மார்க்கச்சட்ட மேதைகள் கூறுகின்றனர். 

எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பாங்கு சொன்னதாக வரலாறு கிடையாது. எனினும் பல தடவைகள் இமாமாக நின்று தொழுகை நடத்தியிருக்கிறார்கள். 

எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல் அவர்கள் பாங்கு விஷயத்தில் செய்யாமல் விட்டதேன்? என்பதை ஆராய வேண்டும். அவர்கள் பாங்கு சொல்லாமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில் அவர்கள் பாங்கு சொன்னால் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” “ஹய்ய அலல் பலாஹ்” என்று சொல்ல வேண்டும். 

அதாவது தொழுகைக்கு வாருங்கள்; வெற்றியின் பக்கம் வாருங்கள் என்று அழைக்க வேண்டும். நபீயவர்கள் அவ்வாறு அழைத்தால் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தின்படி அவர்களின் அழைப்பைக் கேட்டவர்கள் அனைவரும் தமது வேலைகளை விட்டுவிட்டு உடனடியாகத் தொழுகைக்கு விரைந்து சமூகமளிக்க வேண்டும். அவ்வாறு வருதல் தவிர்க்க முடியாத கடமையாகிவிடும். இதனால் உடனடியாகத் தொழுகைக்கு வரமுடியாத நிலையிலிருப்போர் அனைவரும் தண்டனைக்குரிய குற்றவாளியாகிவிடுவர். 

எனவேதான் பாங்கு சொல்வதால் மக்களுக்கு இத்தகைய சிரமம் ஏற்படுமென்பதை அறிந்த நபீஸல் அவர்கள் பாங்கு சொல்லாமல் தொழுகையை மட்டும் முன்னின்று நடத்தினார்கள். அவர்கள் “றஹ்மத்” உலக மக்களின் அருட்கொடை என்ற உண்மையை இது நிரூபித்துக் காட்டுகிறது. 

இந்த விவரத்தின் மூலமாக நபீயவர்களின் அழைப்புக்குப் பதில் கூறுவது கடமையென்பது தெளிவாகிவிட்டது. 

“நான் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்தபொழுது நபீஸல் அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் பதில் கூறவில்லை. தொழுகையை முடித்துவிட்டு நபீஸல் அவர்களிடம் வந்தேன். “அல்லாஹ்வின் றஸூலே! நான் தொழுது கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களின் அழைப்புக்குப் பதில் கூறவில்லை. என்று சொன்னேன். 

அதற்கு நபீஸல் அவர்கள் “அல்லாஹ்வும் றஸூலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு பதில் கூறுங்கள்” என்ற திருமறை வசனத்தை ஓதிக்காட்டி, அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருப்பது உமக்குத் தெரியாதா? என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்கள். என்று அபூ ஸயீத் பின் அல்முஅல்லா றழி அவர்கள் கூறினார்கள். 
(ஆதாரம் :புஹாரி)​ 

தொழுது கொண்டிருக்கின்ற ஒருவனை நபீஸல் அவர்கள் அழைத்தால் அவன் உடனே தொழுகையை விட்டுவிட்டு நபீஸல் அவர்களுக்கு பதில் கூற வேண்டுமென்பது இந்த ஸஹீஹான ஹதீது மூலமாக மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

இறை கூறும் சிறப்புரைகள்

நபீ ஸல் அவர்கள் உடலமைப்பில் நம்போன்றிருப்பினும், எதார்த்தத்திலும், அந்தஸ்த்திலும் அவர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை என்பதற்கு இறைவன் கூறிக்காட்டும் சில சிறப்புரைகளை இங்கு அவதானிப்போம்.

“லா தஜ்அலூ துஆ அர்றஸுலி பைனகும் கதுஆஇ பஃளிகும் பஃளா”

உங்களுக்கிடையில் ஒரு சிலர் மறுசிலரை அழைப்பதுபோல் நபீயவர்களை அழைப்பதை ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
திருக்குர்ஆன் :24 – 63 

இம்மறை வசனத்திற்கு இரண்டு விதமாக விளக்கம் எழுதப்பட்டுள்ளது.

ஒன்று : நீங்கள் றஸூல் அவர்களைப் பகைப்பட்டுக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்குப் பாதகமாகக் கேட்கும் “துஆ”வை நீங்கள் உங்களுக்குக்கிடையில் கேட்கும் துஆவைப் போன்று ஆக்கிவிடாதீர்கள், எண்ணிக் கொள்ளாதீர்கள்.

அதாவது நபீஸல் அவர்கள் ஒருவனுக்குப் பாதகமாகக் கேட்கும் துஆவுக்கும், மற்றவர்களில் ஒருவர் இன்னொருவருக்குப் பாதகமாகக் கேட்கும் துஆவுக்குமிடையில் வித்தியாசம் உண்டு.

நபீஸல் அவர்களின் துஆ எவ்வித தங்குதடையுமின்றி “கபூல்” ஏற்றுக் கொள்ளப்படும். மற்றவர்களின் துஆவுக்கு இந்த உத்தரவாதமில்லை. 

மேலே சொன்ன திருவசனத்திற்கு இப்படியும் ஒரு விளக்கம் உண்டு இந்த விளக்கம் மேற்கூறிய திருவசனத்தில் வந்துள்ள துஆ என்ற சொல்லுக்குப் “பிரார்த்தனை” என்று அர்த்தம் வைத்துக் கொண்ட படியேயாகும்.

இரண்டு : உங்களில் ஒரு சிலர் மறுசிலரை அழைக்கும் பொழுது அவர்களின் பெயர்களைக்கூறி இப்றாஹீமே என்றும், இஸ்மாயீலே என்றும் அழைப்பதுபோல் நபீஸல் அவர்களை அவர்களின் பெயர் கொண்டு முஹம்மதே ! என்று அழைக்காதீர்கள்.

நீங்கள் அவர்களை அழைப்பதாயின் “யாறஸூலல்லாஹ்” என்றோ “யாநபிய்யல்லாஹ்” என்றோ கௌரவமாக அழையுங்கள்.

இந்த விளக்கம் மேற்கூறிய திருவசனத்தில் வந்துள்ள “துஆ” என்ற சொல்லுக்கு “அழைத்தல்” என்று அர்த்தம் வைத்துக்கொண்ட படியேயாகும்.

இத்திருவசனத்தின்படி நம்மில் ஒரு சிலர் மறுசிலரை பெயர் குறிப்பிட்டு முஹம்மதே ! என்று அழைக்காமல் “யாநபிய்யல்லாஹ், யாறஸூலல்லாஹ், யாஹபீபல்லாஹ்” என்பன போன்ற கௌரவமான வார்த்தைகளைக் கொண்டு அழைப்பது கடமையென்பதும், இவ்வாறு அழைக்காமல் அவர்களின் பெயர் கொண்டழைப்பது தண்டனைக்குரிய குற்றமென்பதும் தெளிவாக விளங்கிவிட்டது.

மேலே எழுதிக்காட்டிய திருவசனத்துக்கு இரண்டு விதமாக அர்த்தம் வைத்துக் கொண்டாலும் அவை இரண்டும் நபீஸல் அவர்களின் சிறப்பைத்தான் விளக்குகின்றன.

வழிகேடர் சொல்வதுபோல் நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் நாம் நமது நண்பர்களை பெயர் சொல்லி அழைப்பது போல் அவர்களையும் பெயர் சொல்லி அழைக்கலாமல்லவா? அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் பெயர் சொல்லி அவர்களை அழைப்பதை திருக்குர்ஆன் தடுத்திருக்காதல்லவா?

நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்களின் “துஆ” பிரார்த்தனை மட்டும் “கபூல்” ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இறைவனின் உத்தரவாதம் தேவையில்லையல்லவா?

இன்னொரு வசனத்தைப் பாருங்கள். இதிலும் நபீஸல் அவர்களின் எதார்த்தச் சிறப்பை அல்லாஹ் எடுத்துரைத்துள்ளான்.

“யா அய்யு ஹல்லதீன ஆமனூ லாதர்பஊ அஸ் வாதகும்பவ்க ஸவ்தின் நபிய்யி வலா தஜ்ஹறூலஹூ பில்கவ்லி கஜஹ்ரி பஃளிகும் லிபஃளின் அன் தஹ்பத அஃமாலுகும் வ அன்தும் லாதஷ் உறூன்”

“விசுவாசிகளே நபீ பேசும் பொழுது நபீயினுடைய சப்தத்திற்கு மேல் உங்களின் சப்தத்தை உயர்த்திப்பேசாதீர்கள். அன்றி, உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் உரக்கப் பேசுவதைப்போல் அவரிடம் சப்தத்தை உயர்த்தி நீங்கள் உரக்கப் பேசாதீர்கள். ஏனெனில் உங்களின் நன்மையான செயல்களெல்லாம் பயனற்றுவிடும். இதனை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.”
திருக்குர்ஆன் : 49 – 02 

நம்மில் ஒருவர் மற்றொருவருடன் பேசும்பொழுது எவ்வித கட்டுப்பாடுமின்றி விரும்பியவாரு பேசமுடியும். ஒருவர் மற்றவரைவிடச் சப்தத்தை உயர்த்தியும் பேசலாம், தாழ்த்தியும் பேசலாம். இதுபற்றி மார்க்க ரீதியான தடை ஒன்றுமில்லை.

எனினும்; நபீஸல் அவர்களுக்கு முன்னால் இருப்பவர்கள் நபீயைவிட சப்தத்தைத் தாழ்த்திப் பேச வேண்டுமேயன்றி அவர்களைவிடச் சப்தத்தை உயர்த்திப் பேசக்கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவன் அவ்வாறு பேசினால் அவன் ஆயிரம் கோடி வருடம் வயது கொடுக்கப்பட்டு அத்தனை வருடங்களும் இடையறாது வணக்கம் செய்தாலுங்கூட அவனின் அமல்களெல்லாம் அழிந்துபோதும். பயனற்றுப் போய்விடும்.

ஒருவர் நபீ(ஸல்) அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசுவதைத் தடைசெய்ததோடு மட்டும் அல்லாஹ் நின்றுவிடவில்லை. அவ்வாறு செய்பவர்களின் அமல்கள்கூட அழிந்துபோகுமென்றும் கூறியுள்ளான். எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கை இது எதனால்?

நபீ(ஸல்) அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசுபவனின் அமல்கள் அழிக்கப்படுகின்றன என்ற இறைவனின் கூற்று நபீ(ஸல்) அவர்களின் அந்தஸ்த்து எத்தகையதென்பதைத் தெளிவாக விளக்குகிறது. 

திருக்குர்ஆனின் ஆதாரப்படியும், திரு நபீயின் நிறைமொழி தரும் ஆதாரப்படியும் ஒருவன் செய்த நல்லமல்கள் அவன் கொலை செய்வதினாலோ, கொள்ளையடிப்பதினாலோ விபச்சாரம் செய்வதினாலோ அழிந்துவிடமாட்டாது. அழிக்கப்படவுமாட்டாது. அவன் செய்த நல்லமல்கள் நல்லமல்களாகவே இருக்கும். எனினும் ; மேலே சொல்லப்பட்ட பாவச் செயல்களுக்கெல்லாம் அவனுக்குத் தண்டனை வழங்கப்படும் அவ்வளவுதான். 

ஆனால் நபீ(ஸல்) அவர்களின் சமூகத்திலே ஒருவன் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசிவிட்டால் அவன் செய்த நல்லமல்களெல்லாம் அழிந்துவிடுமென்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆக, முன் கூறப்பட்ட கொலை, களவு, விபச்சாரம் போன்ற பாவச் செயல்களைவிட நபீயவர்கள் முன் சப்தத்தையுயர்த்திப் பேசுவது பெரும் பாவமென்பதும், அதன் காரணமாக ஏற்கனவே செய்த நல்லமல்கள் அழிக்கப்பட்டு விடுமென்பதும் தெளிவாகிவிட்டது.

ஒரு மனிதனின் அமல்கள் அவன் செய்கின்ற எந்த ஒரு பாவச்செயலாலும் அழிந்து போகமாட்டாது. எனினும் “ரித்தத்” எனும் மதமாற்றத்தின்மூலம் மட்டும்தான் ஒருவனின் நல்லமல்களெல்லாம் அழிந்து போகின்றன.

இதிலிருந்து நபீஸல் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசினவன் எதார்த்தத்தில் மதம் மாறினவனாயிருப்பதினால்தான் அதைக் கொண்டு அவனின் அமல்கள் அழிந்துவிடுகின்றன என்று திருக்குர்ஆன் கூறியுள்ளது.

எனவே ஒருவன் நபீ(ஸல்) அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப்பேசினால் அவன் மதம் மாறிவிடுகிறானென்ற கருத்தும் இங்கே சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது விளங்கப்படுகிறது.

எனினும் நபீ(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும், அல்லது கீழ்த்தரமாக கருதும் நோக்கத்தில் ஒருவன் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசினால் அவன் காபிராகிவிடுகிறானென்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இஸ்லாத்தில் இல்லை.

ஆனால் இழிவுபடுத்தும் நோக்கமின்றி சப்தத்தை உயர்த்திப் பேசுவது குற்றத்தை மட்டும் ஏற்படுத்துமேயன்றிக் “குப்ரை” ஏற்படுத்தாதென்று அறிஞர்கள் அனைவரும் ஒருமித்துக் கூறியுள்ளார்கள்.

மேலே எழுதிக்காட்டிய திருவசனத்தில் “நீங்கள் நபியைவிடச் சப்தத்தை உயர்த்திப் பேசுவதால் மட்டுமே உங்கள் அமல்களெல்லாம் அழிந்துவிடும்” என்ற அல்லாஹ்வின் ஆணையிலிருந்து உயர்த்திப் பேசுதல் “குப்ரை” ஏற்படுத்தி விடுமென்ற கருத்து சூசகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு உலகில் நபீஸல் அவர்களல்லாத வேறெவருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றனவா?

நபீஸல் அவர்களின் சப்தத்தைவிடத் தனது சப்தத்தை உயர்த்திப் பேசியவனின் நிலை இத்தகையதென்றால் அவர்களைத் தரக்குறைவாய் நினைத்தவனின் நிலையும் எத்தகையதென்பதை யூகித்துப்பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

மேலே கூறிக்காட்டிய திருக்குர்ஆன் வசனங்களைக் கொண்டும் நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற மனிதனில்லை என்பது தெளிவாகிறது.

பிறப்பின் சிறப்புக்கள்

நபீ(ஸல்) அவர்கள் பிறக்கும்பொழுது தலைக்கு எண்ணையிடப்பட்டவர்களாயும், “கத்னா” எனும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாயும், கண்களுக்கு சுறுமா இடப்பட்டவர்களாயும், புன்னகைத்தவர்களாயும், தொழுகையில் “ஸூஜூது” செய்யும் அமைப்பில் இரு கைகளையும் பூமியில் ஊன்றித் தலையைச் சற்று உயர்த்தினவர்களாயும், வலது கைச் சுட்டு விரலைக் கொண்டு “ஒன்று” எனச்சுட்டிக் காட்டினவர்களாயும் பிறந்தார்கள்.

நபீ(ஸல்) அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் இத்தகைய பிறப்பம்சச்சிறப்புக்களும், விஷேசங்களும் அவர்களுக்கு இருக்குமா? அவர்கள் நம்போன்றவரென்றால் நமக்கும் இத்தகைய சிறப்புக்களும், விஷேசங்களும் இருக்க வேண்டுமல்லவா?

மனிதருள் மாணிக்கம், மாநிலத்தின் மறுவிலாதெழுந்த முழுமதி சம்பூரணோதயம் ஸர்தார் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யார்தான் இத்தகைய சிறப்பம்சங்களுடன் இப்பாரினில் பிறந்தார்?


அல்லாஹ்வை நினைக்கும் தொழுகையில் அண்ணலையும் நினைக்க வேண்டும்

ஒரு மனிதன் தொழுகையில் அல்லாஹ் அல்லாத எந்த ஒரு சிருட்டியை முன்னிலைப்படுத்திப் பேசினாலும் அவனின் தொழுகை “பாதில்” வீணாகிவிடும்.

தொழுகையில் அல்லாஹ்வை மட்டும்தான் முன்னிலைப்படுத்திப் பேசமுடியுமேயன்றி வேறெவரை முன்னிலைப்படுத்திப் பேசினாலும் தொழுகை வீணாகிவிடும். இதுதான் “புகஹாஉ” சட்டமேதைகளின் தீர்க்கமான முடிவு.

ஒருவன் தும்மிவிட்டு “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொன்னதை இன்னொருவன் கேட்டால் அதற்குப் பதிலாக “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக என்று கூற வேண்டும். இது பொதுவான ஒரு சட்டம்.

எனினும் தும்மிய ஒருவன் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொன்னதைத் தொழுது கொண்டிருக்கின்ற இன்னொருவன் கேட்டால் வழமையாகப் பதில் சொல்வதுபோல் தும்மினவனை முன்னிலைப்படுத்தி “யர்ஹமுகல்லாஹ்” என்று சொன்னால் அவனின் தொழுகை “பாதில்” வீணாகிவிடும்.

எனினும், தொழுது கொண்டிருப்பவன் தும்மினவனுக்குப் பதில்கூற விரும்பினால் அவனை முன்னிலைப்படுத்தாமல் “யர்ஹமுஹூல்லாஹ்” அவனுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று படர்க்கையில் மட்டும் சொல்ல முடியும்.

தொழுகையில் அல்லாஹ் அல்லாத வேறெவரையும் முன்னிலைப்படுத்தக் கூடாதென்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது. உணர்த்துகிறது.

“ஷரீஅத்” இவ்வாறிருக்கும் பொழுது தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும் பொழுது “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” நபீயே உங்கள் மீது “ஸலாம்” உண்டாவதாக ! என்று நபீஸல் அவர்களை முன்னிலைப்படுத்திக் கூற வேண்டுமென்று “ஷரீஅத்” சட்டம் கூறுகிறது.

“ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மது கஸ்ஸாலி றஹ்” அவர்கள் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்னும் தங்களின் ஸுபிஸ நூலில் ஒரு மனிதன் தனது தொழுகையில் “அத்தஹிய்யாத்” ஓதும் பொழுது “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” என்று சொல்லும் வேளை நபீ(ஸல்) அவர்களை தனது மனக்கண் முன் நிறுத்தி அவர்களை முன்னிலைப்படுத்தி “ஸலாம்” சொல்ல வேண்டுமென்று எழுதியுள்ளார்கள்.

தொழுகையில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யு” என்று “ஸலாம்” சொல்லும்பொழுது நபீ(ஸல்) அவர்களின் உருவத்தைக் கற்பனை செய்ய வேண்டுமென்றும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து நபீயவர்களின் அந்தஸ்து எத்தகையதென்பது தெளிவாகிவிட்டது.

அவர்களுக்கு மட்டும் இவ்விஷயத்தில் விதிவிலக்கப்பட்டதிலிருந்து அவர்கள் நம்மைப் போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது.

நபீ(ஸல்) அவர்கள் நம்மைப்போன்ற மனிதனென்றால் தொழுகையில் அவர்களை முன்னிலைப்படுத்தினால் தொழுகை பாதிலாகி – வீணாகிவிட வேண்டும். ஆனால் தொழுகையின் போது “அத்தஹிய்யாத்தில்” அவர்களை நினைத்து முன்னிலைப்படுத்தி “ஸலாம்” கூறவில்லையென்றால்தான் தொழுகை வீணாகிவிடுமென்று அறிவுக்கடல் இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும், மற்றும் ஸுபிகளும் ஞானிகளும் கூறுகின்றார்கள்.

தொழுகையில் நபீஸல் அவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“அஸ்ஸலாமு அலைக்க” என்ற வசனத்தில் அலைக என்ற சொல்லிலுள்ள“க” என்றஎழுத்து ஒருவரை முன்னிலைப்படுத்துவதற்குரியதாகும்.

ஒருவன் தனக்கு முன்னால் எவருமில்லாத நேரத்தில் முன்னிலையைக் காட்டும் எழுத்தைக் கொண்டு முன்னிலைப்படுத்திப்பேச முடியாது. அவ்வாறு ஒருவன் பேசினால் அவனைக் காண்பவர்கள் பைத்தியக்காரனென்று சொல்வார்கள்.

இதன்படி தொழுது கொண்டிருக்கும் ஒருவன் “அஸ்ஸலாமு அலைக்க” என்று சொல்லும் பொழுது நபீ(ஸல்) அவர்களைத் தனது தலைக் கண்ணால் தனக்கு முன்னால் காண வேண்டும். இது தான் எதார்த்தம். இந்நிலையெய்துவதுதான் “கமாலிய்யத்” சம்பூரணம் எனப்படும் நபீமார்களும், வலீமார்களும் இந்நிலை யெய்தியவர்கள்தான். இந்நிலையடையாத எவரும் “அல்இன்ஸானுல் காமில்” சம்பூரணம் என்ற இடத்தையடையமாட்டான். அவன் மனக்கண் திறந்தவனாகவுமாட்டான். வணக்கத்தின் ருசியை அனுபவிக்கவுமாட்டான்.

தனக்கு முன்னால் தலைக் கண்ணாலும் காண்பது எல்லோராலும் சாத்தியமானதல்ல. அதற்குத் தகுதியில்லாதவர்கள் தமது மனக்கண்ணிலாவது அந்நேரம் அவர்களைக் காணவேண்டும்.

மனக்கண்ணால் காண்பதென்றால், அவர்களின் உடலமைப்பை தனது மனக்கண்முன் நிறுத்துவதைக் குறிக்கும். இதற்கு நபீ(ஸல்) அவர்களின் உடலமைப்புப் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஹதீதுக் கிரந்தங்களிலும் , வரலாற்று நூல்களிலும் அவர்களின் உடலமைப்புப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.

விஸால்

“நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்காதீர்கள்” என்று நபீ (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கூறினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்கிறீர்களே நாயகமே ! என்று கேட்டார்கள். அதற்கு நபீ (ஸல்) அவர்கள் “லஸ்த்து கஅஹதின் மின்கும்” நான் உங்களில் எவரைப் போன்றவனு மில்லை. நான் உண்பதற்கு உணவு தரப்படுகிறேன், குடிப்பதற்குப் பானமும் தரப்படுகிறேன் என்று கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அனஸ் (றழி)
தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாமென்று நபீ(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைத் தடை செய்தார்கள். அதற்கு ஸஹாபாக்கள், நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்கிறீர்களே நாயகமே ! என்று கேட்டார்கள், அதற்கு நபீஸல் அவர்கள் நான் உங்களைப் எவரைப் போன்றவனுமில்லை. நான் உண்பதற்கு உணவு தரப்படுகிறேன். குடிப்பதற்குப் பானமும் தரப்படுகிறேன் என்று கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அப்துல்லாஹ் பின் உமர் (றழி)

நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாமென்று ஸஹாபாக்க​ளைத் தடை செய்த நபீ (ஸல்) அவர்கள், உங்களில் யாராவது தொடர்ந்து நோன்பு நோற்க விரும்பினால், “ஸஹர்” நேரம் வரை மட்டும் தொடர்ந்து நோற்கலாம் என்று கூறினார்கள்.

அதற்கு ஸஹாபாக்கள்; நீங்கள் தொடர்ந்து நோன்பு நோற்கிறீர்களே நாயகமே! என்று வினவியதற்கு நான் உங்களைப் போன்றவனில்லை. எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருவான். எனக்குக் குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்குக் குடிக்கத் தருவான். என்று நபீ ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புஹாரி
அறிவிப்பு : அபூ ஸயீத் (றழி)

ஒருவன் நோன்பை “விஸால்”செய்வது கூடாது. “ஸஹர்” செய்து நோன்பு வைத்தால் “மஃரிப்” நேரம் அவன் நோன்பு திறந்துவிட வேண்டும்.

“மஃரிப்” நேரமாகியும் நோன்பு திறக்காமல் தொடர்ந்து மறுநாள் “மஃரிப்” நேரம் வரைக்கும் நோன்புடனிருந்தால். “விஸால்” என்று சொல்லப்படும். இவ்வாறு செய்தல் மார்க்கத்தில் கூடாது. இது தடுக்கப்பட்ட விஷயம்.

இத்தகைய “விஸால்” கூடாதென்பதற்குப் பல காரணங்கள் கூறலாம். அவற்றில் பிரதான காரணத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

ஒருவன் தனக்கு நோய் வராவண்ணம் பாதுகாத்து நடந்து கொள்வது அவனின் கடமையாகும். இன்னதைச் சாப்பிட்டால் காய்ச்சல் வருமென்று அவன் அறிந்தால் அதைச் சாப்பிடுவது கூடாது. இன்னதைச் சாப்பிட்டால் வயிற்றுவலி வருமென்று அவன் அறிந்தால் அதைச் சாப்பிடுவது கூடாது.

இதேபோல் ஒருவன் தனது உடலுக்கு நோயை அல்லது பலவீனத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுவகைகளை உட்கொள்வதும், அல்லது அதற்கேற்ப நடந்து கொள்வதும் கூடாது.

ஒருவன் அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்பது மார்க்கத்தில் வேண்டப்பட்ட விஷயம்தான். அதேபோல் ஒருவன் தன்னாலியன்ற அளவு வணக்கம் செய்ய வேண்டுமென்பதும் வேண்டப்பட்ட விஷயமேயாகும்.

எனினும் ; அதற்காக உடலைப் பாதிக்குமளவுக்கு உணவின்றியும், கண்விழித்தும் வணக்கம் செய்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஒரு சமயம் நபீ (ஸல்) அவர்கள் பள்ளிவாயலில் நுழைந்தார்கள். அங்கே இரு தூண்களுக்கிடையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

இது யாருடைய கயிறு எதற்காகக் கட்டப்பட்டுள்ளது என்று கேட்டார்கள். அங்கிருந்தவர்கள், இது ஸைனப் நாயகி (றழி) அவர்களின் கயிறு. இராவணக்கம் செய்து கொண்டிருக்கும் வேளை தூக்கம் அல்லது சோர்வு ஏற்பட்டால் இக்கயிற்றைப் பிடித்துத் தொங்கித் தனக்கேற்படும் தூக்கத்தையும் சோர்வையும் போக்கி உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று கூறினார்கள். 

அதற்கு நபீ (ஸல்) அவர்கள் இக்கயிற்றை அவிழ்த்து விடுங்கள் என்று கூறிவிட்டு உங்களில் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு வணக்கம் செய்ய வேண்டுமென்றும் கூறினார்கள்.
ஆதாரம் :புஹாரி, முஸ்லிம்
அறிவிப்பு :அனஸ் (றழி)

இந்த ஹதீது நமக்குப் பல பாடங்களைத் தருகிறது. அவற்றில் நான் எழுதிவருகின்ற தலைப்புக்குப் பொருத்தமான விஷயத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன்.

ஸைனப் நாயகி (றழி) அவர்கள் வணக்கம் செய்வதற்காகத்தான் அவ்வாறு செய்தார்களேயன்றி வீண் விளையாட்டுக்காகச் செய்யவில்லை.

நபீ (ஸல்) அவர்கள் அதைத் தடுத்தது வெளியரங்கத்தில் வணக்கத்தைத் தடுத்தது போலிருந்தாலும், உண்மையிலே நபீயவர்கள் வணக்கத்தைத் தடுக்கவில்லை. எனினும் ; ஸைனப் நாயகியின் உடல் நலத்தைக் கருதியே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.

எனினும் வணக்கம் செய்வது வேண்டப்பட்ட விஷயமாயிருப்பதுபோல் உடலைப் பாதுகாப்பதும், உடலைப் பாதிக்கக் கூடியவற்றைத் தவிர்த்துக் கொள்வதும் வேண்டப்பட்ட விஷயம்தான்.

ஐங்காலத் தொழுகை போன்ற பர்ழ் கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினாலுங் கூட அவைகளை விட்டு விடக்கூடாது.

எனினும் ;ஸுன்னத்தான வணக்கங்களைப் பொறுத்தவரை அவற்றால் உடலுக்குத் தீமை ஏற்படுமாயின் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

உதாரணமாக, இரவில் நடுநிசியில் விழித்தெழுந்து “தஹஜ்ஜுத்” எனும் இராவணக்கம் செய்து வரும் ஒருவனுக்கு அதனால் தலையிடி, மயக்கம் போன்ற வியாதிகள் ஏற்பட்டு உடலைப் பாதிக்குமாயின் அவன் அவ்வணக்கத்தை விட்டுவிட வேண்டும்.

நோன்பு நோற்கத் தடை செய்யப்பட்ட ஆறு நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் நோன்பு நோற்பது பயனுள்ள ஸுன்னத்தான அமலாகும்.

எனினும் ஆகுமாக்கப்பட்ட நாட்களில் தொடர்ந்து நோன்பு நோற்று வரும் ஒருவனுக்கு அதனால் உடலில் தாக்கம் அல்லது பலவீனம் போன்றவை ஏற்படுமாயின் அவர் அந்த வழமையை விட்டு விட வேண்டும்.

ஒரு சமயம் நபீ (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் றஸூலே! எனது கணவர் இரவெல்லாம் நின்று வணங்குகிறார். பகலெல்லாம் நோன்பு நோற்கிறார் என்று கூறினாள்.

தனது கணவன் தன்னுடன் உடலுறவு கொள்வதில்லையென்ற கருத்தைச் சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட நபீ (ஸல்) அவர்கள் அவளின் கணவனை அழைத்து நீங்கள் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும், இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீங்கள் இதன் பிறகு ஒரு நாள் நின்று வணங்குங்கள், மறு நாள் உறங்குங்கள். ஒரு நாள் நோன்பு வையுங்கள், மறு நாள் நோன்பை விடுங்கள்.

நீங்கள் உங்கள் உடலுக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. அதை அதற்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் கண்ணுக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. அதை அதற்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. அதை அவளுக்குக் கொடுத்தாக வேண்டும். கடமையுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் கடமையைக் கொடுக்க வேண்டும் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் :புஹாரி, முஸ்லிம்
அறிவிப்பு :அப்துல்லாஹ் இப்னுஅம்றிப்னில் ஆஸ் றழி

இந்த நபீ மொழியும் முதலில் கூறிய நபீ மொழிபோல் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதாக அமைந்துள்ளது.

ஒருவன் தனது உடலுக்குக் கொடுக்க வேண்டிய கடமையைக் கொடுக்க வேண்டுமென்பதுதான் இஸ்லாம் கூறும் அறிவுரையாகும்.


இந்த அறிவுரையைப் பேணாமல் மேலதிக வணக்கத்தைக் கொண்டோ, வணக்கமல்லாத வேறு விஷயங்களைக் கொண்டோ உடலைப் பாதிக்குமளவு நடந்து கொள்வது குற்றமாகும்.

நாம் சிலரைப் பார்க்கிறோம். அவர்கள் “இபாதத்” “இபாதத்” என்று இரண்டு நாட்கள் செய்கிறார்கள். மூன்றாம் நாள் உடல் பலவீனமாகி சோம்பலும், சோர்வும் ஏற்பட்டுப் பத்து நாட்கள் “பர்ளு” கடமையான வணக்கத்தை விட்டு விட்டுச் சும்மா இருந்து விடுகிறார்கள்.

இன்னும் சிலர் இரவெல்லாம் வணக்கம் செய்கிறார்கள். தூக்க மேலிட்டால் “ஸுப்ஹு”த் தொழுகையின்றி உறங்கிவிடுகிறார்கள். இவர்கள் கண்ணுக்குரிய கடமையைக் கொடுக்காதவர்களாவர்.

இன்னும் சிலர் ஞானம் ஞானமென்றும், துறவறம் துறவறமென்றும் உண்ணாமலும், உறங்காமலும், ஒழுங்காக உடுக்காமலும், மனைவி மக்கள் குடும்பமென்ற சிந்தனையில்லாமலும், பள்ளியும் ஆட்களுமாய்க் காலங்கழிக்கிறார்கள். காடுமேடுகளிலும் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் மனைவி மக்களின் கடமையைக் கொடுக்காதவர்களாவர்.

அல்லாஹ் படைத்த ஒவ்வொரு படைப்பும் படைப்புக்குக் கொடுக்க வேண்டிய கடமையுண்டு. ஒவ்வொருவரும் அவரவர் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்.

உடலாரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டுதான் மேற்கூறப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில் விளக்கப்பட்ட விஷயம்தான் “விஸால்” நோன்புமாகும்.

ஒருவன் ஒருநாள் சாப்பிட்டு “ஸஹர்” சாப்பாட்டுடன் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றால் நிச்சயமாக அவனின் உடல் பலவீனமாகிவிடும். அதனால் அவனுக்குப் பலவித நோய்கள் ஏற்பட்டு அவன் மரணித்து விடவுங்கூடும். இதை அடிப்படையாக வைத்துதான் நோன்பை “விஸால்” திறக்காமல் தொடர்ந்து பிடிப்பது விலக்கப்பட்டுள்ளது. ஹறாமாக்கப்பட்டுள்ளது.

எனினும் நபீ ஸல் அவர்களுக்கு மாத்திரம் நோன்பை “விஸால்” செய்வது ஆகுமாக்கப்பட்டுள்ளது.

உடலாரோக்கியத்தையிட்டு அனைவருக்கும் ஹறாமாக்கப்பட்டுள்ள “விஸால்”நோன்பு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் ஆகுமாக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனில்லையென்பது புத்தி குறைந்தவர்களுக்குக் கூட விளங்கக் கூடிய விஷயமேயாகும்.

ஒரு மனிதன் சாப்பிடுவதால் அவனின் உடல் சக்தியோடும் ஆரோக்கியத்தோடுமிருக்கும். அவன் உணவைக் குறைத்தால் அல்லது முற்றாக அதை நிறுத்தினால் அவனின் உடல் மெலிந்தும், பலவீனமடைந்தும் போய் விடும். அதோடு நோய்களும் அவ்வுடலை தீண்டத்தொடங்கி விடும்.
இவை மனித உடலின் தன்மைகள் எனினும் மனிதனிலுள்ள ”றூஹானிய்யத்” ஆன்மீகம் பூரணத்துவம் பெற்றதாயும் சக்தி மிக்கதாயும் இருக்குமானால் அது ”ஜிஸ்மானிய்யஹ்” உடலின் தன்மைகளை மிகைத்து விடும்.

ஆன்மீகம் மிகைத்தவன் – றூஹுடைய மகாம் படித்தரத்தில் நிற்பவன் உண்ணாமலிருப்பதாலும், உறங்காமலிருப்பதாலும் அவனின் உடல் பலவீனமடையவோ, நோய்களுக்குள்ளாகவோ மாட்டாது. ஏனெனில் வெளிப்படையான நோயும், பலவீனமும் உடலுக்குள்ளவையேயன்றி றூஹ் - ஆன்மாவுக் குரியவையல்ல.

ஆன்மீகம் மிகைத்த நபிமார்களினதும், வலிமார்களினதும் வரலாறுகள் இதற்கு தக்க சான்றுகளாக உள்ளன.

இதற்குச் சான்றாக விரிவான இரு வரலாற்றை மட்டும் சுருக்கமாக இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

கொழும்பிலுள்ள பீர்ஸாஹிபு வீதிக்கு அப்படியொரு பெயர் வரக்காரணமென்னவென்று கொழும்பைச் சேர்ந்த விஷயம் தெரிந்த வயோதிபர் ஒருவரிடம் வினவிய போது அவர் பின்வருமாறு விவரித்தார்.

பீர்ஸாஹிபு வீதியில் தற்போது ”வலிய்யுல்லாஹ்” சமாதி கொண்டுள்ள “தர்ஹா” இருக்கும் இடம் அக்காலத்தில் பலாமரத் தோட்டமாக இருந்தது.

அங்கிருந்து இடிந்த கட்டிடமொன்றில் முஸ்லிம் வயோதிபர் ஒருவர் அழுக்கான கிழிந்த உடையில் வாழ்ந்து வந்தார். முஸ்லிம் மக்கள் அனைவரும் அவரை ஒரு யாசகன் என்று கணித்து அவருக்கு உதவி வந்தார்.

அவர் வாழ்ந்த கட்டிடத்தின் மறுபுறம் இவர் போல் கிழிந்த அழுக்கான ஆடையுடன் காபிரான மதகுரு ஒருவரும் வாழ்ந்து வந்தார்.

”காபிரீன்” கள் அனைவரும் அவரை ஒரு யாசகன் என்று கணித்து அவருக்கு உதவி வந்தனர்.

அந்நேரம் அந்த வீதிக்கு ”பீர்ஸாஹிபு வீதி” என்ற பெயர் இல்லாமலிருந்தது.

அவ்வீதியில் வாழ்ந்த எல்லா மத மக்களும் ஒன்று கூடி அதற்குப் பெயர் வைக்க விரும்பி ஆலோசனைநடத்திய போது அவ்விரு யாசகர்களையும் பரீட்சித்து அதில் வெற்றி பெருபவரின் பெயரை வைப்ப தென்று முடி வெடுத்தார்கள்.

யாசகர்களிருவரையும் அழைத்து உங்களிருவரையும் பரீட்சித்து அதில் வெற்றி பெருபவரின் பெயரை இவ்வீதிக்குச் சூட்ட விரும்புகிறோமென்று சொன்னார்கள்.

இருவரும் விருப்பம் தெரிவித்தனர். அவர்களிடம் நிபந்தனைகள் கூறப்பட்டன. தொடர்ந்து நாற்பது நாற்கள் இருவரையும் தனித்தனி அறையில் உணவும் நீருமின்றிப் பூட்டிவைத்தார்கள்.

பதினான்காம் நாள் காபிரான மதகுரு பூட்டிவைக்கப்பட்ட அறையிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. நாளடைவில் அது அதிகப்பட்டு அயலவர்களுக்கும் தொல்லை கொடுத்தது. மதகுரு இறந்து விட்டாரென்பதைத் தெளிவாக அவர்கள் அறிந்திருந்தும் நாற்பது நாற்களென்ற நிபந்தனையின்படி கதவு திறக்கப்படவில்லை.

நாற்பதாம் நாள் அதி காலை கதவிரெண்டும் ஒரே நேரத்தில் திறக்கபட்டன.

முஸ்லிம் துறவி தொழுகையில் ஸுஜுதுடைய நிலையில் இருக்கக் காணப்பட்டார். அவரின் அறையிலிருந்து உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நறுமணம் கமழ்ந்தது.

ஆனால் காபிரான துறவியின் உடல் அழுகிப் புழுக்களுக்கு உணவாகிக் கிடந்தது. அதிலிருந்து எழுந்த துர்நாற்றம் கூடி நின்றவர்களை மயக்கியது.

இறுதியில் ஆன்மீகப் பலத்தால் தனது உடலின் தன்மையை வென்ற முஸ்லிம் துறவியின் பெயர் அவ்வீதிக்குச் சூட்டப்பட்டது.

அன்று முதல் இன்றுவரை அவ்வீதி ”பீர்ஸாஹிபு வீதி” என்றே அழைக்கப்படுகிறது.

இந்த வரலாறு ஆன்மீகப் பலன் கூடினவர்கள் எத்தனை நாட்களும் உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்கள் என்பதையும், ஆனால் அவர்களின் உடலுக்கு எவ்விதக் குறையு மேற்படாதென்பதையும் தெளிவாக விளக்குகிறது.

இவர் கூறி வந்த விளக்கத்துக்கு கொழும்பில் நடைபெற்ற ஆண்டும், திகதியுமில்லாத இத்துப்போன வரலாறொன்றையல்லவா கூறுகிறார் என்று சிலர்கேட்கக் கூடும்.

கொழும்பில் நடைபெற்ற வரலாற்றை நான் கூறியது அது அண்மைக் காலத்தில் நமது நாட்டில் நடைபெற்ற வரலாறென்பதினாலேயேயன்றி எனது கூற்றுக்கு திருக்குர்ஆனில் ஆதாரம் இல்லையென்பதினானல்ல.

திருக்குர்ஆன் கூறும் ”அஸ்ஹாபுல் கஹ்ப்” குகை வாசிகளின் வரலாறு இதற்குத்தக்க சான்றாக அமைந்துள்ளது.

அவர்கள் குகையொன்றில் முன்னூற்றொன்பது வருடங்கள் விழிக்காமல் ஒரே உறக்கத்தில் இருந்தார்கள். விழித்த பின் பூரண ஆரோக்கியமுள்ளவராகக் கானப்பட்டார்கள். முன்னூற்றொன்பது வருடங்கள் உண்ணாமலும்,பருகாமலும் ஒரே உறக்கத்திலும் அவர்கள் இருந்துங்கூட அவர்களின் உடலில் எவ்விதக் குறைபாடும் மாற்றமும் காணப்படவில்லை.

அந்தக் குகை வாசிகள் அமரர்களுமில்லை, ஜின்களுமில்லை, நபீமார்களுமில்லை, றஸுல்மார்களுமில்லை.எனினுமவர்கள் ஆன்மீகப் பலம்கொண்ட வலீமார்களேயாவர்.

ஆன்மீகப் பலம் பெற்று ”விலாயத்” ஒலித்தனம் பெற்ற வலிமார்களின் நிலை இவ்வாறுதானிருக்கும்.

ஒலித்தனம் பெற்ற வலிமார்கள் நிலை இவ்வாறென்றால் நபித்துவம் பெற்ற ஆன்மீகப் பலத்தில் வலீமார்களை வென்ற நபிகட்கரசர் முஹம்மத் (ஸல்) அவர்களின் நிலையும் எவ்வாறிருக்கும்?

எனவே அவர்களுக்கு மட்டும் ”விஸால்” திறக்காமல் தொடர்ந்து நோன்பு நோற்பது ஆகுமாக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் இருக்குதல்லவா?

இதுவரை கூறி வந்த விளக்கங்களிருந்து உண்ணாமலிருப்பதாலும், உறங்காமலிருப் பதாலும், உடல்பலவீனமாதல், நோய் ஏற்படுதல் போன்ற உடலின் தன்மைகளை மிகைத்த ஆன்மீகச் சக்தியுள்ளவர்கள் எத்தனையாண்டுகள் உண்ணாமலும்,பருகாமலிருந்தாலும் அதனால் அவர்களின் உடல் பலவீனமாகிவிடாதென்பதும், எத்தனையாண்டுகள் கண்விழித்தாலும் அதனால் அவர்களுக்கு எத்தகைய நோயும்ஏற்படாதென்பதும், இன்னும் நபி (ஸல்) அவர்கள் எல்லையற்ற ஆன்மீகப் பலம் வாய்ந்தவர்களாயிருந்த படியாலும் அவர்களுக்கு ”விஸால்” நோன்பு ஆகுமாக்கப்பட்ட தென்பதும் தெளிவாகி விட்டது.

நபி ஸல் அவர்களுக்கு ”விஸால்” நோன்பு ஆகுமாக்கப்பட்டிருப்பது நபி ஸல் அவர்கள் நம் பொன்ற மனிதனில்லையென்பதை நிரூபித்துக் காட்டுகிறது.

அண்ணலின் வயது அறுபத்துமூன்றல்ல

நான் இப்படியோரு தலைப்பை தெரிவு செய்து விளக்கம் எழுதக்காரணம் வழிகேடர்களின் போதனைகளும், நடவடிக்கைகளுமேயாகும்.

நபி (ஸல்) அவர்களின் தாற்பரியமும், எதார்த்தமும் புரியாத, அல்லது புரிந்திருந்தும் மனமுரண்டினால் அவர்களைக் கீழ்த்தரமாகக் கணித்து உலக மக்களுக்கு காட்டி வருகின்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும், அவர்களின் அற்த்த மற்ற கூற்றுக்களை நம்பி மக்கள் வழிகேட்டில் விழுந்து விடக்கூடாதென்பதற்காகவும்தான் இத்தலைப்பை தெரிவு செய்தேன்.

இவர்கள் மட்டுமன்றி “உலமா உர்றுஸும்” அல்லது ளாகிறுடைய உலமாக்கள் எனப்படுவோர் தமது உபதேசங்களிலும், மேடைப் பேச்சுக்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறுகிறார்களே தவிர நபி (ஸல்) அவர்களின் எதார்த்தம் பற்றி கூறுகிறார்களில்லை.

நபி ஸல் அவர்களை மஹப்பத் நேசிக்க வேண்டுமென்றுதான் சொல்கிறார்களேயன்றி அவர்கள் மீது நேசம் ஏற்படுவதற்கான வழியைக் காட்டிக் கொடுக்கிறார்களில்லை.

ஒருவன் இன்னொருவனை நேசிப்பதாயின் நேசிப்பவனுக்கு நேசிக்கப்படுபவன் பற்றிய முழு விவரங்களும், அவனின் சிறப்பியல்புகளும், அவனின் எதார்த்த அகமியங்களும் முதலில் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் ஒருவனுக்கு இன்னொருவன் மீது நேசம் ஏற்படுவதற்கான அம்சமும் வழியுமாகும்.

நேசத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சத்தையும், அதற்கான வழியையும் சொல்லாமல் “நேசியுங்கள் நேசியுங்கள்” என்று மட்டும் சொல்வது அறிவீனமும், பயனற்றதுமாகும். இதனால் யாருக்கும் நேசம் ஏற்பட்டுவிடாது.

இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன்.

றபீக் என்பவனிடம் றஹீம் என்பவனைக் காட்டி இவனை நீ நேசிக்க வேண்டுமென்று சொல்வது போன்றுதான் நபி (ஸல்) அவர்களை நேசியுங்கள் என்று சொல்வதுமாகும்.

றஹீம் என்பவர் யார்? அவனின் அந்தரங்கங்கள் என்ன? அவனின் எதார்த்தம் என்ன? அவனிலுள்ள விஷேடமென்ன? அவனின் அகமியங்கள் என்ன? என்பது போன்ற விரங்கள் ஒன்றுமே றபீக்கிடம் கூறாமல் அவனிடம் றஹீமை நேசித்துக்கொள் என்று மட்டும் சொன்னால் நேசம் ஏற்படுவதற்கான அம்சம் தெரியாமல் அவன் எவ்வாறு நேசிப்பான்? அவனுக்கு எவ்வாறு நேசம் ஏற்படும்.

எனினும்; றஹீம் என்பவன் ஓர் அறிஞன்; சிறந்த எழுத்தாளன்; திறமைமிக்க பேச்சாளன்; நற்குணமும் நல்லொழுக்கமும் உள்ளவன்; அவனின எதார்த்தம் இத்தகையது; அவனின் சிறப்பியல்புகள் இன்னின்னவை என்று கூறிக்காட்டிய பிறகு அவனை நேசித்துக்கொள் என்று கூறினால் அவனுக்கும் றஹீம் மீது நேசமும், பாசமுமத் தாராளமாக வந்து விடம்.

இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களை நேசிக்குமாறு மக்களுக்குச் சொல்வதுமாகும். முதலில் அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் மீது பாசத்தையும், நேசத்தையும் ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைக் கூறிக்காட்ட வேண்டும்.

மக்களிடம் நபி ஸல் அவர்களின் எதார்த்தத்தையும், அநதரங்கத்தையும், சிறப்பையும் எடுத்து விளங்கிக் கூறாமல் நபீயை நேசியுங்களென்றும், அவர்களைப் பின்பற்றுங்களென்றும் காலமெல்லாம் கத்தித்திரிந்தாலும் அதனால் அவர்கள் காணும் பலன் ஒன்றுமே இல்லை.

எனவே நபி ஸல் அவர்களின் வயதைப் பொறுத்த அகமிய விளக்கத்தில் ஒரு சில குறிப்புகளை மட்டும் எழுதுகிறேன்.

நபி ஸல் அவர்களி கி.பி.570ல் அப்துல்லாவுக்கும் ஆமினாவுக்கும் அருந்தவப்புதல்வராக றபீஉனில் அவ்வல் பன்னிரெண்டாம் நாள் திங்கட்கிழமை அதிகாலை மக்கா நகரில் பிறந்து அறுபத்து மூன்றாண்டுகள் வாழ்ந்து இறையடி சேர்ந்தார்கள்.

இது அவர்களின் திருவுடல் தாயின் வயிற்றிலிருந்து வெளியான கணக்காகும். இதிலிருந்துதான் அவர்களின் வயது அறுப்பதுமூன்றெனக் கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், நபி (ஸல்) அவர்களின் எதார்த்தம் பற்றிப் பேசும் வலீமார்களும், ஞான மகான்களும் அவர்களின் திருவுடலுக்கு அறுபத்துமூன்று வயதென்பதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட அவர்களின் எதார்த்தமென்று சொல்லப்படுகின்ற அல்ஹகீகதுல் முஹம்மதிய்யாவுக்கு இத்தனை வயதென்று எவராலும் சொல்ல முடியாதென்று கூறியுள்ளாரகள்.

ஆரீபீன்களும், அவ்லியாக்களும் தமது இக்கூற்றுக்கு காட்டியுள்ள ஆதாரங்களும் விவரங்களும் அனந்தம். அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகிறேன். விரிவான விளக்கம் தேவையானோர் நான் வெளியிடவுள்ள “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்று நூலைப் பார்த்துக் கொள்ளவும்.

உலகில் மனுக்குலத்தில் முதல் வெளிப்பாடாக நபி ஆதம் (அலை) அவர்கள் வெளிப்பட்டார்கள்.

முதலில் மனிதனான நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் தங்களின் கண்களைத் திறந்து பார்த்த பொழுது அர்ஷின் தூனில் “லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ்” என்றெழுதப்பட்டிருந்தது கண்டு வியந்தவர்களாக “இறைவா! உண்ணுடைய பெயருடன் “முஹம்மத்” என்றொரு பெயரை இணைத்துள்ளாயே! அவர் யார்? என்று கேட்டார்கள்.

அதற்கு இறைவன் “அவர் உனது பிள்ளைகளில் ஒருவர்தான். அவர் கடைசிக்கட்டத்தில் வெளிவருவார் அவரின்ரேல் உன்னைக்கூடப் படைத்திருக்க மாட்டேன் என்று கூறினான்.

நபி (ஸல்) அவர்கள் தந்தைக்கு முன்னுள்ள தனயனாகவும், வித்துக்கு முன் முளைத்த மரமாகவும், கருவுக்கு முன்னுள்ள குருவாகவும் விளங்குகிறார்கள்.

நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு என்னிலடங்காத நவீன கொம்பியீட்டர் கருவிகளுக்கும் உட்படாத பல கோடியாண்டுகளுக்கும் முன் நபி (ஸல்) அவர்கள் படைக்கப்பட்டு விட்டார்கள்.

இதனால்தான் ஸூபிகளும், ஞானிகளும் நபி (ஸல்) அவர்களை "அபுர்நூஹ்" றூஹின் தந்தையென்றும், நபி ஆதம் (அலை) அவர்களை "அபுல் ஜிஸ்ம்" உடலில் தந்தையென்றும் வர்ணிக்கின்றார்கள். இக்கூற்றின் படி நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, நபி ஸல் அவர்கள் தான் றூஹின் தந்தையாவார்கள். நபி ஆதம் (அலை) அவர்கள் ஒரு வகையில் நபி (ஸல்) அவர்களுக்குத் தந்தையாகவும், இன்னோருவகையில் மகனாகவும் விளங்குகிறார்கள்.

முதல் மனிதனின் வயதைக் கட்டுப்படுத்தி விட்டாலும் கூட அவரின் பிள்ளைகளில் ஒருவரான நபி (ஸல்) அவர்களின் வயதைக் கட்டுப்படுத்திவிட முடியாது.

ஒரு சமயம் ஆதம் (அலை) அவர்கள் முதல் அனைத்து நபி மார்களுக்கும் "வஹீ" கொண்டு வந்த வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும், நபி ஸல் அவர்களுக்கும் ஒரு சம்பாஷனை நடந்தது.

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் உங்களின் வயது எத்தனை? என்றுகேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் "எனது வயது எனக்கே தெரியாது" எனினும், ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். அதிலிருந்து எனது வயதைக் கணித்துக் கொளுங்கள். "என்று சொன்னார்கள்.

"நாலாம் வானத்தில் ஒரு நட்சத்திரம் உண்டு. அது எழுபதாயிரம் வருடங்களுக்கொரு முறை மட்டும் வெளியாகும். அதை நான் எழுபத்திரண்டாயிரம் தடவை கண்டிருக்கின்றேன்" என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான்தான் அந்த நட்சத்திரம் என்று புன்னகையுடன் சொன்னார்கள்.

இந்த வரலாறு "தப்ஸீர் றூஹுல் பயான்" “அல் அஸ்றாறூர் றப்பானிய்யஹ்" முதலான நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றிலிருந்து நபி ஸல் அவர்களின் வயதைக் கணக்கெடுத்தால் "ஐனூற்று நாலுகோடி"யென்று கணக்கு வந்தாலும் கூட அது சரியான வயதுக் கணக்கைத்தராது. ஏனெனில் ஜிப்ரீல் அதைக்காண்பதற்கு எத்னையாண்டுகளுக்கு முன்னாலிருந்து அது இருந்து வருகிறதென்பது அவருக்கே தெரியாத விஷயமாகும்.

எந்தவோரு மனிதனாலும் மட்டுப்படுத்திச் சொல்ல முடியாத எத்தனையோ கோடி ஆண்டுகாலம் வல்ல அல்லாஹ் சிருஷ்டிகளெதுவு மின்றித் தனித்திருந்தான்.

அப்பொழு அல்லாஹ்வுக்கு தன்னிலே ஒரு "இஷ்க்" ஆசை ஏற்பட்டது. அவ்வாசை அவனில் சுயமாக ஏற்பட்டதேயன்றி இன்னொருவரால் வழக்கப்பட்டதல்ல.

அவன் தன்னை நோக்கி "நீ யார்? நீ அல்லாஹ் அல்லவா? உன்னில் எத்தனையோ வல்லமைகள் இருக்கின்றனவே! அவற்றை வெளிப்படுத்த வேண்டாமா? நீ மட்டும் இப்படியே இருந்து விட்டால் "றப்பு" எஜமான் என்றும் "அப்து" அடிமையென்றும், "காலிக்" படைத்தவனென்றும், "கல்கு" படைப்பு என்றும் எவ்வாறு உன் வல்லமைகள் வெளிவரும்? உன்னிலுள்ள வல்லமைகளை வெளிப்படுத்தி நீ அவர்களைக் கண்டு மகிழ்வதற்கு உனக்கு விருப்பமில்லையா? என்றுகேட்டான்.

இறுதியில் அல்லாஹ் எடுத்த முடிவு என்ன? தன்னிலேற்பட்ட ஆசையை வெளிப்படுத்த வேண்டு மென்பதுதான்.

அல்லாஹ் இப்படியோரு முடிவு எடுத்ததினால்தான், இதை எழுதும் நானும் இதை வாசிக்கும் நீயும் வெளிவந்தோம். இன்றேல் நீயுமில்லை,நானுமில்லை. உலகுமில்லை ஒன்றுமே இல்லை.

தன்னிலுள்ள வல்லமைகள் எண்ணிலடங்காதவையாயிருந்தும் அவற்றில் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களின் பேரொளியைத்தான் வெளிப்படுத்தினான். படைத்தான்.

ஏனெனில்; அவனில் புதையுண்டிருந்த எண்ணற்கரிய படைப்புகளில் நபி (ஸல்) அவர்களின் ஒளிதான் அவனுக்கு மிக விருப்பமான தாயிருந்தது. இதனால்த் தான் முதலில் அவர்களின் ஒளியை வெளிப்படுத்தினான். படைத்தான்.

இது பற்றிப் பின்வரும் ஹதீதுக்குத்ஸியில் அல்லாஹ் தெளிவாக விளக்கியுள்ளான்.

"குன்து கன்ஸன் மக்பிய்யன். பஅஹ்பப்து அன் உஃறப பகலக்துல் கல்க பfபீ அறபூனி"

நான் யாருக்கும் தெரியாத மறைந்த பொக்கிஷமாயிருந்தேன். அப்பொழுது நான் அறியப்பட வேண்டுமென்று விரும்பி சிருஷ்டிகளைப் படைத்தேன் – சிருஷ்டிகள் என்னைக் கோண்டே என்னை அறிந்தன.
-ஹதிதுக் குத்ஸி –
ஆதாரம் ஈகாளுல் ஹிமம் பீஷர்கில் ஹிகம்.

இந்த ஹதீதில் "பfபீ" என்று மூன்று அறபு எழுத்துக்களைக் கொண்டு ஒரு சொல் வந்துள்ளது. இச்சொல்லுக்கு "எனவே என்னைக்கொண்டு" என்ற அர்த்தம் வரும்.

இந்த அர்த்தப்படி என்னைக் கொண்டே என்னை அறிந்தனர் என்ற கருத்து வரும்.

இது ஒரு வகையில் சரியாதாக இருந்தாலும் "பfபீ"فبي என்ற சொல்லுக்கு தத்துவரீதியிலான இன்னோரு விளக்கமும் உண்டு. அதை இங்கு எழுதுகிறேன்.

"பfபீ" فبي என்ற சொல்லில் மூன்றெழுத்துக்கள் உள்ளன. அவை முறையே fபே((ف, bபே(ب), யே(ي) ஆகியன

இந்த மூன்று எழுத்துகளுக்கும் அறபு எண்கணித "அப்ஜத்" கணக்கின் படி கூட்டுத்தொகை 92 வரும். அதே போல் "முஹம்மத்” என்ற அறபுச் சொல்லிலுள்ள நான்கு எழுத்துக்களுக்கும் கூட்டுத்தொகை 92 வரும்.

எனவே, மேலே கூறிய "பfபீ" فبي என்ற சொல்லுக்கு முஹம்மதைக் கொண்டு என்னையறிந்தனர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

எனவே, "பfபீ" فبي என்ற சொல்லுக்கு என்னைக் கொண்டு என்னை அறிந்தனர்" என்று விளக்கம் சொல்வதை விட "முஹம்மதை கொண்டு என்னை அறிந்தனர். என்று விளக்கம் சொவது மிகச் சிறந்ததென்று நான் கருதுகிறேன்.

ஏனெனில்; அல்லாஹ் ஒருவன் இருக்கிறானென்றும், அவன் தேவையற்றவன் என்றும்,அவன் யாரையும் பெறவில்லையென்றும், அவனை யாரும் பெறவில்லை யென்றும், அவனுக்கு நிகராக யாரும் இல்லை யென்றும், இன்னுமவன் யார்? அவனுக்கும், சிருஷ்டிக்குமுள்ள தொடர்பு எத்தகையது? என்றும் அல்லாஹ் பற்றிய விளக்கங்களைக் கூறி அவனை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர்கள் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை.

இவ்வுண்மையை "ஸூறதுல் இக்லாஸ்" விளக்கமாகக் கூறுகிறது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் முதற்படைப்பாகவும், அவனை மக்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தவர்களாகவும் விளங்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வானம், பூமி, கடல், மலை, மனு, ஜின் மற்றுமுள்ள சகல படைப்புகளை விடவும், முந்தினவர்களென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

வானம், பூமி, கடல், மலை போன்றவற்றின் வயதை ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடிதாலும் கூட நபி (ஸல்) அவர்களின் வயதை எவராலும் கண்டுபிடிக்கமுடியாது. இதற்குக் காரணம் அவர்கள் முதல் சிருஷ்டியாக இருப்பதேயாகும்.

நபி ஸல் அவர்கள் தங்களுக்கும் முன்தோன்றிய நபிமார்களின் காலங்களிலும் இருந்துள்ளார்களென்பதற்குத் திருக்குர் ஆனிலிருந்து சில ஆதாரங்களை மட்டும் தருகிறேன்.

ஆதாரங்கள்

ஒன்று– அல்லாஹ் தஆலா ஆதம் அலை அவர்களைப் படைக்குமுன் அமரர்களிடம் ஒரு ​பேச்சுவார்த்தைநடத்தினான்.

அவர்களிடம்; " நான் பூமியில் ஒரு 'கலீபா' பிரதிநிதியை ஆக்கப்போகிறேன் "என்று கூறினான்.

அதற்கவர்கள்; "நாங்கள் உன் புகழ் கொண்டு உன்னைத் 'தஸ்பீஹ்' செய்தவர்களாயும், உன்னைத் தூய்மைப் படுத்தினவர்களாயும் இருக்கும் போது குழப்பத்தையுண்டு பண்ணி இரத்தங்களை ஓட்டக்கூடியவர்களையா பூமியில் ஆக்கப் போகிறாய்" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ் தஆலா; "உங்களுக்குத் தெரியாதவை யெல்லாம் எனக்குத் தெருயுமென்று கூறினான். நபியே! அந்த நேரத்தை நீங்கள் நினைத்துப்பாருங்கள்.
திருக்குர்ஆன்:02 – 03 
இந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் மனித இனத்தில் ஒருவன்கூடப் படைக்கப்பட்டிருக்கவில்லை. ஆதம் நபியும் இருக்கவில்லை. அண்ணல் நபியும் இருக்கவில்லை. அமரர்கள் மட்டுமே இருந்தனர்.

அல்லாஹ்வுக்கும் அமரர்களுக்கும் நடந்த அந்தச் சம்பவத்தை திருக்குர்ஆன் மூலம் நபியவர்களுக்குச் சொல்லிக் காட்டிய அல்லாஹ் "வஇத்கால றப்புக" என்ற வசனம் மூலம் நபியே அந்தச் சம்பவத்தை நினைத்துப்பாருங்கள். என்று கூறியுள்ளான்.

திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிய "முபஸ்ஸிரீன்"கள்"வஇத்கால" என்ற வசனத்துக்கு "வத்குர் இத்கால" அந்தச் சம்பவத்தை நினைத்துப் பாருங்கள். என்று விளக்கம் எளுதியுள்ளார்கள்.

ஒருவனிடம் நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பார் என்று சொல்வதாயின் அவன் நடந்த அச்சம்பவத்தின் போது இருந்திருக்கவேண்டும்.

ஒரு சம்பவத்தில் கலந்து கொள்ளாதவனிடமும், அச்சம்பவத்தின் போது ஆஜராகி இருக்காதவனிடமும் அதை நினைத்துப்பார் என்று சொல்ல முடியாது.

எனவே, இதிலிருந்து அச்சம்பவத்தின்போது அங்கு நபி (ஸல்) ஆஜராகியிருந்துள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.

அவர்கள் முதல் சிருஷ்டியாயிருப்பதால் அவர்களுக்குப் பிறகு படைக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கு நடந்த நடக்கின்ற சம்பவங்கள் அவர்களுக்குத் தெரியாமல் போக முடியாது.

நபி (ஸல்) அவர்களுக்கு எதார்த்தமுமில்லை; பதார்த்த முமில்லை யென்றும்; அவர்களின் வயது அறுபத்துமூன்றேயல்லாமல் வேறில்லையென்றும் தெருக்கூச்சலிடும் வஹ்ஹாபியர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

இவர்கள் சொல்வது போல் கி.பி. 570ல் நபி (ஸல்) அவர்கள் பிறந்திருந்தால் அதற்கு முன் நடைபெற்ற சம்பவம் அவர்களுக்கு எவ்வாறு தெரிய வந்தது? அதை நினைத்துப் பாருங்கள்ளென்றும் அல்லாஹ் அவர்களுக்குச் சொல்வதும் எவ்வாறு?

இரண்டு– ஆதம் நபி (அலை) அவர்களுக்கு "ஸூஜூது" செய்யுமாறு நாம் அமரர்களுக்குச் சொன்னோம். அவர்கள்அனைவரும் "ஸூஜூது" செய்தனர். "இப்லீஸ்" என்றவனைத் தவிர. அவன் பெருமையடித்து மறுத்து விட்டான். அதனால் அவன் காபிராகி விட்டான். நபியே! இந்த வரலாற்றை நினைத்துப் பாருங்கள்.
திருக்குர்ஆன்: 02-24

இச்சம்பவம் நிகழ்ந்து நேரத்தில் மனுக்குலத்தில்முதல் மனிதன் நபி ஆதம் (அலை) அவர்கள் மட்டும் தான் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களும் இருக்கவில்லை. வேறெந்த மனிதனும் இருக்கவில்லை.

இச்சம்பவத்தை திருக்குர்ஆன் வாயிலாக நபி (ஸல்) அவர்களுக்குச் சொல்லிக் காட்டிய அல்லாஹ், "நபியே! அச்சம்பவத்தை நினைத்துப் பாருங்களென்று கூறியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570ல் தான் பிறந்தார்கள்.அதற்குமுன் அவர்களுமிருக்கவில்லை. அவர்களின் ஒளியிருக்கவு மில்லையென்று கூறும் மூடர்கள் மேற்குறித்த திருமறை வசனங்கள் பற்றி நன்கு சிந்திக்க வேண்டும்.

குறித்த செம்பவம் நிகழ்ந்த நேரத்தில் நபி ஸல் அவர்கள் இருந்த தினால்தான் அதை நினைத்துப் பாருங்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

மூன்று– நபி மூஸா (அலை) அவர்கள் தங்களின் கூட்டத்தாரிடம் நீங்கள் காளை மாட்டை தெய்வமாக ஆக்கிக் கொண்டதினால், நீங்கள் உங்களுக்கு அநீதி செய்து கொண்டீர்கள். எனவே உங்களுடைய இறைவனளவில் மீளுங்கள்."தவ்பாச் செய்யுங்கள்" உங்கள் நப்ஸுகளைக் கொலைசெய்யுங்கள். உங்களின் இறைவனிடம் அதுதான் சிறந்தது. அவன் உங்களை மன்னித்துக் கொள்வான். அவ் இரக்கமுடையோனும், பாவத்தை மன்னிப்பவனுமாவான் என்று சொன்னதை நபியே நீங்கள் நினைத்துப்பாருங்கள்.

திருக்குர்ஆன்02–54

நபி மூஸா (அலை) அவர்கள் தூர்ஸீனா எனும் மலைக்கு அல்லாஹ்வுடன் வசனிப்பதற்குச் சென்ற பொழுத, தங்களின் தம்பி ஹாரூன் (அலை)அவர்களைத் தங்களின் இடதில் அமர்த்தி விட்டுப் போனார்கள்.

நாற்பது நாட்கள் கழித்து நபி மூஸா (அலை) அவர்கள் திரும்பி வந்த பொழுது, தங்களின் கூட்டத்தவர்கள் காளை மாட்டை வணங்கிக் கொண்டிருந்தது கண்டு வேதனை அடைந்தவர்களாக மேற்கண்டவாறு கூறினார்கள்.

இந்தச் சம்பவத்தை திருக்குர்ஆன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குச் சொல்லிக்காட்டிய அல்லாஹ் "நபியே! அச்சம்பவத்தை நினைத்துப் பாருங்களென்று கூறியுள்ளான்.

இதிலிருந்து இச்சம்பவத்தின் போதும் நபி (ஸல்) அவர்கள் இருந்திருக்கிறார்களென்பது தெளிவாகிறது.

இவை போன்ற இன்னும் பல ஆதாரங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. விரிவையஞ்சி அவற்றை விட்டு விட்டேன்.

அண்ணல் நபியின் வயது அறுபத்து மூனறல்ல என்ற தலைப்பு இதுவரை நான் கூறிவந்த ஆதாரங்கள் மூலமும், விவரங்கள் மூலமும் படைப்பு வெளியான காலத்திலிருந்தே நபி (ஸல்) அவர்கள் இருந்து வருகிறார்கள். அவர்களின் வயதை எவராலும் எத்தனையென்று மட்டிட்டுக் கூற இயலாது. அவர்கள் தாயின் வயிற்றிலிருநது கி.பி. 570ல் இவ்வுலகில் வெளியாகினாலும் கூட அவர்களுக்கு முன்தோன்றிய அனைத்து நபிமார்களுக்கும் நடந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் அவர்களும் பங்கு பற்றியுள்ளார்கள் என்பன போன்ற உண்மைகள் தெளிவாகிவிட்டன.

நபி (ஸல்) அவர்கள் கி.பி. 570பிறந்தவர்களேயன்றி அவர்களுக்கு எதார்த்தமுமில்லை, பதார்த்தமுமில்லை என்று அர்த்தமில்லாமல் கூறுவோர்களின் வலையில் மாட்டி ஈமானை இழந்து விட வேண்டாமென்று முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலே எழுதிக்காட்டிய வரலாறும் நபி(ஸல்) அவர்கள் நம்போன்ற மனிதனல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது.

மன்னர் நபியும் மறைவான செய்தியும்:

எழுதுவதற்கு எத்தனையோ தலைப்புக்கள் இருக்க இப்படியொரு தலைப்பை தெரிவு செய்தது வால் முறுக்குவோரின் வாலை ஒட்ட நறுக்குவதற்கேயாகும்.

ஏனெனில் இவர்கள் இஸ்லாம் அனுமதித்த எத்தனையோ விஷயங்களைக் கூடாதென்று சொல்லி வருவதுபோல் நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் "இல்முல்கைப்" எனப்படும்மறைவான செய்திகளும் மறைந்துள்ள விஷயங்களும் பற்றிய அறிவுகளும் இல்லையென்று சொல்லி வருகிறார்கள்.

இவர்கள் இவ்வாறு கூறும் கருத்துக்கள் உண்மைக்கு மாறான முழுப் பொய்யாக இருந்தாலும் கூட அவை காட்டுத் தீ பரவுவதுபோல் வெகு வேகமாக நாடெங்கும் பரவி விடுகிறது. இதனிமித்தம் பாமர மக்கள் மிக எளிதாக அத்தீயவர்களின் கருத்துக்களை நம்பி வழிகேட்டிலாகி விடுகின்றனர்.

இதற்குக் காரணம் இவர்களின் வெளிவேஷமேயன்றி வேறொன்றுமில்லை. தமது கருத்துக்களை மக்கள் நம்பிவிட வேண்டு மென்பதற்காக இவர்கள் கண்டுபிடித்துள்ள ஒரேயொரு ஆயுதம் வெளிவேஷம் ஒன்றுமட்டும்தான்.

ஒருவன் வெறும் வெங்காயமாக இருப்பான். அவனுக்கு ஆனாவும் தெருந்திருக்காது. அலிபும் தெருந்திருக்காது, எழுத வாசிக்கவும் தெருந்திருக்காது, அரசியலும் தெருந்திருக்காது, ஆன்மீகமும் தெருந்திருக்காது, குறைந்த பட்சம் தனது தாய் மொழியில் கூட பேசத் தெரிந்திருக்காது.

"அவாம்" எனும்பாமரனின் மன நிலைக்கும், படித்தவர்களின் மன நிலைக்கும், வித்தியாச முண்டு.படித்தவன், ஒருவனின் உடலைக் கொண்டோ, அல்லது அவனின் உடையைக் கொண்டோ, அவனின் அறிவைக் கவனிக்க மாட்டான். எனினும் அவனுடன் சில மணிநேரம் உரையாடுவது கொண்டும், அவனின் அறிவை அளந்து பார்ப்பது கொண்டும் அவனை எடை போடுவான். இது படித்தவர்களின் நிலை.

அவனின் அந்தரங்கம் புரியாத அப்பாவி அவாம்கள் அவனிடம் திருமறைக்கும், திரு நபியின் நிறைமொழிக்கும் விளக்கம் கேட்கத் தொடங்கி விடுவார்கள்.

ஆனால் தெரியா தென்றால் பட்டம் பறந்து விடுமென்றும், தனது வேடத்திற்கு மதிப்பில்லாமற் போய் விடுமென்று பயந்து தான் நினைத்தவாறெல்லாம் மார்க்கச் சட்டம் சொல்வதற்கும், திருக்குர்ஆன் விளக்கம் கொடுப்பதற்கும் துணிந்து விடுகிறான்.

இப்படியான விளையாட்டுக்களைத் தீனுடைய "கித்மத்" செய்பவர்களிடம் காணலாம்.

எனவே இத்தகையவரின் வஷப்பற்களை பிடிங்கியெறிந்து இவர்களின் வண்டவாளங்களை வையகத்தில் வெளிப்படுத்தி வைக்கும் நோக்கத்திலே தான் இதை எழுதினேன்.

இல்முல்கைப்

இத்தலைப்புக்கு முந்தின "அண்ணலின் வயது அறுபத்து மூன்றல்ல" என்ற தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் காலத்தில் இருந்தார்களென்றும், அதனால் அந்த நபிமார்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் அவர்களுக்குத் தெரியுமென்றும் எழுதியுள்ளேன்.

"இல்முல்கைப்" என்ற இத்தலைப்பில் நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் காலத்தில் இருக்கவில்லை யென்றும், அதனால் அவர்களுக்கு அந்த நபிமார்களுக்கு நடந்த சம்பவங்களை எல்லாம் "வஹி" மூலம் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று எழுதியுள்ளேன்

இவ்விரு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் போல் வாசகர்களுக்குத் தென்படும் என்று நான் எண்ணுகிறேன். அவர்களை தவறாகப் புரிந்து கொள்ளாமல் "அண்ணலின் வயது அறுபத்து மூன்றல்ல" என்ற தலைப்பில் நான் எழுதிய விஷயம் "அல் ஹகீகதுல் முஹம்மதிய்யஹ்"என்னும் நபி(ஸல்) அவர்களின் அகமியத்தையும், எதார்த்தத்தையும் கருதி எழுதிய தென்றும்"இல்முல் கைப்" என்ற தலைப்பில் எழுதிய விஷயம் நபி (ஸல்) அவர்கள் தாயின் வயிற்றிலிருந்துகி.பி. 570ல் பிறந்தார்கள் என்றதைக்கவனித்து எழுதிய தென்றும் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் அகமியத்தையும், எதார்த்தத்தையும் பொறுத்து அவர்கள் தங்களுக்கு முன் வாழ்ந்த நபிமார்களின் காலத்தில் இருந்து அவர்களுக்கு நடந்த சம்பவங்களெல்லாம் அறிந்தார்களென்றும், அவர்களின் திருவுடல் ஆமினாவின் வயிற்றிலிருந்து வெளியானதைப் பொறுத்து அவர்கள் அந்நேரம் இருக்கவில்லையென்றும, அதனால் "வஹீ" மூலம் அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்றும் கருத்துக்கொள்ளுதல் வேண்டும்.

அல்லாஹ் தவிர வேறு யாருக்கும் "இல்முல் கைப்" எனும் மறைவான செய்தியொன்றும் தெரியாதென்றும், ஒரு நபிக்கோ அல்லது ஒரு வலிக்கோ அது தெரியுமென்று சொல்வது "ஷிர்க்" இனைவைத்தலாகுமென்றும் வழிகேடர்களான வஹ்ஹாபிகளும், அவர்களின் வாடைபட்ட உலமாக்களும் கூறிவருகின்றனர்.

"இல்முல் கைப்" எனும்மறைவானசெய்திகள் பற்றிய அறிவு இருவகைப்படும். ஒன்று –"தாதீ" என்றும், மற்றது "அதாயீ" என்றும் சொல்லப்படும்.

"தாதீ" என்றால்அது அவனுக்கு இன்னொருவரால் வழங்கப்படாமல் அவனிலேயே சுயமாக உள்ள தனக்குத் தானான அறிவாகும். இதுதான் "தாதீ" என்றழைக்கப்படும். இவ்வகை அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதால் அவனின் சிருஷ்டிகளில் எந்த ஒரு சிருஷ்டிக்குமே இவ்வகை அறிவு இருக்காது. இருக்கவும் முடியாது. அவ்வாறிப்பது அசாத்தியமானதாகும்.

சிருஷ்டிகளுக்கு இல்முல்கைப் மறைவான செய்திகள் தெரியுமென்று நம்புவது "ஷிர்க்" இனைவைத்தலை ஏற்படுத்தாது. ஆனால் "தாதீ" என்ற சுயமான அறிவு உண்டென நம்புதல் "ஷிர்க்" எனும் இனைவைத்தலை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நம்பினவன் சந்தேகமின்றி "முஷ்ரிக்" இணைவைத்தவனாக விடுவான்.

ஏனெனில் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான அம்சங்களில் ஒன்று சிருஷ்டிகளுக்கு உண்டென்று நம்புதலானது பொதுவாக "ஷிர்க்" இணைவைத்தலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றேயாகும்.

"அதாயீ"என்றால் அல்லாஹ்வினால் ஒருவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக்குறிக்கும்.

நபிமார்களினதும், றஸூல்மார்களினதும் வலிமார்களினதும் அறிவுகள்அவரவர்களின் தராதரத்தைப் பொறுத்துச் சக்தி கூடியதாகவும் குறைந்ததாகவுமிருந்தாலும் அவர்கள் அனைவரின் அறிவும் "அதாயீ" என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.அதாவது அல்லாஹ்வினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுகளேயன்றி அவர்களின் சுயமாக உண்டான "தாதீ" அல்ல.

நபிகட்கரசர் முஹம்மத் (ஸல்) அவர்களாயிருந்தாலும், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (றழி) அவர்களாயிருந்தாலும், ஞானிகட்கரசர் இப்னு அறபியாக இருந்தாலும், "முபஸ்ஸிரீன்" களின் தலைவர் இப்னு அப்பாஸாக இருந்தாலும் அவர்கள் அனைவரின் அறிவும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட "அதாயீ" யான அறிவே யன்றி அவர்களில் சுயமாக உண்டான "தாதீ" யான அறிவல்ல.

அல்லாஹ் தவிர வேறொருவருக்கும் "இல்முல்கைப்" என்னும் மறைவான செய்திகள் பற்றிய அறிவு இருக்கின்தென்று நம்புதல் "ஷிர்க்" இணைவைத்தல் என்ற​ வழிகேடர்கள் சொல்வதற்குக் காரணம் மேலே நான் விவரித்துக் கூறியுள்ள "தாதீ - அதாயீ" எனும் இருவகை அறிவுகள் பற்றிய விளக்கம் அவர்களுக்கு இல்லாமலிருப்பதேயாகும்.

நபிமார்களும், வலீமார்களும் "இல்முல்கைப்" எனும் மறைவான செய்திகள் பற்றிய அறிவுள்ளவர்களென்று ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடையோர் கூறுவதாலும், நம்புவதாலும் நபிமார்களுக்கும் அவ்லியாக்களுக்கும் "தாதீ" எனும் சுயமான அறிவு உண்டென்ற கருத்து ஒருபோதும் வந்துவிடாது. மேலும் இவ்வாறு கூறுவதாலும், நம்புவதாலும் வழிகேடர்கள்சொல்வது போல் "ஷிர்க்" எனும் நிலையும் உருவாகிவிடமாட்டாது.

ஏனெனில் "ஸுன்னத்வல்ஜமாஅத்" கொள்கையுடையோரில் எவருமே நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் "தாதீ" சுயமான அறிவு உண்டென்று சொன்னதும் கிடையாது, நம்பியதும் கிடையாது.

மறைவான செய்திகளை நபிமார்களும் அறிவார்களென்ற விபரத்தைப் பின்னால் எழுதுகிறேன்.

மறைவான செய்தியை அல்லாஹ் அறிவதற்கும், நபிமார்கள், வலிமார்கள் அறிவதற்குமிடையில் வேறுபாடு உண்டு. அல்லாஹ் ஒரு செய்தியை சுயமாக அறிந்து கொள்வான். அதாவது அது பற்றிய அறிவு அவனில் சுயமானதாகவே இருக்கும். அது அவனுக்கு இன்னொருவரால் வழங்கப்பட்டதாக இருக்காது.

ஆனால் நபிமார்களும், வலிமார்களும் அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுப்பது கொண்டே மறைவான செய்திகளை அறிந்து மக்களுக்குச் சொல்கிறார்கள். அவர்கள் "அதாயீ" என்ற அடிப்படையில் மறைவான செய்திகளை அறிகிறார்களே யன்றி அல்லாஹ் அறிவதைப் போல் "தாதீ" என்ற வகையிலில்லை.

"அதாயீ" என்ற அடிப்படையில் வலிமார்கள் மறைவான செய்திகளை அறிவார்கள் என்பதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளன. விரிவையஞ்சி விட்டுவிட்டேன். மேலதிக விபரம் தேவையானோர் எனது "வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்" என்ற நூலைப் பார்த்துக் கொள்ளவும், எனினும் சுருக்கமாக இங்கு எழுதுகிறேன்.

01. அது மறைவான செய்திகளில் உள்ளது. அதை நாங்கள் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கிறோம். 
திருக்குர்ஆன் – 03 – 44 

அல்லாஹ் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, நபி ஸகரிய்யா நபி யஹ்யா, நபி ஈஸா மற்றும் மர்யம் (அலை) போன்றோரின் செய்திகளைக் கூறிக்காட்டும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளான். 

மேற்கூறப்பட்ட நபிமார்களும், வலிய்யத் மர்யம் அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு நடந்த சம்பவங்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. அவையாவும் நபி (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை மறைவான செய்தியாகும்.

மறைவான செய்திகளையெல்லாம் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு "வஹி" மூலம் அறிவித்துக் கொடுத்தான். அவர்கள் அறிந்து கொண்டு மக்களுக்குச் சொல்லிக் காட்டினார்கள். 

மறைவான செய்திகளை யார் அறிவதாயினும், இந்த வகையில்தான் அறியமுடியுமேயன்றி அல்லாஹ் சுயமாக அறிந்து கொள்வது போல் "தாதீ"சுயமாக அறிந்து கொள்ள முடியாது. 

02. "அவை மறைவான செய்திகளில் நின்றுமுள்ளவை. அவற்றை நாங்கள் உங்களுக்கு வஹி மூலம் அறிவிக்கின்றோம். நீங்களும், உங்கள் கூட்டத்தவர்களும் இதற்கு முன்னால் அந்தச் செய்தியை அறிய வில்லை. 

திருக்குர்ஆன் –11-49 

நபி நூஹ் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ளவர்கள். அவர்களுக்கு நடந்த சம்பவங்களெதுவும் இவர்களுக்குத் தெரியாது. 

இந்த மறைவான செய்திகளை "வஹி" மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டு மக்களுக்குப் போதித்தார்கள். 

03.அல்லாஹ் இவ்வேதத்தையும் ஞானத்தையும் உம்மீது அருட்செய்து நீ அறியாதிருந்தவற்றையும் உமக்கு கற்பித்திருக்கின்றான். 
திருக்குர்ஆன் –04 – 113 

மேற்கண்ட திருவசனங்கள் போல் இத் திருவசனத்தின் மூலமும் நபி (ஸல்) அவர்கள் அறியாமலிருந்த விஷயங்களையெல்லாம் அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தான் என்பதும், நபி (ஸல்) அவர்கள் மறைவான செய்திகளை அறிந்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது. 

04.அவ்விருவரும் அவ்விடத்தில் நம் அடியாரில் ஒருவரைக் கண்டார்கள். அவருக்கும் நம்முடைய சொந்தமான அருளையளித்து நம்முடைய சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்தோம். 

திருக்குர்ஆன் –18 – 65 

நபி மூஸா (அலை) அவர்களும், அவர்களுடன் சென்ற வாலிபரும் கழிர் (அலை) அவர்களைக் கண்டார்கள். 

அந்த கழிர் (அலை) அவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் மேற்குறிப்பிட்ட திருவசனத்தில் பிரஸ்தாபித்துள்ளான். அவருக்கே நம்முடைய சொந்தமான அருளையளித்து நம்முடைய சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருப்பதாக அல்லாஹ் இத்திருவசனத்தின் மூலம் கூறியுள்ளான். 

"வஅல்லம்னாஹு மில்லதுன்னா இல்மா" 

இந்த வசனத்திற்கு நம்முடைய சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்குக் கற்பித்திருந்தோம்.என்று சுருக்கமாகப் பொருள் கூறிக்கொண்டாலும் இந்த வசனம் "இல்முல்லதுன்னீ "என்றும் "இல்முல் பாதின்" என்றும் சொல்கின்ற அந்தரங்கமான அறிவைக் குறிக்கும். 

இந்த அறிவுதான் "இல்முல்கைப்" என்னும் மறைவான செய்திகள் பற்றிய அறிவாகும். 

இதிலிருந்து கழிர் (அலை) அவர்களும் மறைவான செய்திகளை அறிந்திருந்தார்கள் என்பது தெளிவாகும். 

கழிர் (அலை) அவர்கள் ஒரு நபியா? அல்லது வலியா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் பலம் வாய்ந்த ஆதரங்களின் படி அவர்கள் ஒரு வலியேயன்றி நபியல்ல. 

இந்தக்கருத்தின் படி மறைவான செய்திகளை நபிமார்கள், றஸூல்மார்கள், அறிந்தது போல் வலிமார்களும் அறிவார்களென்பது நிரூபனமாகிறது. 

05. வானத்திலோ, பூமியிலோ மறைவாக இருகும் எதுவுமே லவ்ஹூல் மஹ்பூழ் எனும் அவனுடைய தெளிவான குறிப்புப் புத்தக்கத்தில் பதியப்படாமலில்லை. 
திருக்குர்ஆன் –27 – 75 

இத்திருவசனம் எந்த வகையில் நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியுமென்பதை காட்டுகிறது?இது பற்றிச் சுருக்கமாக இங்கு எழுதுகிறேன். 

"அல்குர்ஆன்" என்பது "லவ்ஹுல் மஹ்பூல்" எனும் அவனின் தெளிவான குறிப்புப் புத்தக்கத்தில்பதியப்பட்டிருந்ததேயாகும். 

இத்திருவசனத்தில் வந்துள்ள "கிதாபுன் முபீன்" என்பது"லவ்ஹுல் மஹ்பூல்" எனும் அல்லாஹ்வின் தெளிவான குறிப்புப் புத்தக்கத்தைக் குறிக்கின்றது என்று வேறுசிலரும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். 

அது அவ்விரண்டில் எதைக் குறித்தாலும், அவ்விரண்ட்டிலுமுள்ள அனைத்து விஷயங்களையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்தவர்கள்தான். 

"கிதாபுன் முபீன்" என்று திருக்குர்ஆன்தான் சுட்டிக் காட்டப்பட்டுள்ள தென்று வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் அது வானம், பூமி இரண்டிலுமுள்ள மறைவான விஷயங்க​னைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. சுருங்கக் கூறினால் அதில் இல்லாதது ஒன்றுமில்லையென்றே சொல்ல வேண்டும். 

இத்தகைய சம்பூரணமான வேதம் அருளப்பட்ட நபி அவ்வேதத்திலுல்ல சகல விஷயங்ளையும் உள்ளடக்கிய ஒரு வேதமாயிருந்தால் அந்த வேதம் அருளப்பட்ட நபியும் சகல விஷயங்களையும் அறிந்தவராகத் தான் இருப்பார். 

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வானம், பூமி இரண்டிலுமுள்ள மறைவான செய்திகளையெல்லாம் அறிந்தவர்களென்பது தெளிவாகி விட்டது. 

"கிதாபுன் முபீன்" என்று"லவ்ஹுல் மஹ்பூல்" தான்சுட்டிக்காட்டப்பட்டுள்ள தென்று வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் அதிலிருப்பதெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு தெரியும்? என்ற கேள்வி வரும். 

இந்தக் கேள்விக்கு விடை காண்பதாயின்? ஞானிகள் கூறும் தத்துவத்தின் பக்கம் நமது சிந்தனையத் திருப்பவேண்டும். 

இத்தத்துவம்இறஞானக்கோட்டைக்குள்பிரவேசித்தவர்களுக்கும், நபி (ஸல்) அவர்களின்எதார்த்தத்தைப்புரியாதவர்களுக்கும்பெரியதோர்குழப்பத்தை ஏற்படுத்தி விடும். எனவே விரிக்காமல் சுருக்கமாய்ச் சொல்லிவிடுகிறேன். 

நபி(ஸல்)அவர்களின்அறிவு"லவ்ஹுல் மஹ்பூழில்"இருப்பவற்றில் நின்றுமுள்ளதா? அல்லது"லவ்ஹுல் மஹ்பூழில்"இருப்பதெல்லாம் நபி (ஸல்) அவர்களின் அறிவில் நின்றுமுள்ளதா? 

நபி(ஸல்)அவர்களின்அறிவு"லவ்ஹுல் மஹ்பூல்"இருப்பவற்றில் நின்றுமுள்ளதென்று வைத்துக்கொண்டால் நபி (ஸல்) அவர்களின் அறிவில் இல்லாத விஷயங்கள் அதில் இருக்கின்றன என்றும், நபி (ஸல்) அவர்களைவிட அது சிறந்ததென்று கருத்தும் வந்து விடும். 

நபி (ஸல்) அவர்கள் மனித இனத்தில் மட்டுமன்றிப் பொதுவாக அல்லாஹ்வின் அனைத்து சிருஷ்டிகளிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பதினாலும், "லவ்ஹுல் மஹ்பூல்" என்பதும் அவனின் சிருஷ்டிகளில் ஒன்றாக இருப்பதினாலும் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களை விட அது சிறந்ததாக இருக்க முடியாது. 

எனவே நபி (ஸல்) அவர்களின் அறிவு அதிலுல்லவற்றில் நின்றுமுள்ளதென்றும் கூறுதல் பொருத்த மற்றது. 

ஆகவே "லவ்ஹுல் மஹ்பூழில்" இருப்பதெல்லாம்நபி (ஸல்) அவர்களின் அறிவில் நின்றுமுள்ளவையென்றும் கொள்வதுதான் பொருத்தமானதும், எதார்த்தத்துக்கு ஏற்றதுமாகும். 

புர்தா காப்பியத்தின் தந்தை இமாம் பூஸீரீ (றஹ்) அவர்கள் தங்களின்"கஸீத்துல் புர்தா" வில் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளார்கள். 

“பயின்ன மின்ஜூதிகத் துன்யா வளர்றதஹா வமின் உலூமிக இல்முல்லவ்ஹி வல்கலமீ “ 

"இம்மையும், அதன்சக்களத்தியானமறுமையும்உங்களின்சன்மானங்கள்தான். இன்னும் "லவ்ஹு" எனும்பலகையின்அறிவும், கலம்எனும்எழுதுகோலின்அறிவும்உங்களின்அறிவில்நின்றுமுள்ளவைதான் " என்று இந்தக் கருத்தை உள்ளடக்கி, 

"இம்மை மறுமை நுத்தம் இருங்கொடையில் வந்தவையே செம்மையி லௌஹு கலம் சேர் அறிவும் நீர் அறிவீர். 

என்றுமரைக்காயர்பாடியுள்ளார். 

இந்த விபரங்களிலிருந்து "லவ்ஹுல் மஹ்பூல்" எனும் ஏட்டின் அறிவு நபி (ஸல்) அவர்களின் அறிவில் ஒரு பகுதி என்பதும், அதிலுள்ளவை யனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியுமென்பது தெளிவாகின்றது. 

"இல்முல்கைப்" மறைவானசெய்தி என்ற தலைப்பில் இதுவரை திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் நான் கூறிவந்த விவரங்களிலிருந்து நபிமார்களும், வலிமார்களும் மறைவான செய்திகளை அறிவார்கள் என்ற உண்மை வெளியாகி விட்டது. 

இதுவரை "இல்முல்கைப்" மறைவானவிஷயங்களை நபிமார்களும், வலிமார்களும் அறிவார்கள் என்பதற்கு திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஆதாரமாகக் கூறினேன். இனி நபி (ஸல்) அவர்களின் ஹதீதுலிருந்து ஒன்றை மட்டும் இங்கு எழுதுகிறேன். 

"எனது இறைவனை நான் கண்டேன். அப்பொழுது 'அமரர்கள் என்ன விஷயத்தில் தர்க்கம் செய்து கொள்கிறார்கள்' என்று அவன் என்னிடம் கேட்டான். அதற்கு நான் “அதுபற்றி நீதான் நன்கறிந்தவன்” என்றுசொன்னேன். அப்பொழுது அல்லாஹ் தனது கையை இரு தோட்புயங்களுக்கிடையில் வைத்தான். அந்நேரம் அவனின் கையுடைய குளிரை எனது இரண்டு மார்புகளுக்கிடையில் நான் பெற்றுக் கொண்டேன். அதோடு வானங்களில் உள்ளவற்றினதும், பூமியில் உள்ளவற்றினதும் அறிவையெல்லாம் நான் அறிந்து கொண்டேன். என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு "வகதாலிகநுரீ இப்றாஹீம் மலகூதஸ்ஸமாவாதி வல்அர்ளி வலியகூனமினல் மூகினீன்" என்ற திருவசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். 

ஆதாரம்: மிஷ்காத், துர்முதி, தாரமீ 
அறிவிப்பு: அப்துர் றஹ்மான் பின் ஆயிஷ்றழி 

திருவசனத்தின்பொருள்:"நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் "யகீன்" நம்பிக்கையுள்ளவர்களில் ஆவதற்காக அவ்வாறே அவர்களுக்கு வானங்களினதும், பூமியினதும் "மலகூத்தை" நாங்கள் காட்டுவோம். 

மேலே எழுதிய நபி மொழி மிக அழகான கருத்துக்களையும், அதியுயர்ந்த தத்துவங்களையும் உள்ளடக்கி நிற்கிறது. 

இவ்விஷயங்கள் "இல்முல்இர்பான்" எனும்இறைஞானகலையுடன் தொடர்புள்ள விஷயங்களாயிருப்பதால் இதில் அவற்றை விளக்கமாக எழுத விரும்பவில்லை. மேலே குறித்த ஹதீது மிஷ்காத், துர்முதி, தாரமீமுதலான ஹதீதுக் கிரந்தங்களிலும் வந்துள்ளது. 

எனினும் மேலே குறித்த ஹதீதிலிருந்து நான் எழுத வருகின்ற தலைப்புக்குப் பொருத்தமான கருத்துக்களை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 

வானங்களில் உள்ளவற்றினதும், பூமியில் உள்ளவற்றினதும் அறிவை அறிந்து கொண்டேனென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் அவர்களுக்கு எல்லாம் தெரியுமென்பது சந்தேகமின்றித் தெளிவாகி விட்டது. 

இதே போன்று இன்னுமொரு ஹதீது வருகிறது. 

அதில்: "அலிம்து இல்ம மாபிஸ்ஸமாவாதி, வல் அர்ளி" 

"வானங்களில் உள்ளவற்றினதும், பூமியில் உள்ளவற்றினதும் அறிவை அறிந்து கொண்டேன்" 

என்ற வசனத்திற்கு பதிலாக 

"அலிம்து இல்மல் அவ்வலீன வல் ஆகிரீன்" முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரின் அறிவையும் நான் அறிந்து கொண்டேன்." என்றுவந்துள்ளது. 

நபிமார்களுக்கும், வலிமார்களுக்கும் மறைவான செய்தி யொன்றும் தெரியாதென்று கூறிவருகின்றவர்களும் மேலே எழுதிக்காட்டிய விஷயங்களை "இக்லாஸ்"கலப்பற்ற மனதுடன் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். 

இந்தக் ஹதீதை ஆதாரமாகக் கொண்டு.... 

" நபி (ஸல்) அவர்களுக்கு ஏழு வானங்களில் உள்ளவை பற்றிய அறிவும், வானங்களுக்கு மேலுள்ளவை பற்றிய அறிவும், பூமிக்கு கீழுள்ளவை பற்றிய அறிவும் உண்டு என சட்டமேதை அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்." 
ஆதாரம்: மிஷ்காத் 

"ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவுரை பகர்ந்து கொண்டிருந்த பொழுது சிருஷ்டியின் உற்பத்தியிலிருந்து சுவர்க்கவாதிகள் சுவர்க்கத்திலும், நரகவாதிகள் நரகத்திலும் நுழைவது வரையிலான சகல விஷயங்களையும் கூறிக்காட்டினார்கள். அவற்றை பாடமிட்டவர்கள் பாடமிட்டுக் கொண்டார்கள். ஏனையோர் மறந்து விட்டனர் என கலீபா உமர் (றழி) அவர்கள் கூறினார்கள். 

ஆதாரம்:புஹாரி 

இந்த ஹதீதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் வெளிரங்கமான, உள்ளரங்கமான சகல அறிவுகளும் பெற்றிருந்தார்களென்பது தெளிவாகி விட்டது. 

நபி (ஸல்) அவர்களக்கு மறைவான செய்திகள் தெரியுமென்பதற்கு ஆதாரமான ஹதீதுக்கு அநேக முள்ளன. 

நபி புகழ் கூறும் ஸலவாத் 

நபி ஸல் அவர்கள் மீது "ஸலவாத்" சொல்வது தொடர்பாக திருக்குர்ஆன் வசனங்களும், அநேக ஹதீதுகளும் வந்துள்ளன. அவற்றில் சிலதையும், "ஸலவாத்" உணர்த்தும் நபியின் அகமியத்தையும் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன். நான் இப்படியொரு தலைப்பில் எழுதுவதற்கும் வழிகேடர்களின் விஷமப் பிரச்சாரமே காரணமாகும். 

அல்லாஹ்வும், அவனின்அமரர்களும்நபி(ஸல்)அவர்கள்மீது"ஸலவாத்" சொல்கிறார்கள். விசுவாசிகளே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள். இன்னும் ஸலாமும் சொல்லுங்கள். 
திருக்குர்ஆன்: 33 : 56 

"ஒருவன் என்மீது ஒருதரம் "ஸலவாத் சொல்வானாயின் அல்லாஹ் அவன்மீது பத்துத்தரம் "ஸலவாத்" சொல்கிறான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம்: முஸ்லிம் 
அறிவிப்பு: அபூஹுறைறா (றழி) 

ஒருவன் என்மீது ஒரு முறை "ஸலவாத்" சொல்வானாயின் அல்லாஹ் அவன்மீது பத்துத்தரம் "ஸலவாத்" சொல்கிறான். மேலும் அவனின் பத்துப் பாவங்கள் மன்னிக்கப்பட்டு பத்துப் பதவிகளும் அவனுக்கு உய்ர்த்தப்படு மென்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். 
ஆதாரம்: நஸயீ 
அறிவிப்பு:அனஸ் (றழி) 

"மறுமை நாளில் மனிதர்களில் எனக்கு மிக விருப்பமானவன் அவர்களில் என்மீது அதிகமாக ஸலவாத் சொல்பவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
ஆதாரம்:துர்முதி 
அறிவிப்பு: இப்னு மஸ்ஊத் (றழி) 

நான் மேலே எழுதிக்காட்டிய திருக்குர்ஆன் வசனமும், நாயக வாக்கியங்களும் நபி (ஸல்) அவர்கள் மீது "ஸலவாத்" சொல்வதிலுள்ள மகிமையை எடுத்துக்காட்டுகின்றன். 

திருக்குர்ஆன் வசனத்தில் "ஸலவாத்தும் ஸலாமும்"சேர்த்து சொல்லப் பட்டிருப்பதால், "ஸலவாத்" சொல்பவர்கள் ஸலாமும் சேர்த்துச் சொல்லுதல் வேண்டும். ஸலாமின்றி ஸலவாத் மட்டும் சொல்வதும், ஸலவாத் இன்றி ஸலாம் மட்டும் சொல்வதும் "மக்றூஹ்" வெறுக்கப்பட்ட விஷயமென்று சட்டக்கலை மேதைகள் கூறுகிறார்கள். 

ஒருவன் குறைந்த பட்சம் "அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் அலா ஸெய்யிதினா முஹம்மதின் வஅலா ஆலி ஸெய்யிதினாமுஹம்மத்" என்று சொல்வானாயின் இரண்டையும் சேர்த்துச் சொன்னவனாகிவிடுவான். 

ஸலவாத் சொல்வது எவ்வாறு? 

திருக்குர்ஆனின் "ஸல்லூ அலைஹிவ வஸல்லிமூ" அவர்கள்மீது நீங்கள் ஸலவாத்தும் ஸலாமும் சொல்லுங்கள் என்ற வசனத்தின்படியும் அதே போல் ஹதீதுகளில் வந்துள்ள வசனத்தின்படியும் நபி (ஸல்) அவர்கள் மீது "ஸலவாத்","ஸலாம்"சொல்லும்ஒருவன் "உஸல்லீ வஉஸல்லிமு அலன் நபிய்யீ" நாயகத்தின் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் சொல்கிறேன். என்றுதான் சொல்லவேண்டுமேயல்லாமல் "அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம்" என்று சொல்லுதல் கூடாது. 

ஏனெனில், "அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம்" என்ற சொற்கள் அல்லாஹ்வை விளித்துச் சொல்லப்படுகின்ற சொற்களாகும். 

எனவே, "ஸலவாத்தும் ஸலாமும்"சொல்லுங்கள்என்றுமக்களைப் பணித்தஅல்லாஹ்வை விளித்து நீயே அவர்கள் மீது "ஸலவாத்தும், ஸலாமும்" சொல்என்று சொல்வதில் நபி (ஸல்) அவர்களின் மகத்துவம் மறைந்துள்ளது. 

அதெவ்வாறெனில் நபி (ஸல்) அவர்கள் மீது"ஸலவாத்தும் ஸலாம்" சொல்வதற்குத்தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். அவனின் சிருஷ்டிகளில் எந்த ஒரு சிருஷ்டியும் அதற்குத் தகுதியுடையதல்ல. இதனால்தான் நாம் "ஸலவாத்தும் ஸலாமும்"சொல்லாமல் நீயே அவர்கள் மீது "ஸலவாத்தும் ஸலாமும்"சொல்என்று அப்பாரிய பணியை அதற்குத் தகுதியான அல்லாஹ் விடம் ஒப்படைத்து விடுகிறோம். நபி(ஸல்) அவர்களின் அகமியத்தை வெளிப்படுத்தும் “ஸலவாத்” இன்னநேரம்தான்சொல்வேண்டும் இன்நேரம்சொல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாததாகும். 

மலசல கூடங்கள் போன்ற அசுத்தமான இடங்கள் மட்டும்தான் அதற்குத் தடைசெய்யப்பட்ட இடங்களாகும். 

ஒரு நிகழ்ச்சியை "கிறாஅத்" திருக்குர்ஆன் வசனத்தை ஓதித் துவங்குவது போன்றும், நபி (ஸல்) அவர்கள் மீது "ஸலவாத்" சொல்லி முடிப்பது போன்றும், நபி (ஸல்) அவர்கள் மீது "ஸலவாத்" சொல்லியும் துவங்க முடியும். 

இது போல் 'பாங்கு' சொல்வதற்கு முன்னாலும் 'ஸலவாத்'சொல்ல முடியும். அதன் பின்னாலும் 'ஸலவாத்'சொல்ல முடியும். அது மார்க்கத்தில் விலக்கப்பட்ட காரியமில்லை. அது விலக்கு என்பதற்கு இமாம்களால் எழுதப்பட்ட எந்தவொரு நூலிலும் ஆதாரம் இல்லை. அது நல்ல காரியமே அன்றி பாவமான காரியமில்லை. அது பாவமான காரியமென்று மூளையுள்ள எவரும்சொல்லமாட்டார்கள். இதால்தான் தொன்று தொட்டு நம் நாட்டுப் பள்ளிவாயல்களில் பாங்கு சொல்வதற்கு முன் ஸலவாத் சொல்லி வருகிறார்கள். 

ஆனால் பாங்கு சொலடவதற்கு முன் 'ஸலவாத்'சொல்வதைவழிகேடர் மட்டும்தான் அனாச்சாரமென்றும் கருதுகிறார்கள். இதனால்தான் பல்லாண்டுகலாக "பாங்கு" சொல்வதற்கு 'ஸலவாத்'சொல்லப்பட்டு வந்த பள்ளிவாயல்களில் இன்று அதை தடை செய்து விட்டார்கள். 

வஹ்ஹாபிஸத்தின் தந்தை நஜ்தி ஸாஹிபு தனது காலத்தில் பாங்கு சொல்வதற்கு முன் 'ஸலவாத்'சொன்ன ஒரு முஅத்தினைக் கொன்றான் என்ற செய்தியை ' இமாம் ஸெய்னி தஹ்லான் (றஹ்)அவர்கள் தங்களின் பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். 

ஸலவாத்தின் மகிமையும், சங்கை நபியின் அகமியமும் புரியாத வஹ்ஹாபிகளின் வலையில் விழுந்து விடாமல் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.!

(முற்றிற்று).

==**==**==**==**==**==**==